SHARE

புலம்பெயர் தமிழர்களுக்கு எதிராக கொலை மிரட்டல் விடுத்த இலங்கை தூதரகத்தின் முன்னாள் பாதுகாப்பு அதிகாரி பிரியங்கா பெர்னாண்டோவை குற்றவாளியாக தீர்ப்பளித்துள்ள பிரித்தானிய வெஸ்மினிஸ்டர் நீதிமன்றம் அவருக்கு எதிராக அபராதமும் விதித்துள்ளது.

பொது ஒழுங்குச் சட்டம் ( Public order) 1986- பிரிவு 4யு இன்; அடிப்படையில் அவர் குற்றவாளி என நிரூபிக்கப்பட்டுள்ளதுடன் 2000 பவுண்கள் அபராதமும் பாதிக்கப்பட்டவர்கள் மற்றும் இந்த வழக்கிற்கான செலவீனங்களை வழங்கும் படியும் நீதிமன்றினால் இன்று தீர்ப்பளிக்கப்பட்டது.

ICPPG யினால் கடந்த ஆண்டு தொடரப்பட்ட மேற்படி வழக்கானது சுமார் 21 மாதங்களை கடந்துள்ள நிலையில் இன்று அதன் இறுதித் தீர்ப்பானது பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியிருந்தது.

அந்தவகையில் நீதிமன்றின் இலக்கம் 01 ஆம் அறையின் பார்வையாளர் பகுதி புலம்பெயர் தமிழர்களால் நிறைந்திருக்க நண்பகல் 12.15 மணியளவில் ஆரம்பமான வழக்கில் தலைமை நீதிபதி தனது தீர்ப்பினை வாசித்தார்.

அதில் உயர் அதிகார பதவியிலிருந்த பிரியங்கா பெர்னாண்டோ பொது வெளியில் அவ்வாறு (கழுத்தை அறுப்பது போன்ற செய்கை) நடந்து கொண்டமை குற்றத்திற்குரிய செயலாகும். மேலும் இச்செயலுக்காக இலங்கை அரசாங்கம் வெட்கப்படவேண்டும் எனவும் அவர் குறிப்பிட்டார்.

இதேவேளை இன்றைய தினம் குறித்த நீதிமன்றின் முன்றலில் திரண்டிருந்த பெருமளவிலான புலம்பெயர் தமிழர்கள் பிரியங்கா பெர்னாண்டோவை கைது செய்யவேண்டும் என கோரி ஆர்ப்பாட்டம் ஒன்றிலும் ஈடுபட்டமை குறிப்பிடத்தக்கது

இந்நிலையில் மேற்படி வழக்கில் பிரியங்கா பெர்னாண்டோவிற்கு எதிராக ஆஜரான சட்டத்தரணிகள் தரப்பிலிருந்து போல் மற்றும் வழக்கின் முதுகெலும்பாக செயலாற்றிய மனித உரிமை ஆர்வலர் கீத் குலசேகரம் ஆகியோர் குறித்த தீர்ப்பினையடுத்து நமது ஈழநாடு இணையத்திற்கு தெரிவித்த கருத்துக்கள் பின்வருமாறு ,

பிரியங்கா பெர்ணான்டோவிற்கு எதிரான வழக்கின் முழுப்பார்வை

கடந்த ஆண்டு (2018) பிரித்தானியாவிலுள்ள இலங்கை தூதரகத்திற்கு முன்னாள் புலம்பெயர் தமிழர்கள் சுதந்திர தின எதிர்ப்பு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டவேளை தூதரகத்தின் அப்போதைய பாதுகாப்பு அதிகாரியாக கடமையாற்றிய பிரியங்கா பெர்ணான்டோ ஆர்பாட்டக்காரர்களை பார்த்து கொலை அச்சுறுத்தல் விடுத்திருந்தார்.

இராணுவ அதிகாரிக்குரிய உத்தியோக பூர்வ உடையில் தூதரகத்திற்கு வெளியே நின்றிருந்த அவர் ஆர்பாட்டக்காரர்களை பார்த்து கழுத்தை அறுப்பேன் போன்ற சமிக்ஞை ஒன்றை காண்ப்பித்திருந்தார்.

இதனையடுத்து சட்டவாளர் அருண்கணநாதன் மனித உரிமைகள் செயற்பாட்டாளர் கீத் குலசேகரம் ஆகியோரின் வழிநடத்தலுடன் ICPPG யினால் அவருக்கு எதிராக பிரித்தானிய நீதிமன்றில் வழக்கு தொடரப்பட்டது.

இந்த வழக்கு நடப்பாண்டில் (2019) கடந்த பெப்ரவரி மாதம் வெஸ்மினிஸ்டர் நீதவான் நீதிமன்றில் விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்ட போது அதில் பிரியங்கா பெர்ணான்டோ மீதான இரு குற்றச்சாட்டுக்கள் நீதிமன்றினால் ஏற்றுக்கொள்ளப்பட்டதுடன் அவருக்கு எதிராக பிடியாணையும் பிறப்பிக்கப்பட்டிருந்தது.

எனினும் பிரிகேடியர் பிரியங்க பெர்னாண்டோவிற்குஇராஜதந்திர தண்டனை முக்தி இருப்பதாக சிறிலங்கா வெறிவிவகார அமைச்சுஇ பிரித்தானியவெளிவிவகார அமைச்சின் ஊடாக தெரியப்படுத்திய நிலையில் அவர் மீதான பிடியாணையை வெஸ்ட்மினிஸ்டர் நீதிமன்றம் மீளப் பெற்றுக்கொண்டது.

பின்னர் மார்ச் மாதம் நடைபெற்ற அடுத்தகட்ட வழக்கு விசாரணையில் பிரிகேடியர் பிரியங்க பெர்னாண்டோவின் கடமைகள் தொடர்பில் நீதிமன்றினால் கோரப்பட்டதுடன் அதில் கழுத்தை அறுக்கும் சைகையைகாண்பித்து அச்சுறுத்திய நடவடிக்கை அவரது இராஜதந்திர கடமையுடன் தொடர்பில்லை என்றுநீதிமன்றம் அறிவித்தது.

அதேவேளைஇ பிரியங்கா தரப்பிலிருந்து ஆஜரான சட்டத்தரணிஇ வழக்கு விசாரணைக்கு முன்னதாக அனுப்பிவைக்கப்பட்ட ஆவணங்களை நீதிமன்ற அதிகாரிகள் கவனத்தில் எடுத்துக்கொள்ளவில்லை என மன்றில் எடுத்துரைத்தார் இதனையடுத்து நீதி மன்றின் மீதான இக் குற்றச்சாட்டுகளுக்கு இடமளிக்காது மீண்டும் ஒரு சர்ந்தர்ப்பதை அவர்களுக்கு வழங்க தீர்ப்பினை ஒத்திவைத்தார்

இதனையடுத்து பெரும் எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில் கடந்த ஒக்டோபர் மாதம் 18 ஆம் திகதி வெஸ்மினிஸ்டர் நீதவான் நீதிமன்றில் மீண்டும் மேற்படி வழக்கு விசாரணைக்கு எடுத்துகொள்ளப்பட்டு அன்றைய தினம் பிரதான சாட்சிகள் மூவரின் சாட்சியங்கள் மன்றில் பதிவு செய்யப்பட்டது.

தோடர்ந்து கடந்த நவம்பர் மாதம் 19 ஆம் திகதி 4 ஆவது இறுதியுமான நபரின் சாட்சியமும் மன்றில் எடுத்துக்கொள்ளப்பட்டதுடன் பிரியங்கா பெர்னான்டோ தரப்பிலிருந்து ஆஜரான ஒருவரின் சாட்சியமும் பெறப்பட்டது.

இதனையடுத்து இரு தரப்பு சாட்சிகளையும் விசாரணை செய்த தலைமை நீதிபதி வழக்கின் தீர்ப்பு இன்றைய தினம் (டிசம்பர் 6) வழங்கப்படும் என அறிவித்திருந்தார்.

Print Friendly, PDF & Email