SHARE

வவுனியா திருவாற்குளம்  பகுதியில் அமைக்கப்பட்டுள்ள கோபுரம், 5ஜி கோபுரம் என உறுதிப்படுத்தப்பட்டால், அக்கோபுரம் உடனடியாக அங்கிருந்து அகற்றப்படுமென வவுனியா நகரசபை உறுப்பினர் சு.காண்டீபன் தெரிவித்தார்.

வவுனியா நகரசபைக்குட்பட்ட நகர்ப்பகுதிகளான பண்டாரிக்குளம், திருநாவற்குளம் ஆகிய பகுதிகளில் 5ஜி கோபுரம் அமைக்கப்பட்டுள்ளது.

இதனால் அப்பகுதியிலுள்ள பொதுமக்கள் மற்றும் பாடசாலை செல்லும் மாணவர்கள் விளையாட்டு மைதானத்தைச் சூழவுள்ள குடும்பங்களுக்கு பெரும் பாதிப்புக்கள் ஏற்பட வாய்ப்புக்கள் அதிகளவில் காணப்படுவதாக மக்கள் தெரிவிக்கின்றனர்.

5ஜி கோபுர வலையமைப்பினால் உடல், உள ரீதியான பாதிப்புக்கள் ஏற்படவாய்ப்புக்கள் அதிகளவில் காணப்படுவதாக ஆய்வுகளிலிருந்து தெரியவந்துள்ளதென்றும் இந்நிலையில் தமது பகுதிகளில் அமைக்கப்பட்டுள்ள கோபுரம் மக்களுக்கு ஆபத்தை ஏற்படுத்தும் என்றும் இதனை அகற்றிவிடுமாறும் அப்பகுதியிலுள்ள மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

இவ்விடயங்கள் குறித்து வவுனியா நகரசபை உறுப்பினர் சு.காண்டீபனிடம் கேட்டபோதே திருவாற்குளம் விளையாட்டு மைதானம் பகுதியில் அமைக்கப்பட்டுள்ள கோபுரம் தொலைத்தொடர்பு ஒழுங்குபடுத்தும் ஆணைக்குழுவினால் 5ஜி கோபுரம் என்று உறுதிப்படுத்தப்பட்டு ஆவணம் வழங்கும் பட்சத்தில் அக்கோபுரம் உடனடியாக அங்கிருந்து அகற்றப்படும் என தெரிவித்தார்.

இதேவேளை பண்டாரிக்குளம் பகுதியில் அமைக்கப்பட்டுள்ள 5ஜி கோபுரம் குறித்து நகரசபை உறுப்பினர் கே.சுமந்திரனிடம் கேட்டபோது அவ்விடத்தில் அமைக்கப்பட்டுள்ள கோபுரத்தினை அகற்றுவதற்குரிய நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருவதாக தெரிவித்தார்.

Print Friendly, PDF & Email