SHARE

வவுனியாவில் சம்பவம்; மனித உரிமை ஆணைக்குழுவில் முறைப்பாடு

வெளிநாட்டில் வசிக்கும் மகன் குறித்து விசாரணைகளை மேற்கொண்ட புலனாய்வு பிரிவினர் என குற்றம் சாட்டப்பட்டுள்ள மூவர் குழு தந்தையை தாக்கியதுடன் வீட்டிலிருந்தவர்களுக்கு கொலை அச்சுறுத்தலும் விடுத்துச்சென்றுள்ளனர்.

குறித்த சம்பவம் வவுனியாவில் கடந்த செப்டம்பர் மாதம் 24 ஆம் திகதி நடைபெற்றுள்ளதாக வவுனியா மனித உரிமைகள் ஆணைக்குழுவில் முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது.

இது குறித்து மேலும் தெரிய வருவதாவது,

கடந்த செப்டம்பர் மாதம் 24 ஆம் திகதி வவுனியா தவசிக்குளம் பகுதியிலுள்ள சண்முகன் இராஜேந்திரம் எனும் குடும்பஸ்தரின் வீட்டிற்கு சென்ற மூவர் கொண்ட குழு தங்களை இராணுவப்புலனாய்வாரள்கள் என தெரிவித்துள்ளதுடன் லண்டனில் வசிக்கும் அவரது மகன் இராஜேந்திரன் சுதன் குறித்து விசாரணைகளை மேற்கொண்டுள்ளனர்.

லண்டனில் வசிக்கும் அவர்களது மகன் இலங்கை அரசாங்கத்திற்கு எதிராக செயற்படுவதாகவும் அதற்கான ஆதாரங்கள் தம்மிடம் இருப்பதாகவும் குறித்த மூவர் குழு தந்தையிடம் தெரிவித்துள்ளனர். அதற்கு தந்தை மறுப்பு தெரிவிக்க அவரை தாக்கியதுடன் மகனின் செயற்பாடுகளை நிறுத்தாவிடில் குடும்பத்தை கொலை செய்வதாகவும் அச்சுறுத்தல் விடுத்துள்ளதாக மேற்படி முறைப்பாடு பதிவு செய்யப்பட்டுள்ளது.

மேலும் குறித்த நபர்கள் வினோமா எனும் பெயர் கொண்ட முகப்புத்தக்திலிருந்து அவரது மகனின் புகைப்படங்களை காண்பித்ததாகவும் மேற்படி முறைப்பாட்டில் தெரிவிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

Print Friendly, PDF & Email