SHARE

பயங்கரவாதத் தடைச் சட்டத்தை அதன் சர்வதேச மனித உரிமைக் கடமைகளுக்கு மதிப்பளிக்கும் வகையில் சட்டத்தை மாற்றுவது என்ற அதன் உறுதிப்பாட்டை இலங்கை அரசு பின்பற்ற வேண்டும் என்று மனித உரிமைகள் கண்காணிப்பகம் தெரிவித்துள்ளது.

ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ தலைமையிலான அமைச்சரவை கடந்த ஆம் திகதி முன்மொழியப்பட்ட பயங்கரவாத எதிர்ப்பு சட்டத்தை வாபஸ் பெறுவதாக அறிவித்திருந்தது.

இந்நிலையில் இந்த விடயம் குறித்து அறிக்கையொன்றினை வெளியிட்டுள்ள மனித உரிமைகள் கண்காணிப்பகத்தின் தெற்காசியப் பிராந்தியப் பணிப்பாளர் மீனாக்ஷி கங்குலி, ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவும், புதிதாக நியமனம் பெற்றுள்ள ஏனைய அதிகாரிகளும் அண்மைக்காலமாக மனித உரிமைகள் சார்ந்த விவகாரங்களில் பெற்ற நன்மைகளை விரைந்து சீர்குலைக்கின்றனர் என சாடியிருக்கிறார்.

அத்தோடு மனித உரிமைகள் பாதுகாப்பு குறித்த உத்தரவாதத்தின் பேரில் ஐரோப்பிய ஒன்றியம் வர்த்தக வாய்ப்புக்களை இலங்கைக்கு வழங்கும் நிலையில், பயங்கரவாதத் தடைச் சட்டத்தை நீக்குமாறும் வலியுறுத்த வேண்டும் என்றும் அவர் குறிப்பிட்டிருக்கிறார்.

பயங்கரவாதத் தடைச்சட்டம் 1978 ஆம் ஆண்டு தற்காலிகமாக அறிமுகப்படுத்தப்பட்டிருந்த போதிலும் அது பின்னர் எண்ணற்ற தன்னிச்சையான கைது நடவடிக்கைகள் மற்றும் கைதிகள் சித்திரவதைகளுக்கு உட்படுத்தப்படல் என்பவற்றுக்கு வழிவகுத்தது.

இந்தச் சட்டமானது எப்போதைக்குமான ஒழுங்குபடுத்தப்பட்ட சித்திரவதைக்கு வழிவகுப்பதாக 2017 ஆம் ஆண்டில் மனித உரிமைகள் மற்றும் பயங்கரவாதத் தடுப்பு தொடர்பான ஐ.நா.வின் விசேட அறிக்கையாளர் சுட்டிக்காட்டினார்.

அதனால் ஒட்டுமொத்த சமூகமுமே புறக்கணிக்கப்படுகின்றதும், வன்முறைகளுக்கு இலக்காகின்றதும், தன்னிச்சையான கைது மற்றும் தடுத்துவைப்பு போன்றவற்றை எதிர்கொள்ள நேரிடும் என்றும் அவர் குறிப்பிட்டார்.

2015 ஆம் ஆண்டில் இலங்கையால் நிறைவேற்றப்பட வேண்டிய ஐக்கிய நாடுகள் சபையின் தீர்மானத்திற்கு ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன உடன்பட்டார். அதில் சர்வதேச சட்ட நியமங்களுக்கு அமைவான பயங்கரவாத எதிர்ப்புச் சட்டத்தின் மூலம் பயங்கரவாதத் தடைச்சட்டம் பதிலீடு செய்யப்பட வேண்டும் என்ற விடயமும் உள்ளடங்கியிருந்தது.

அதன்படி 2018 ஆம் ஆண்டில் பயங்கரவாத எதிர்ப்புச் சட்டமூலம் பாராளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்பட்டது. ஆனாலும் அது சட்டமாக்கப்படவில்லை. புதிய ராஜபக்ஷ அரசாங்கம் பயங்கரவாதத் தடைச்சட்டத்தையே தொடர்ந்தும் பேணுவதற்கு எதிர்பார்த்துள்ளதாக அறிவித்திருக்கிறது.

எது எவ்வாறிருப்பினும் பயங்கரவாத எதிர்ப்புச் செயற்பாடுகள்  சட்டத்தின் ஆட்சியின் அடிப்படை கொள்கைகளை நிலைநிறுத்துவதாகவும், சர்வதேச ரீதியில் ஏற்றுக்கொள்ளத் தகுந்ததாகவும் இருக்கவேண்டும்.

பல தசாப்த காலமாக பயங்கரவாதத் தடைச்சட்டமானது மிகக் கொடூரமான மனித உரிமை மீறல்களுக்கும், அமைதியாக எதிர்ப்பை வெளியிடுவதை ஒடுக்குவதற்கும் ஒரு சட்ட ரீதியான தன்மையை வழங்கி வந்திருக்கிறது.

அத்தகைய சட்டத்தை ராஜபக்ஷ அரசாங்கம் தழுவி நிற்பதென்பது இலங்கையர்களின் உரிமைகள் பெரும் ஆபத்தில் இருக்கின்றன என்பதைக் காண்பிக்கும் அறிகுறியே என்றும் அவர் அந்த அறிக்கையில் சுட்டிக்காட்டியுள்ளார்.

Print Friendly, PDF & Email