SHARE

ஜனாதிபதி வேட்பாளர்களுடன் மட்டுமல்லாது அவர்கள் பிரதிநிதித்துவப்படுத்தும் கட்சிகளுடன் முக்கியமாக பேச்சுவார்த்தை நடத்த ஆயத்தமாக உள்ளதாக தமிழ் தேசியக் கூட்டமைப்பு தெரிவித்துள்ளது.

ஊடகம் ஒன்றுக்கு வழங்கிய செவ்வியில் நாடாளுமன்ற உறுப்பினர் மாவை சேனாதிராஜா இதனைத் தெரிவித்துள்ளார்.

மேலும், நாட்டின் எதிர்கால அரசியல், சமூக, பொருளாதார நிலைமைகள் குறித்து தீர்மானிக்கின்ற சக்திகளாக உள்ள தரப்பினருடன் பேச்சுவார்த்தை நடத்துவதற்கான ஒழுங்குகளை மேற்கொள்வதாக அவர் மேலும் குறிப்பிட்டுள்ளார்.

இதேவேளை, ஜனாதிபதித் தேர்தல் தொடர்பாக அனைத்து தமிழ்க் கட்சிகளும் இணைந்து பொதுவான ஒரு தீர்மானத்தை மேற்கொள்வதற்கான முயற்சிகள் இடம்பெறுவதாக ஈழ மக்கள் புரட்சிகர விடுதலை முன்னணி தெரிவித்துள்ளது.

இது தொடர்பாக தமிழீழ விடுதலை இயக்கம், தமிழ் மக்கள் விடுதலைக் கழகம் மற்றும் தமிழரசுக் கட்சி என்பனவற்றுடன் ஏற்கனவே பேச்சுவார்த்தை இடம்பெற்றுள்ளதாக ஈழமக்கள் புரட்சிகர விடுதலை முன்னணியின் தலைவர் சுரேஷ் பிரேமசந்திரன் தெரிவித்துள்ளார்.

எதிர்வரும் ஜனாதிபதித் தேர்தலில் தமிழ் மக்களின் பிரச்சினைகள் தொடர்பாக தீர்வுகளை தெரிவிக்கும் அதேவேளை, எழுத்து மூல வாக்குறுதிகளைத் தரும் வேட்பாளர் அல்லது கட்சிக்கு ஆதரவளிக்க வேண்டும் என்ற நிலைப்பாடு தமிழ் மக்கள் மத்தியில் நிலவுகின்றது.

இந்த சூழலில் தமிழ் கட்சிகள் மற்றும் அமைப்புக்கள் இணைந்து ஒரு தீர்க்கமான முடிவை எடுப்பது முக்கியமானதான கருதப்படுகிறது.

Print Friendly, PDF & Email