SHARE

ஜனாதிபதியாக தெரிவு செய்யப்பட்ட மறுநாள் சிறையில் உள்ள படைவீரர்களை விடுதலை செய்வேன் என்ற தனது வாக்குறுதி குறித்து ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் ஜனாதிபதி வேட்பாளர் கோட்டாபாய ராஜபக்ஷ தெளிவுபடுத்த வேண்டும் என காணாமல்போன ஊடகவியலாளர் பிரகீத் எக்னலிகொடவின் மனைவி சந்தியா எக்னலிகொட வேண்டுகோள் விடுத்துள்ளார்.

இந்த விடயம் தொடர்பாக அவர் கோட்டாபய ராஜபக்ஷவிற்கு கடிதம் ஒன்றை அனுப்பி வைத்துள்ளார்.

அவர் அந்த கடிதத்தில் மேலும் தெரிவித்துள்ளதாவது, ஜனாதிபதியான மறுநாள் சிறையில் உள்ள படைவீரர்களை விடுதலை செய்வேன் என அனுராதபுரத்தில் இடம்பெற்ற தேர்தல் பிரச்சார கூட்டத்தில் கோட்டாபய ராஜபக்ஷ தெரிவித்துள்ளமை தன்னை நிச்சயமற்ற நிலைக்கும் அச்சத்திற்கும் உள்ளாக்கியுள்ளது என சந்தியா தனது கடிதத்தில் தெரிவித்துள்ளார்.

இவ்வாறு அவர்களை விடுதலை செய்வது தன்னைபோன்ற பாதிக்கப்பட்டவர்களின் அடிப்படை உரிமையை மீறும் செயல் எனவும் சந்தியா எக்னலிகொட தனது கடிதத்தில் தெரிவித்துள்ளார்.

மேலும் இது நீதியை வழங்க முயலும் நேர்மையான அதிகாரிகளை பலவீனப்படுத்திவிடும் எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

நீதிமன்றத்தினால் தீர்ப்பு வழங்கப்பட்ட நிலையில் சிறையில் உள்ள அனைத்து படை அதிகாரிகளுக்கும் மன்னிப்பு அளிக்கப்போகின்றீர்களா? என சந்தியா அந்த கடிதத்தில் கேள்வி எழுப்பியுள்ளார்.

கொலைகள், களவு, பாலியல் வன்முறைகள், திருட்டு என அனைத்து குற்றங்களையும் செய்தவர்களையும் விடுதலை செய்யப்போகின்றீர்களா? எனவும் அவர் கேள்வி எழுப்பியுள்ளார்.

அல்லது நீங்கள் தெரிவு செய்யும் ஒரு குழுவினரை தெரிவு செய்யப்போகின்றீர்களா? எனவும் அவர் கேள்வி எழுப்பியுள்ளார்.

யாரை விடுவிப்பது என தீர்மானிப்பதற்கு எந்த வழிமுறையை தகுதியை நீங்கள் பின்பற்றப்போகின்றீர்கள்? என்றும் சந்தியா எக்னலிகொட கேள்வி எழுப்பியுள்ளார்.

தனது கணவர் விவகாரத்தை பொறுத்தவரை சட்டமா அதிபர் குற்றச்சாட்டுகளை சுமத்தியுள்ளார்.

மேலும் விசாரணைகளை ஆரம்பிப்பதற்காக பிரதம நீதியரசர் மூவர்கொண்ட நீதிபதிகள் குழாமை நியமிக்கவுள்ளார் என தனது கடித்தில் சுட்டிக்காட்டியுள்ள சந்தியா எக்னலிகொட, படையினருடன் தொடர்புபட்ட பல குற்றச்செயல்கள் குறித்த விசாரணைகள் ஆரம்ப கட்டத்தில் உள்ளன. இந்நிலையில், நீங்கள் ஜனாதிபதியானால் குற்றம்சாட்டப்பட்ட இந்த படையினரும் விடுதலை செய்யப்படுவார்களா எனவும் கேள்வி எழுப்பியுள்ளார்.

மேலும் இந்த கேள்விகளுக்கு மூன்று நாட்களிற்குள் தனக்கு பதில் அனுப்புங்கள் என சந்தியா அந்த கடிதத்தில் வேண்டுகோள் விடுத்துள்ளார்.

Print Friendly, PDF & Email