SHARE

இலங்கையின் புதிய இராணுவத் தளபதியாக நியமிக்கப்பட்டுள்ள மேஜர் ஜெனரல் சவேந்திர சில்வா மீது மனித உரிமை மீறல்கள் குறித்த நம்பகமான பல குற்றச்சாட்டுகள் இருப்பதாக கனடா குறிப்பிட்டுள்ளது.

சவேந்திர சில்வா நியமனம் குறித்து கொழும்பில் உள்ள கனேடிய தூதரகம் அறிக்கையொன்றினை வெளியிட்டுள்ளது. குறித்த அறிக்கையிலேயே இந்த விடயம் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

இவ்வாறு இறுதிப்போரில் பல மனித உரிமை குற்றச்சாட்டுக்கள் சுமத்தப்பட்ட மேஜர் ஜெனரல் சவேந்திர சில்வா புதிய இராணுவத் தளபதியாக நியமிக்கப்பட்டுள்ளமை கவலையளிப்பதாக அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அத்தோடு அவரது நியமனம் நல்லிணக்கம் மற்றும் பொறுப்புக்கூறல் முயற்சிகளை குறைமதிப்பிற்கு உட்படுத்துகிறது என்றும் கனேடிய தூதரகம் தெரிவித்துள்ளது.

தமிழீழ விடுதலைப் புலிகளுக்கு எதிரான இறுதிக்கட்டப்போரில், இலங்கை இராணுவத்தின் 58ஆவது படைப்பிரிவுக்கு சவேந்திர சில்வா தலைமை தாங்கியிருந்தார்.

அவரது படைப்பிரிவு, சர்வதேச மனிதாபிமான மற்றும் மனித உரிமைச் சட்ட மீறல்களில் ஈடுபட்டதாக ஐக்கிய நாடுகளின் விசாரணை அறிக்கைகளில் குற்றம் சாட்டப்பட்டுள்ளதாக அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதேவேளை மேஜர் ஜெனரல் சவேந்திர சில்வா நியமனத்திற்கு தமிழ் தேசிய கூட்டமைப்பு அமெரிக்க தூதரகம், சர்வதேச உண்மை மற்றும் நீதிக்குமான செயற்திட்டத்தின் நிறைவேற்றுப் பணிப்பாளர் யஸ்மின் சூக்கா, ICPPG, ஐ.நா. மனித உரிமைகள் ஆணையாளர் மிஷேல் பெச்லெட் ஆகியோர் அதிருப்தி வெளியிட்டுள்ளமையும் குறிப்பிடத்தக்கது.

Print Friendly, PDF & Email