SHARE

வடக்கு மாகாணத்தில் சட்டத்துக்குப் புறம்பான முறையில் இடம்பெறும் மணல் அகழ்வினைத் தடுத்து நிறுத்துமாறு கோரி சாவகச்சேரியில் கவனயீர்ப்புப் போராட்டம் முன்னெடுக்கப்பட்டது.

சாவகச்சேரி பேருந்து நிலையம் முன்பாக இன்று (சனிக்கிழமை)  மாலை இந்தப் போராட்டம் இடம்பெற்றுள்ளதுடன் மணல் அகழ்வைத் தடுத்து நிறுத்த வேண்டுமெனக் கோரி சாவகச்சேரி பிரதேச செயலாளரிடம் மகஜர் ஒன்றும் கையளிக்கப்பட்டது.

இதன்போது சட்டத்தைப் பாதுகாக்க வேண்டிய பொலிஸார் என்ன வேடிக்கை பார்க்கிறதா?, வளத்தை வனாந்தரமாக்கும் வனத்திணைக்களம் எதற்காக?, தமிழர் தாயகத்தைப் பாலைவனமாக்கப் போகிறீர்களா?, மண்மாபியாக்களை வளர்ப்பதா அரசின் நோக்கம்? உள்ளிட்ட பல்வேறு வாசகங்கள் எழுதப்பட்ட பதாதைகளைத் தாங்கியவாறு கோசங்களையும் எழுப்பியிருந்தனர்.

அத்தோடு இந்த மணல் அகழ்வை நிறுத்த வேண்டுமென்றும் இல்லையேல் தொடர்ந்தும் போராட்டங்களை முன்னெடுக்கப் போவதாகவும் போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் தெரிவித்தனர்.

இப்போராட்டத்தில் தமிழ் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் ஈஸ்வரபாதம் சரவணபவன், முன்னாள் மாகாண சபை உறுப்பினர்கள், உள்ளுராட்சி மன்ற உறுப்பினர்கள், ஆதரவாளர்கள், பொது அமைப்புக்களின் பிரதிநிதிகள் மற்றும் பொதுமக்கள் எனப் பலரும் கலந்து கொண்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.

Print Friendly, PDF & Email