SHARE

கிளிநொச்சியில் பெய்துவரும் கன மழை காரணமாக மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டுள்ளது.

தொடர்ச்சியாக பெய்து வரும் பலத்த மழை காரணமாக கிளிநொச்சி கண்டாவளை பிரதேச செயலர் பிரிவில் 53 குடும்பங்களைச் சேர்ந்த 138 பேர் பாதிக்கப்பட்டுள்ளதாக மாவட்ட இடர் முகாமைத்துவ நிலைய புள்ளி விபரம் தெரிவிக்கின்றது.

இன்று (திங்கட்கிழமை) பகல் கிடைக்கப்பெற்ற புள்ளி விபரங்களின் அடிப்படையில் கிளிநொச்சி கண்டாவளை பிரதேச செயலர் பிரிவிற்குட்பட்ட பரந்தன் கிராம சேவையாளர் பிரிவில் 47 குடும்பங்களைச் சேர்ந்த 121 பேர் பாதிக்கப்பட்டுள்ளதாகவும், பிரமந்தனாறு கிராம சேவகர் பிரிவில் 6 குடும்பங்களைச் சேர்ந்த 17 பேர் பாதிக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதுவரை பாரிய அளவிலான பாதிப்புக்கள் ஏற்படவில்லை எனவும் இடைத் தங்கல் முகாம்கள் அமைக்கப்படவில்லை எனவும் மாவட்ட இடர் முகாமைத்துவ நிலையம் தெரிவிக்கின்றது.

பாதிப்புக்கள் தொடர்பான விபரங்கள் தொடர்ந்தும் திரட்டப்பட்டு வருவதாகவும், 24 மணிநேர கண்காணிப்பு மற்றும் அவதானிப்புக்களில் மாவட்ட இடர் முகாமைத்துவ நிலையம் ஈடுபட்டுள்ளதாகவும் கிளிநொச்சி மாவட்ட அரசாங்க அதிபர் சுந்தரம் அருமைநாயகம் தெரிவித்துள்ளார்.

தொடர் மழை காரணமாக குளங்களின் நீர்மட்டம் வெகுவாக அதிரித்து வருகின்றது. கிளிநொச்சியில் காணப்படும் நீர்ப்பாசனக் குளங்கள் சில வான்பாய ஆரம்பித்துள்ளன. மேலும் சில குளங்கள் வான் மட்டத்தை அடைந்து வருவதாக நீர்ப்பாசனத் திணைக்களம் தெரிவிக்கின்றது.

வடக்கு மாகாணத்தின் மிகப்பெரிய நீர்ப்பாசன குளமான இரணைமடு குளத்தின் நீர்மட்டம் இதுவரை 25.2 அடியாக உயர்ந்துள்ளது. 36 அடியான குறித்த குளத்திற்கான நீர் வருகை அதிகரித்துக் காணப்படுவதாக பொறியியலாளர் தெரிவிக்கின்றார்.

இதேவேளை, அக்கராயன் குளத்தின் நீர்மட்டம் 16 அடியாவும், கரியாலை நாகபடுவான் குளத்தின் நீர்மட்டம் 6.5 அடியாகவும் புதுமுறிப்பு குளத்தின் நீர்மட்டம் 13 அடியாகவும் அதிகரித்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

குடமுருட்டி குளம் (8அடி), பிரமந்தனாறு குளம்(12அடி), வன்னேரிக்குளம் (9.06அடி), 24 அடிகொண்ட கல்மடுகுளம் ஆகியன தற்போது வான் பாய ஆரம்பித்துள்ளன.

கிளிநொச்சியின் 10.06 அடிகொண்ட கனகாம்பிகைக்குளத்தின் நீர்மட்டம் 10.1 அடியாக காணப்படுகிறது. குறித்த குளம் இன்று இரவு வான்பாய ஆரம்பிக்கலாம் என நீர்ப்பாசன பொறியியலாளர்கள் தெரிவிக்கின்றனர். அத்துடன் குளங்களின் கழிவுநீர் ஆற்றுப்பகுதியை அண்மித்துள்ள மக்கள் அவதானத்துடன் செயற்படுமாறு அறிவறுத்தப்பட்டுள்ளனர்.

தற்போதும் குளங்களுக்கான நீர் வருகை தொடர்வதால் குளங்கள் நிரம்பி வருவதாகவும், மழை பெய்யும் சாத்தியம் இருப்பதால் நீர் நிலைகளில் நீராட செல்லுதல் மற்றும் சிறார்கள் தொடர்பாக அவதானமாக இருக்குமாறும் மாவட்ட இடர் முகாமைத்தவ நிலையம் தெரிவிக்கின்றது.

இதேவேளை, அனர்த்தம் ஏற்படும் சந்தர்ப்பங்களில் விரைந்து மக்களுக்கான தேவைகள் மற்றும் பாதுகாப்பினை மேற்கொள்வதற்கு கிளிநொச்சி மாவட்ட செயலகம் மற்றும் மாவட்ட இடர் முகாமைத்தவ நிலையம் தயாராக உள்ளதாகவும் அரசாங்க அதிபர் தெரிவித்துள்ளார்.

Print Friendly, PDF & Email