SHARE

19 வயதில் கைது செய்யப்பட்ட அரசியல் கைதி ஒருவர் சிறையில் 46 வயதில் மரணம்

1993 ஆம் ஆண்டு செம்ரெம்பர் மாதம் 27 ஆம் திகதி சந்தேகத்தில் கைது செய்யப்பட்டு சிறையில் இருந்த அரசியல் கைதி ஒருவர் 01-01-2020 அன்று தனது 46 வயதில் சுகயீனம் காரணமாக இறந்துள்ளார்.

விடுதலைப்புலிகள் அமைப்பில் இருந்து விலகி வீட்டில் இருந்தபோது, கிழக்கில் 600 காவல்துறையினர் கொல்லப்பட்ட சம்பவத்தில் சந்தேகநபராக 1993 ஆண்டு தனது 19 வயதில் கைது செய்யப்பட்ட மட்டக்களப்பு மொறக்கொட்டான்சோலை தேவாலய வீதியைச் சேர்ந்த செல்லப்பிள்ளை மகேந்திரன் என்ற நபரே உயிரிழந்துள்ளார்.

நீரிழிவு நோயால் பாதிக்கப்பட்டிருந்த இவருக்கு சிறைச்சாலையில் சீரான மருத்துவ வசதிகள் இன்மையால் கடந்த சில மாதங்களாக கடுமையாக நோய்வாய்ப்பட்டிருந்த நிலையில், இரண்டு வாரங்களுக்கு முன் மகசீன் சிறையில் இருந்து வெலிக்கடை சிறைச்சாலை வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டிருந்தார் எனவும், பின்னர் அங்கிருந்து கொழும்பு தேசிய வைத்தியசாலைக்கு மாற்றப்பட்ட நிலையில் உயிரிழந்துள்ளார் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அதிகளவு காலம் சிறையில் இருந்த மூத்த அரசியல் கைதியாக இவர் இருந்துள்ளார். இவரது பெற்றோர் ஆரம்ப காலங்களில் இவரை வந்து பார்வையிட்டபோதும் பின்னர் அவர்களும் மகனின் நினைவுகளுடன் மரணித்து விட்டனர்.இதன் பின்னர் இவரை எவரும் சிறைச்சாலைக்கு வந்து பார்வையிடுவது கிடையாது.

600 காவல்துறையினர் சுட்டுக்கொலை செய்யப்பட்ட சம்பவத்தில் இவருக்கு ஒரு ஆயுள் தண்டனையும், 50 வருடங்கள் சிறைத்தண்டனையும் விதிக்கப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.

Print Friendly, PDF & Email