SHARE

புலனாய்வு ஊடகவியலாளர் பில் மில்லர் எழுதிய நூலில் அதிர்ச்சி தகவல்

PHIL MILLER

1980 களில் தமிழீழ விடுதலைப்புலிகளுக்கு எதிரான யுத்தத்தில் இந்திய இராணுவத்தினருக்கு, பிரித்தானிய தனியார் கூலிப்படையொன்றின் விமானிகள் உதவினர் என புதிய நூலொன்றில் முதல் தடவையாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

புலனாய்வு ஊடகவியலாளரான பில் மில்லர் எழுதியுள்ள KEENIE MEENIE எனும் நூலிலேயே இந்த அதிர்ச்சித் தகவல் வெளியிடப்பட்டுள்ளது.

கீனி மீனி சேர்விஸ் (Keenie Meenie Services) எனும் பிரலித்தானிய கூலிப்படையினர் இலங்கையில் பணியாற்றுவதை இந்திய இராஜதந்திரிகள் பகிரங்கமாக கண்டித்த போதிலும் மேற்படி படையினர் உதவியை ஐ.பி.கே.எவ். எனும் இந்திய அமைதிப்படையினர் பெற்றனர் என மேற்படி நூலில் குறிப்பிடப்பட்டுள்ளது.

கீனி மீனி சேர்விஸ் என்பது பிரித்தானிய இராணுவத்தின் S.A.S எனும் விசேட வான் சேவைகள் பிரிவின் ஓய்வு பெற்ற அதிகாரிகளால் 1970 களில் ஸ்தாபிக்கப்பட்ட தனியார் இராணுவ ஒப்பந்த நிறுவனமாகும்.

மேற்படி நிறுவனமானது 1983 ஆம் ஆண்டில் ஓமான் சுல்தானின் படையினருக்கு பயிற்சியளிப்பதற்கான ஒப்பந்தத்தை பெற்றது.

இந்நிலையில் பிரித்தானிய கூலிப்படையினர் இலங்கையில் பணியாற்றுவதை இந்திய இராஜதந்திரிகள் பகிரங்கமாக கண்டித்த போதிலும் மேற்படி கூலிப் படையினரின் உதவியை ஐ.பி.கே.எவ் எனும் இந்திய அமைதிப்படையினர் பெற்றனர் என தனது ஆய்வுகள் மூலம் தெரியவந்துள்ளது என பில் மில்லர் தனது நூலில் தெரிவித்துள்ளார்.

1987 ஆம் ஆண்டு இந்திய – இலங்கை ஒப்பந்தம் கையெழுத்திடப்பட்ட பின்னர் கீனி மீனி சேர்விஸ் கூலிப்படையினரை இந்திய அமைதிப்படையினர் இரகசியமாக பயன்படுத்துவது சுமார் 4 மாதகாலம் நீடித்தது என அதில் மேலும் குறிப்பிட்டுள்ளார்.

பிரித்தானிய இராணுவத்தின் முன்னாள் கொமாண்டர்களில் ஒருவரான ஜிம் ஜோன்சன் என்பவரே கீனி மீனி சேர்விஸ் நிறுவனத்தை நடத்தியுள்ளார்.

1987 நவம்பர் 27 ஆம் திகதி கீனி மீனி சேர்விஸின் கடைசி விமானி வாபஸ் பெறப்படும்வரை யாழ்.குடாநாட்டில் இந்திய அமைதிப்படையினரின் நடவடிக்கைக்கான வான் வழி உதவிக்காக இலங்கை விமானப்படையினரின் ஹெலிகொப்டர்களை பிரித்தானிய கீனி மீனி சேர்விஸ் விமானிகளே செலுத்தினர் என ஜிம் ஜோன்சன் தனக்கு உறுதிப்படுத்தினார் என இலங்கைக்கான அப்போதைய பிரித்தானிய உயர்ஸ்தானிகர் டேவிட் கிளாட்ஸ்டோன் தந்தியொன்றில் குறிப்பிட்டுள்ளார் எனவும் அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதேவேளை, இலங்கையின் விசேட அதிரடிப்படையினருக்கும் கீனி மீனி சேர்விஸ் பயிற்சியளிப்பதற்கு பிரித்தானிய அரசு 1984 இல் அனுமதியளித்தது எனவும் அந்நூலில் குறிப்பிட்டுள்ளார்.

புலனாய்வு ஊடகவியலாளர் பில் மில்லர் எழுதிய மேற்படி KEENIE MEENIE நூல் அறிமுகம் நாளை (9) ஞாயிற்றுக்கிழமை லண்டனில் Indian YMCA, 41 Fitzroy Square, W1T 6AQ எனும் முகவரியில் பிற்பகல் 2.30 மணிக்கு நடைபெறவுள்ளமை குறிப்பிடத்தக்கது.

Print Friendly, PDF & Email