SHARE

காணாமற்போனோர் தொடர்பான சான்றிதழ்களை வைத்துள்ள உறவுகளுக்கு எதிர்வரும் ஒக்டோபர் மாதம் முதல் 6 ஆயிரம் ரூபாய் மாதந்தக் கொடுப்பனவு வழங்க அமைச்சரவையினால் அங்கீகாரம் வழங்கப்பட்டுள்ளது.

காணாமல் ஆக்கப்பட்டவர்கள் குறித்து நீதி நிலைநாட்டப்பட வேண்டும் என்று வலியுறுத்தி, தமிழர் தாயகப் பகுதிகளான வடக்கு மற்றும் கிழக்கில் தொடர் போராட்டங்கள் இடம்பெற்று வருகின்றன.

இதுதொடர்பாக அமெரிக்கா, பிரித்தானியா, கனடா மற்றும் ஐக்கிய நாடுகள் சபை போன்ற சர்வதேசத்தினரும் இலங்கை அரசாங்கத்திற்கு அழுத்தம் பிரயோகிக்க வேண்டும் என்று பாதிக்கப்பட்ட உறவுகள் வலியுறுத்தி வருகின்றனர்.

இந்த நிலையிலேயே காணாமற்போனோர் தொடர்பான சான்றிதழ்களை வைத்துள்ள உறவுகளுக்கு, எதிர்வரும் ஒக்டோபர் மாதம் முதல் 6 ஆயிரம் ரூபாய் மாதந்தக் கொடுப்பனவு வழங்க அமைச்சரவையினால் அங்கீகாரம் வழங்கப்பட்டுள்ளது.

அத்துடன், காணாமல்போன நபர் தொடர்பான அலுவலகத்தின் இடைக்கால அறிக்கையை கவனத்தில் கொண்டு, பாதிக்கப்பட்ட குடும்பங்களினால் சமர்ப்பிக்கப்பட்டுள்ள விண்ணப்பங்களுக்கு அமைய காணாமல் போனோர் தொடர்பான சான்றிதழை வழங்கவும் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

இதற்காக பதிவாளரின் திணைக்களத்திற்கு உத்தரவை பிறப்பிப்பதற்காக நிதி அமைச்சர் மங்கள சமரவீர மற்றும் தேசிய ஒருமைப்பாடு, அரசகரும மொழி மற்றும் இந்து மத அலுவல்கள் அமைச்சர் மனோ கணேசன் சமர்ப்பித்த அமைச்சரவைப் பத்திரத்திற்கே அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது.

Print Friendly, PDF & Email