SHARE

2004 ஆம் ஆண்டு இடம்பெற்ற ஆழிப்பேரலையை அடுத்து கிடைத்த வெளிநாட்டு நிதியுதவிகளை மஹிந்த ராஜபக்ஷ தனது பொக்கட்டிற்குள் போட்டுக்கொண்டார் என ஐக்கிய தேசியக் கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் பீல்ட் மார்ஷல் சரத் பொன்சேகா குற்றம் சாட்டியுள்ளார்.

தேர்தல் பிரசார கூட்டத்தில் கலந்துகொண்டு கருத்து தெரிவித்த அவர், ஆழிப்பேரலையினால் பலர் தங்கள் குடும்பங்களை இழந்தனர். நாடுமுழுவதும் சுமார் 40 ஆயிரம் பேர் உயிரிழந்தனர்.

அந்த நேரத்தில் முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ, நாட்டிற்கு கிடைத்த வெளிநாட்டு உதவிகளை தனது சகோதரியின் வங்கிக் கணக்கில் இட்டதாக சரத் பொன்சேகா தெரிவித்தார்.

தற்போதைய சூழலில் மஹிந்த ராஜபக்ஷ மீண்டும் அதிகாரத்திற்கு வந்தால் என்ன செய்வார்கள் என்பதை மக்கள் அறிய வேண்டும் எனவும் சரத் பொன்சேகா தெரிவித்தார்.

ஹம்பாந்தோட்டை துறைமுகத்தின் மூலம் மஹிந்த ராஜபக்ஷ கோடீஸ்வரரானார் என்று குற்றம் சாட்டிய அவர், அத்துறைமுகத்தின் மாத வருமானம் வெறும் 16 ஆயிரம் ரூபாய் என்றும் அவர்சுட்டிக்காட்டினார்.

இதன்பின்னர் மஹிந்த ராஜபக்ஷ சீனாவிடமிருந்து 700 மில்லியன் அமெரிக்க டொலர் மதிப்புள்ள கடனைப் பெற்றார் என்றும் அந்த நேரத்தில் வெளிநாட்டுக் கடன்களுக்கான வட்டி 1-2% எனவும் அவர் சுட்டிக்காட்டினார்.

அந்த கடன்களில் 6 விகிதத்தை மஹிந்த ராஜபக்ஷ தனது பொக்கட்டிற்குள் போட்டுகொண்டதாகவும் அவை சுமார் 7 பில்லியன் ரூபாய் என்றும் சரத் பொன்சேகா குறிப்பிட்டார்.

Print Friendly, PDF & Email