SHARE

ஐ.தே.கவின் ஜனாதிபதி வேட்பாளர் அறிவிக்கப்பட்ட பின்னரே எமது ஆதரவு யாருக்கு என்பது குறித்து அறிவிப்போமென நாடாளுமன்ற உறுப்பினர் மாவை சேனாதிராஜா தெரிவித்துள்ளார்.

கிளிநொச்சியில் இன்று (வெள்ளிக்கிழமை) நடைபெற்ற நிகழ்வில் கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கும்போதே அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார். மாவை சேனாதிராஜா மேலும் தெரிவித்துள்ளதாவது, “தமிழ் மக்கள் கடந்த 70 வருடங்களுக்கு மேலாக தங்களது  உரிமைக்களுக்காக தொடர்ந்து போராடி வருகின்றார்கள்.

அத்துடன் நாங்களும் மக்களுடைய சுயநிர்ணய உரிமை, அரசியல் கைதிகள் விடுதலை என்பவற்றை வலியுறுத்தி தொடர்ந்து  குரல் கொடுத்து வருகின்றோம்.

இதனாலேயே மக்கள் தங்களுக்கு ஆதரவை வழங்கி வருகின்றார்கள். அந்தவகையில் எமது மக்களைக் கொன்று குவித்து பெரும் மனிதப் படுகொலைகளை செய்தவர்கள் இன்று உயர் பதவிகளை வகிக்கின்றார்கள்.

ஆனால் எமது மக்களுக்கு அடிப்படை உரிமைகளை கூட இதுவரை வழங்கவில்லை. கடந்த காலங்களில் தேர்தலின் போது, நாங்கள் இந்த மக்களுக்கு வழங்கிய வாக்குறுதிகளை தற்போது நிறைவேற்றி வருகிறோம்.

மேலும் எமது உரிமைகளை பெற்றுக் கொள்வதற்காகவும் ஒரு தன்னாட்சியுடன் வாழக்கூடிய ஒரு அதிகாரத்திற்காகவும் நாங்கள் போராடி வருகின்றோம்.

இதேவேளை ஜனாதிபதி தேர்தலில் யாருக்கு ஆதரவு வழங்குவது என்பது தொடர்பாக இன்னும் தீர்மானிக்கவில்லை. ஐக்கிய தேசிய கட்சி யாரை நியமிக்கின்றது என்பதையே தற்போது பார்த்துக்கொண்டிருக்கின்றோம்.

அவர்கள், வேட்பாளரை தெரிவு செய்ததன் பின்னரே யாருக்கு ஆதரவு வழங்குவது குறித்து தீர்மானிப்போம்” என குறிப்பிட்டுள்ளார்.

Print Friendly, PDF & Email