SHARE

இலங்கையில் நடைபெற்ற இறுதிப்போரின் போது இலங்கை இராணுவத்திடம் கையளிக்கப்பட்டு காணாமல் ஆக்கப்பட்ட சிறுவர்களுக்கும் அப்போரின் போது கொல்லப்பட்ட சிறார்களுக்கும் நீதி வேண்டி பிரித்தானியாவில் இன்று மாபெரும் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

அதேவேளை ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட சிறுவர்களினால்; பிரித்தானிய பிரதமருக்கு மனு ஒன்றும் கையளிக்கப்பட்டுள்ளது.

உள்நாட்டு யுத்தத்தால் தமிழ் பேசும் சிறார்கள் அதிகமானோர் காணாமல் ஆக்கப்பட்டுள்ளதுடன் பலர் அங்கவீனமாக்கப்பட்டும் உள்ளனர். இவர்களுக்கான நீதி இன்று வரையிலும் இலங்கை அரசினால் வழங்கப்படாது இழுத்தடிப்பு செய்யப்பட்டு வரும் நிலையில் இன்று இலங்கையில் சிறுவர்கள் தினம் கொண்டாடப்படுகின்றது.

இந்நிலையிலேயே, இலங்கையில் வாழும் சிறுவர்கள் அனைவருக்குமான நீதி வேண்டி சர்வதேசத்திற்கான அழுத்தத்தினை கொடுக்கும் நோக்கில் பிரித்தானியாவில் இன்று ஆர்ப்பாட்டம் ஒன்று முன்னெடுக்கப்பட்டது.

புலம்பெயர் தமிழர்களின் அடுத்த தலைமுறையினர் சொந்த இனம் ஈழம்; தொடர்பிலான அக்கறைகுறை உடையவர்கள் என்ற சிலரின் எண்ணத்தை உடைத்தெறியும் வகையில் பெருமளவிலான சிறுவர்கள் போராட்டத்தில் கலந்துகொண்டதுடன் முன்னின்று கோசங்களை எழுப்ப இளைஞர்கள் பெற்றோர்கள் என பிரித்தானிய பிரமரின் வாசல்ஸ்தல முன்றல் என்றுமில்லாத அளவில் மக்கள் கூட்டத்தால் நிறைந்திருந்தது.

இதில் ‘சிங்கள அரசே சிறுவர்களை கொன்றுவிட்டு சிறுவர் தினமா” ”சிங்கள அரசின் நயவஞ்சத்தில் சிக்கிய எம் சிறார்கள் எங்கே” ”போரின் ஒரு யுக்தியாக எம் குழந்தைகள் வலுக்கட்டாயமாக காணமல் ஆக்கப்பட்டார்கள்” போன்ற வாசகங்களை ஏந்தியபடியும் கோசங்களை ஏழுப்பியும் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

அதேவேளை, சிறுவர்களால் அங்கு குறியீட்டு வீதி நாடகம் ஒன்றும் நிகழ்த்தப்பட்டதுடன் இறுதியில் பிரித்தானிய பிரதமருக்கு மனு ஒன்றும் கையளிக்கப்பட்டது.

Print Friendly, PDF & Email