SHARE

ஜனாதிபதி தேர்தலை தமிழர்களுக்கு ஆதரவாக பயன்படுத்திக் கொள்வதனை ஆராய்வதற்காக ஓரணியில் திரளுமாறு கிழக்கு பல்கலைக்கழக மாணவர் ஒன்றியம் வேண்டுகோள் விடுத்துள்ளது.

இது தொடர்பாக கிழக்கு பல்கலைக்கழக மாணவர் ஒன்றியம் வெளியிட்டுள்ள ஊடக அறிக்கையிலேயே மேற்படி வேண்டுகோள் விடுக்கப்பட்டுள்ளது.

குறித்த அறிக்கையில், “இலங்கையின் சிறுபான்மையினரான நாம் அரசியல் ரீதியாக எதுவித பலமும் அற்றவர்களாக உள்ளோம். அரசியல் தோற்றத்தில் இருந்தே நாம் அடக்கப்பட்டும், ஒடுக்கப்பட்டும் கொண்டுதான் இருக்கின்றோம்.

கட்சிகளாய் பிளவுபட்டு, பக்கச்சார்பான அரசியல்வாதிகளின் பின்னால் இழுபட்டு இன்று அநாதைகளாக தூக்கி வீசப்பட்டுள்ளோம். பிரிவினை கொண்டு நாம் செயற்படுவதால் எந்த பலனும் இல்லை. ஜனாதிபதி தேர்தலில் தமிழர்களை கண்டு கொள்வார் யாருமில்லை.

இந்நிலையில் எமது பலம் என்ன, பலவீனம் என்ன என்பதை நாம் ஆராய வேண்டும். முடிவெடுக்கும் காலம் ஓடிவிட்டது. முனைப்புடன் முடிவு எடுக்கும் நேரம் எமக்கு நெருங்கி விட்டது.

தேர்தலின் பின்னர் நாம் ஓரங்கட்டுப்பட்டு போனால் எமக்கான நீதிக்காக இன்னும் 5 ஆண்டுகள் காத்திருக்க வேண்டுமா? இப்போது முடியாதது இனி எப்போதுமே முடியப்போவதில்லை என்பதே நிதர்சனமான உண்மை.

சிந்தித்து செயலாற்ற வேண்டிய நேரம் இது. எனவே இந்நிலையை கருத்திற்கொண்டு இன்று யாழ்ப்பாணம் பல்கலைக் கழகத்தில் நடைபெறவுள்ள விசேட கூட்டத்தில் அரசியலாளர்கள், பொது அமைப்புக்கள் என அனைவரும் கலந்துகொண்டு எமது உயர்வு குறித்து சரியான முடிவினை பெறுவோம்.

தேர்தலில் எமக்கான சக்தியை நாம் வெளிப்படுத்துவோம். வெற்றி எந்தப் பக்கம் என பரிசீலிப்பது என்பதற்கு அப்பால் நாம் எப்படி இந்த தேர்தலை எமக்கு ஆதரவாகப் பயன்படுத்திக் கொள்ளப்போகிறோம் என்பதை அவாதனத்துடன் ஆராய வேண்டிய தருணமிது. ஒருமித்த குரலாய் எமது பலத்தை வெளிப்படுத்துவோம்” என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

Print Friendly, PDF & Email