SHARE

காணாமலாக்கப்பட்ட தனது பேரப்பிள்ளைக்கு நீதிகோரி கடந்த மூன்றுவருடங்களாக முல்லைத்தீவில் இடம்பெற்றுவரும் தொடர் போராட்டத்தில் பங்கெடுத்திருந்த தாயார் ஒருவர் நேற்று (26) மரணமடைந்துள்ளார் .

செல்வம் சிவபாக்கியம் என்ற தாயாரே இவ்வாறு மரணமடைந்துள்ளார் .

முகமாலையை பிறப்பிடமாகவும் மந்துவில் புதுக்குடியிருப்பு முல்லைத்தீவை வதிவிடமாகவும் கொண்ட செல்வம் சிவபாக்கியம் என்ற தாயே நேற்று காலமானார். இவரின் இறுதிக் கிரியை இன்று (27) காலை அவரது இல்லத்தில் நடைபெற்றது .

தனது மகளின் மகனான அல்பிரட் தினு என்ற தனது பேரப்பிள்ளை 2009 இறுதியுத்த பகுதியில் வட்டுவாகல் பகுதியில் காணாமல் ஆக்கப்பட்ட நிலையில் ஏக்கத்தோடு ஏறத்தாழ மூன்று ஆண்டுகள் மழை வெயில் பனி என்று எதையுமே பொருட்படுத்தாமல் முல்லைத்தீவில் தகரக் கொட்டில்களில் நோய் நொடிகளுக்கு மத்தியில் தொடர்போராட்டத்தில் ஈடுபட்டு வந்த இவர் கடந்த சில மாதங்களாக மிக மோசமாக நோய்வாய்ப்பட்டிருந்தார்.

தனது மகளின் மகனாக பேரன் இருக்கின்ற போதிலும் தனது மகனாகவே தன்னுடன் பேரப்பிள்ளையை வளர்ந்துவந்த இவர் பேரன் காணாமல் ஆக்கப்பட்ட நாளிலிருந்தே அவரைத்தேடி பல்வேறு இடங்களுக்கும் முறையிட்டு தேடிவந்தார் .

தனது இரண்டு பிள்ளைகளை மாவீரர்களாக மண்ணுக்கு ஈர்த்த இந்த தாய் இறந்துபோன பிள்ளைகளை பற்றிய கவலை இருந்தாலும் காணாமல் ஆக்கப்பட்ட தனது பேரன் வந்தால் தான் தனக்கு நிம்மதி எனவும் அடிக்கடி கூறிவந்தார் .

தொடர் போராட்டம் ஆரம்பிக்கப்பட்ட இதுவரையான காலப்பகுதியில் இவருடன் சேர்த்து இதுவரையில் 60 க்கும் மேற்பட்ட காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவுகள் மரணமடைந்துள்ளனர்.

Print Friendly, PDF & Email