SHARE

மாவட்ட ஒருங்கிணைப்பாளர் கனகரஞ்சனி யோகதாசா

காணாமல்போனோர் அலுவலகத்தின் தவிசாளரிடம் காணாமல்போன ஐந்துபேர் குறித்த தகவல்களையும், ஆதாரங்களையும் கையளித்திருந்தோம். அவர்களுக்கு என்ன நேர்ந்தது என்பதைக் கண்டறிந்து கூறினால் மாத்திரமே காணாமல்போனோர் அலுவலகத்தினால் பிராந்திய அலுவலகங்கள் திறக்கப்படுவதை ஏற்றுக்கொள்ள முடியும். 

அவ்வாறன்றி வெறுமனே காலத்தைக் கடத்தும் வகையில் இவ்வாறு அலுவலகங்கள் திறக்கப்படுவதைக் கடுமையாகக் கண்டிக்கிறோம் என்று காணாமல்போனோர் உறவுகளின் அமையத்தின் வவுனியா மாவட்ட ஒருங்கிணைப்பாளர் கனகரஞ்சனி யோகதாசா தெரிவித்தார்.

காணாமல்போன எமது உறவுகளைத்தேடி நாங்கள் தொடர்ச்சியாகப் போராடிவரும் நிலையில் எமக்கு இதுவரை எவ்வித தீர்வும் பெற்றுத்தரப்படவில்லை. இந்நிலையில் எதிர்வரும் 30 ஆம் திகதி அனைவரினதும், குறிப்பாக சர்வதேசத்தின் கவனத்தை ஈர்க்கும் வகையில் மாபெரும் ஆர்ப்பாட்டமொன்றை வடமாகாணத்தின் வவுனியாவிலும், கிழக்கு மாகாணத்தின் அம்பாறையிலும் நடத்தவிருக்கிறோம். இப்போராட்டத்தில் எவ்வித பேதங்களுமின்றி அனைவரும் எமக்கு ஆதரவு வழங்கவேண்டும். 

அதேபோன்று காணாமல்போனோர் அலுவலகத்தின் யாழ்.மாவட்ட பிராந்திய அலுவலகம் எதிர்வரும் 24 ஆம் திகதி திறந்துவைக்கப்படவுள்ளதாக செய்திகள் வாயிலாக அறிகின்றோம். உண்மையில் இவ்வாறு பிராந்திய அலுவலகங்களை ஆரம்பிப்பதாகக் கூறிக்கொண்டு எமது காணாமல்போன உறவுகளுக்கு என்ன நேர்ந்தது என்பதைக் கண்டறிவதில் தாமதத்தை ஏற்படுத்துகிறார்கள். 

சுமார் இரண்டு அல்லது மூன்று மாதங்களுக்கு முன்னர் காணாமல்போனோர் அலுவலகத்தின் தவிசாளர் ஜனாதிபதி சட்டத்தரணி சாலிய பீரிஸை சந்தித்தோம். காணாமல்போன ஐந்துபேரின் விபரங்கள் மற்றும் அவர்கள் தொடர்பில் எம்மிடம் காணப்பட்ட ஆதாரங்களை அவரிடம் கையளித்ததுடன், அவர்களைப் பற்றிய உண்மையைக் கண்டறிந்து கூறுமாறு கேட்டுக்கொண்டதுடன், அவ்வாறு செய்வதனூடாக காணாமல்போனோர் அலுவலகம் பற்றிய நம்பிக்கையை ஏற்படுத்தினால் அதன் செயற்பாடுகளை ஏற்றுக்கொள்வதாகவும் குறிப்பிட்டோம். எனினும் தற்போதுவரை எமக்கு எவ்வித பதிலும் கிட்டவில்லை.

காணாமல்போனோர் அலுவலகத்தின் தவிசாளரிடம் நாங்கள் கையளித்த 5 பேர் தொடர்பான தகவல்களைக் கொண்டு அவர்களுக்கு என்ன நேர்ந்தது என்ற உண்மையை கண்டறிந்து கூறினால் மாத்திரமே இவ்வாறு பிராந்திய அலுவலகங்கள் திறக்கப்படுவதை ஏற்றுக்கொள்வோம். அவர்களில் குறைந்தபட்சம் மூவருக்கு என்ன நேர்ந்தது என்றேனும் கண்டறிய வேண்டும். அதனைவிடுத்து காணாமல்போனோர் விவகாரத்தில் எவ்வித முன்னேற்றங்களுமின்றி வெறுமனே பிராந்திய அலுவலகங்கள் மாத்திரம் திறக்கப்படுவதனை நாங்கள் கடுமையாகக் கண்டிக்கின்றோம். 

Print Friendly, PDF & Email