SHARE

தமிழில் தேசிய கீதம் பாடப்படமாட்டாது எனும் அரசாங்கத்தின் முடிவானது இலங்கையில் வாழும் தமிழை தாய்மொழியாகக் கொண்ட மக்கள் இரண்டாம் தரப் பிரஜைகளாக நடத்தப்படுவதன் வெளிப்பாடு என தமிழ் தேசியக் கட்சியின் தலைவர் ஸ்ரீகாந்தா தெரிவித்துள்ளார்.

இந்நிலையில், அரசாங்கத்தின் ஏற்பாட்டில் செய்யப்படும் சகல சுதந்திர தின நிகழ்வுகளையும் தமிழ் பேசும் மக்கள் புறக்கணிக்க வேண்டும் எனவும் அவர் கேட்டுக்கொண்டுள்ளார்.

யாழ். நல்லூரில் உள்ள கட்சியின் அலுவலகத்தில் இன்று (சனிக்கிழமை) இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பிலேயே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.

அவர் கூறுகையில், “எதிர்வரும் 4ஆம் திகதி நடைபெறவுள்ள இலங்கையின் சுதந்திர தினக் கொண்டாட்டத்தில், குறிப்பாக கொழும்பிலே நடத்தப்படவிருக்கிற கொண்டாட்டத்தில் தமிழிலே தேசிய கீதம் இசைக்கப்படாது என்கிற அறிவிப்பு அரசாங்கத்தின் சார்பிலே வெளியிடப்பட்டிருக்கிறது.

ஏற்கனவே, இது குறித்த தகவல் கடந்த சில வாரங்களுக்கு முன்பு வெளியானபோது தமிழ் தேசிய அரசியல் கட்சிகளின் தரப்பிலிருந்து அதற்கு எதிர்ப்பு வெளியிடப்பட்டிருந்தது.

அப்பாடியான சந்தர்ப்பத்திலே இது தொடர்பாக எந்தவொரு முடிவும் எடுக்கப்படவில்லை என்றே அரசாங்கத்தின் பொறுப்புவாய்ந்த அமைச்சர்கள் சிலர் பேசினார்கள். ஆனால், இப்பொழுது அரசாங்கத்தின் சார்பிலே திட்டவட்டமான அறிவிப்பு வெளியிடப்பட்டிருக்கிறது.

இந்த அறிவிப்பின் ஊடாக இலங்கையிலே தமிழை தாய்மொழியாகக் கொண்ட தமிழ் மக்களும் முஸ்லிம் மக்களும் இரண்டாம் தரப் பிரஜைகள் என்கிற தோரணையிலே அரசாங்கம் நடந்துகொள்கிறது என்ற தவிர்க்க முடியாத முடிவுக்கு நாம் வந்திருக்கிறோம்.

இந்த முறை இந்த அறிவிப்பு நன்கு ஆராயப்பட்ட பின்னர்தான் வெளியிடப்பட்டிருக்கிறது என்பதிலே சந்தேகம் இல்லை. இது இந்த நாட்டில் வாழ்கிற தமிழர்களையும் தமிழை தாய்மொழியாகக் கொண்டுள்ள முஸ்லிம் சகோதரர்களையும் உணர்ச்சிபூர்வமாக காயப்படுத்துகிற ஒரு நடவடிக்கை என்று நாங்கள் பகிரங்கமாக தெரிவிக்க நிர்ப்பந்திக்கப்பட்டிருக்கிறோம்.

இந்த நிலையில், சுய மரியாதை கொண்ட தமிழ் பேசும் மக்களைப் பொறுத்தமட்டில் நாம் ஒரேயோரு விதத்தில் தான் எமது உணர்வுகளை வெளிப்படுத்த முடியும்.

அந்தவகையில், எதிர்வரும் 4ஆம் திகதி கொழும்பில் அரசாங்கம் ஏற்பாடு செய்துள்ள சுதந்திர தின நிகழ்வுகள் மட்டுமல்லாது, இலங்கையின் அனைத்து மாகாணங்களிலும் அரசாங்கத்தால் ஏற்பாடு செய்யப்பட்டுள்ள நிகழ்வுகளையும் தமிழ் பேசும் மக்கள் புறக்கணிக்க வேண்டுமென நாம் கேட்டுக்கொள்கின்றோம்” என்று தெரிவித்துள்ளார்.

Print Friendly, PDF & Email