SHARE

இலங்கை இராணுவத்தால் கொல்லப்பட்ட அப்பாவி தமிழ் மக்களுக்காக அனுதாப கூட்டமொன்றை மலேசிய மண்ணில் ஏற்பாடு செய்த 12 தமிழர்கள் கைது செய்யபட்டதை கண்டித்து பிரித்தானியாவின் மலேசிய தூதரகத்திற்கு முன்பாக ஆர்ப்பாட்டம் ஒன்று இன்று (06) நடாத்தப்பட்டது.

விடுதலைப்புலிகள் அமைப்புக்கு மலேசியாவில் புத்துயிரூட்ட முயற்சிப்பதாக எழுந்துள்ள குற்றச்சாட்டின் பேரில் இவர்கள் கைது செய்யப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கதாகும்.

மலேசியாவில் தங்களின் கணவர்களை விடுவிக்க கோரி கோலாலம்பூரில் உள்ள மலேசியா காவல்துறை தலைமை அலுவலகத்துக்கு எதிரே பெண்கள் போராட்டத்தை தொடங்கினார்கள்.

இதன் தொடர்ச்சியாக அவர்களின் போராட்டத்திற்கு வலுச்சேர்க்கும் முகமாக பிரித்தானியாவில் பாரிய ஆர்ப்பாட்டம் ஒன்று விஜயரட்ணம் விஜயகாந்தன், மதுரங்கி தேவராஜ் , குலதீபன் செல்வராஜ், திருமகள் சத்தீஸ்குமார் , சூரியகுமார் ஆகியோரினால் ஒருங்கிணைப்பு செய்யப்பட்டது.

இவ் ஆர்பாட்டத்தில் பிரித்தானியாவில் வாழும் பெரும்பாலான தமிழர்கள் கலந்து கொண்டு உலகத்தில் வாழும் தமிழர்களை ஒடுக்க முயலும் அரச பயங்கரவாதம் ஒழிக என முழங்கினர்.

இலங்கையில் நடந்தது போன்று இப்பாரினில் மீண்டுமொரு நிகழ்வு நிகழக்கூடாது என்று வலியுறுத்தினர்.

புதன்கிழமை மாலை 4 மணி தொடக்கம் 6மணி வரை நடைபெற்றது இதில் தமிழர்களை தாக்குவதை நிறுத்துங்கள் , மலேசியாவில் உள்ள தமிழர்களுக்கு நீதி வேண்டும் என்னும் பாததைகளையும் தீபங்களையும் கையில் ஏந்தியவாறு போராட்டம் நிறைவு செய்யப்பட்டது .

Print Friendly, PDF & Email