SHARE

பிரித்தானியாவில் புகலிடம் கோரும் இலங்கை அகதிகளின் தஞ்சக்கோரிக்கையில் திடீர் திருப்பமாக பிரித்தானிய மேன்முறையீட்டு நீதிமன்றின் தீர்ப்பு ஒன்று அமைந்துள்ளது.

மூத்த வழக்கறிஞர் அருண் கணநாதன் அவர்களால் முன்னெடுக்கப்பட்ட வழக்கின் தீர்ப்பே இவ்வாறு இலங்கையின் தஞ்சக் கோரிக்கையாளர்களுக்கு வரப்பிரசாதமாக அமைந்துள்ளது.

இது குறித்து மேலும் தெரியவருவதாவது,

‘RS’ எனப்படும் இலங்கையரின் அகதி தஞ்ச கோரிக்கை நிராகரிப்பின் மேன்முறையீடு ஒன்று கடந்த 15 ஆம் திகதி பிரித்தானியாவின் மேன்முறையீட்டு நீதிமன்றினால் (Court of Appeal) எடுத்துக்கொள்ளப்பட்டது.

இந்த வழக்கினை ஆராய்ந்த முன்று நீதிபதிகள் கொண்ட குழு,

இலங்கையில் விடுதலைப்புலி உறுப்பினராக இருந்த ஒருவர் 2009 ஆம் ஆண்டு யுத்தத்தின் பின்னர் கைது செய்யப்பட்டு பின்னர் அவர் இலஞ்சம் கொடுத்து தடுப்பிலிருந்து தப்பியிருந்ததால் அவரை இங்கிலாந்து திருப்பி இலங்கைக்கு அனுப்பினால் அங்கு அவர் கைது செய்யப்பட்டு மீண்டும் துன்புறுத்தப்படக்கூடிய வாய்ப்பு உள்ளதாக தெரிவித்தனர்.

அத்துடன் அவருக்கு அகதி அந்தஸ்து வழங்க வேண்டும் என்றும் தீர்ப்பளித்து உள்நாட்டு திணைக்களத்திற்கு ஒரு உத்தரவையும் நீதிமன்றம் பிறப்பித்துள்ளது.

அது மட்டுமல்லாது 2009 யுத்தத்தின் பின்னர் தடுப்பிலிருந்து விடுதலைப்புலி உறுப்பினர் ஒருவர் தப்பித்திருந்தால் அவருக்கு அந்நாட்டில் பிடியாணை பிறப்பிக்கக்கூடிய சாத்தியம் இருப்பதாகவும் நீதிபதிகள் குழு தெரிவித்துள்ளனர்.

இந்நிலையில், மேற்படி வழக்கின் தீர்பு இலங்கை தமிழ் அகதிகளுடைய மேலும் பல வழக்குகளை கையாளும் அணுகுமுறையில் பாரிய மாற்றத்தை கொண்டுவருமென நம்பப்படுகின்றது.

இந்த வழக்கினை வெற்றிகரமாக செயற்படுத்திய மூத்த வழக்கறிஞர் அருண் கணநாதன் அவர்களுக்கு தமிழ் மக்கள் சார்பில் மனமார்ந்த பாராட்டுக்கள்.

Print Friendly, PDF & Email