SHARE

ஐக்கிய நாடுகள் சபையின் அமைதிகாக்கும் படையிலிருந்து இலங்கை இராணுவ வீரர்கள் அதிரடியாக இடைநிறுத்தப்பட்டுள்ளனர்.

அமைதிகாக்கும் படையினராக இலங்கை இராணுவத்தினர் வெளிநாடுகளுக்கு செல்வது இடைநிறுத்தப்பட்டிருப்பதாக ஐ.நா. வின் அறிவிப்பு வெளியாகியுள்ளது.

இது தொடர்பில் ஜஸ்மின் சூக்கா தலைமையிலான உண்மை மற்றும் நீதிகான செயற்திட்டம் (ITJP) இன்று வெளியிட்டுள்ள ஊடக அறிக்கை பின்வருமாறு,

அமைதிகாக்கும் படையினராக இலங்கை இராணுவத்தினர் வெளிநாடுகளுக்கு செல்வது இடைநிறுத்தப்பட்டிருப்பது பற்றிய ஐ நாவின் அறிவிப்பு வந்திருப்பது நாட்டிற்கு ஒரு சோகமான நாள் ஆகும். இது அமைதிகாக்கும் பணிகளுக்கு பாதிப்பை ஏற்படுத்தும் என
எச்சரிக்கைகள் விடுக்கப்பட்ட போதும் குற்றஞ்சாட்டப்பட்ட போர்க் குற்றவாளியான லெப்டினன் ஜெனரல் சவேந்திர சில்வாவை இராணுவத்தளபதியாக நியமிப்பதன் மூலம் தேர்தலுக்கான ஆதரவை பெற்றுக் கொள்ளும் இலங்கையின் ஜனாதிபதியின் நகர்விற்கு கிடைத்த பதிலடி
இதுவாகும்.

சவேந்திர சில்வா 2008-9 இல் இலங்கையின் இறுதிக்கட்டப் போரின் போது இலங்கை இராணுவத்தின் 58 ஆவது படைப் பிரிவினை வழிநடத்தினார். பொதுமக்களுக்கு எதிரான
கண்மூடித்தனமான மற்றும் வேண்டுமென்று நடாத்தப்பட்ட தாக்குதல்கள், வைத்தியசாலைகள் மற்றும் மருத்துவ பணியாளர்கள் மீதான தாக்குதல்கள், பாதுகாப்பு வலையங்கள் மீதான தாக்குதல்கள மற்றும் தடைசெய்யப்பட்ட ஆயுதங்களின் பாவனை போன்றவற்றில் அவரது படைகள் சம்பந்தப்பட்டிருந்தன என்பதை உறுதிப்படுத்துவதற்கு போதிய ஆதாரங்கள் உள்ளன.

இது பொதுமக்களுக்கு இழப்புக்கள் மற்றும் காயங்கள் என பேரழிவை ஏற்படுத்தியது. போர் முடிவடைந்து பத்து ஆண்டுகள் கடந்திருப்பினும் இலங்கையானது நிலைமாற்று நீதி திட்டத்திற்கு தனது ஈடுபாட்டைக் காட்டியிருப்பினும் இலங்கையின் அரசியல்வாதிகள் வெட்கப்படும் வகையில் சில்வாவினை ஒரு “போர் வீரன்” என அழைக்கின்றார்கள். இதன் விளைவான சிவில் போருக்குப் பின்னர் இணைந்து கொண்ட இளம் இராணுவ வீரர்கள் தற்போது அமைதிகாக்கும் பணியில் இருந்து இடைநிறுத்தப்படுகின்றார்கள்.

“சவேந்திர சில்வாவின் நியமனமானது நாட்டிற்கு தாங்ளே ஏற்படுத்திக் கொண்ட ஒரு துன்பியல் பாதிப்பாக இருந்தது. கடந்த கால குற்றங்களுக்கு உண்மையான குற்றவியல் பொறுப்புக்கூறலை நடைமுறைப்படுத்தி பாதிக்கப்பட்டவர்களுக்கும் அவர்களின் குடும்பங்களுக்கும் உண்மை மற்றும் நீதியைப் பெற்றுக் கொடுக்கவும், தற்போதும் இடம்பெற்றுவரும் சித்திரவதைகளை இல்லாமற்செய்வதற்கு பாதுகாப்பு சேவையில் மறுசீரமைப்பை ஏற்படுத்தவும் இலங்கையானது சர்வதேச சமூகத்தின் உதவியைப் பெற்றுக்கொள்வதைக் காண விருப்புகின்றோம்.” என ITJP இன் நிறைவேற்றுப்பணிப்பாளர் ஜஸ்மின் சூக்கா தெரிவித்துள்ளார்.

http://www.itjpsl.com/assets/press/TAMIL27-Sep-2019-Press-Release-suspension-peackeeping-Tamil-Translation.pdf

Print Friendly, PDF & Email