SHARE

நல்லாட்சி அரசாங்கத்தின் இணை அனுசரணையுடன் ஐக்கிய நாடுகள் சபையின் மனித உரிமைகள் பேரவையில் நிறைவேற்றப்பட்ட தீர்மானம் 30/1 இலிருந்து விலக அரசாங்கம் முடிவு செய்துள்ளது என பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ தெரிவித்துள்ளார்.

இந்த விடயம் தொடர்பாக இன்று (புதன்கிழமை) அறிக்கைவெளியிட்டுள்ள பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ, கூட்டமைப்பு, மக்கள் விடுதலை முன்னணி, ஐக்கிய தேசிய கட்சி ஆகியவை இணைந்து இழைத்த வரலாற்று துரோகத்தின் காரணமாகவே இராணுவ அதிகாரிக்கு எதிரான தடை விதிக்கப்பட்டுள்ளது என்றும் சுட்டிக்காட்டியுள்ளார்.

2015 ஆம் ஆண்டு ஐ.நா மனித உரிமைகள் பேரவையில் இலங்கைக்கு எதிராக நிறைவேற்றப்பட்ட 30/1 பிரேரணைக்கு இணை அனுசரணை வழங்கியமை மிகப்பெரிய காட்டிக்கொடுப்பு என பிரதமர் தெரிவித்துள்ளார்.

இலங்கை படையினர் மனித உரிமைகளை மீறியதாகக் குற்றம் சுமத்தப்பட்டு தயாரிக்கப்பட்ட அறிக்கை அந்த பிரேரணையில் அங்கீகரிக்கப்பட்டிருந்ததாக பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ சுட்டிக்காட்டியுள்ளார்.

இவ்வாறு ஆதாரமற்ற குற்றச்சாட்டுக்களின் அடிப்படையில் இந்த தடை விதிக்கப்பட்டுள்ளதாகவும் எனவே 30/1 தீர்மானத்தில் இருந்து விலகுவதற்கு எமது அரசாங்கம் முடிவு செய்துள்ளது என்றும் பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ குறிப்பிட்டுள்ளார்.

இராணுவத் தளபதி மற்றும் அவரது குடும்பத்தினருக்கு அமெரிக்க தடை வித்திருப்பதானது இந்த நாட்டில் அரசியல் பிளவு என்பது ஒருபுறம் இருக்க மறுபுறம், நாட்டைக் காட்டிக் கொடுக்க துரோகிகள் காத்திருப்பதாகவும் அவர் குற்றம் சாட்டினார்.

மேலும் நாட்டைக் காட்டிக் கொடுக்க காத்திருக்கும் இலங்கையில் பிறந்த துரோகிகளுக்கும் பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ எச்சரிகை விடுத்துள்ளார்.

Print Friendly, PDF & Email