SHARE
ச.அற்புதன்
அரசியல் ஆய்வாளர்
LL. B (Hons) & LPC with LL.M (cont)

இலங்கைத் தீவில் நடைபெற இருக்கும் பாராளுமன்ற தேர்தலும் அதில் தமிழ் மக்கள் அமைக்க வேண்டிய தேர்தல் வியூகம் தொடர்பாகவும் ஆய்வு செய்கின்ற வகையில் இவ்வாக்கம் அமைகின்றது. தேர்தல் காலமென்றால் அரசியல் கட்சிகளே இவ்வாறான தேர்தல் வியூகங்களை அமைப்பது வழமை.

இருப்பினும் 2009 இற்குப் பின்னர் தேர்தல் காலங்களில் வழங்கப்பட்ட வாக்குறுதிகளை வெற்றி பெற்ற கட்சி அல்லது கட்சிகள் பேண மறுத்தமையால் மக்களாகிய நாம் இம்முறை தேர்தலில் எதற்காக வாக்களிக்க வேண்டும்? எவ்வாறு வாக்களிக்க வேண்டும்? யாருக்கு வாக்களிக்க வேண்டும்? என்பதை மீள் பரிசீலனை செய்ய வேண்டிய கட்டாயத்தில் உள்ளோம்.

இலங்கையின் அரசியல் யாப்பினை தமிழ் மக்களாகிய நாங்கள் எந்த சந்தர்ப்பத்திலும் ஏற்றுக் கொள்ளவில்லை. இவ் அரசியல் யாப்பு தமிழர் என்ற தேசிய இறையாண்மை கொண்ட இனத்தினை இலங்கைத் தீவின் சிறுபான்மை இனமாக மாற்றி, இலங்கையில் தமிழ் மொழி பேசும் மக்கள் ஆட்சியை எந்த வேளையிலும் நிறுவமுடியாத ஓர் தன்மையை கொண்டுள்ளது. அதுமட்டுமன்றி பௌத்த சிங்கள பேரினவாத சிந்தனை வேரூன்றி இருக்கின்ற இலங்கைத் தீவில் தமிழ் மொழி பேசும் மக்களின் ஆதரவு இன்றியே ஆட்சி அமைக்கக்கூடிய ஓர் அரசியல் யாப்பே இலங்கையில் இப்பொழுது காணப்படுகின்றது.

225 நாடாளுமன்ற உறுப்பினர்களை கொண்ட இலங்கையின் நாடாளுமன்றத்தில் 196 அங்கத்தவர்கள் பொது வாக்கெடுப்பினூடாகவும் 22 அங்கத்தவர்கள் தேசிய அளவில் கட்சிகள் பெறும் வாக்கு எண்ணிக்கையினை அடிப்படையாக கொண்டு தேசிய பட்டியலின் ஊடாகவும் தெரிவு செய்யப்படுகின்றனர். இவ்வாறு தெரிவு செய்யப்படும் 225 நாடாளுமன்ற உறுப்பினர்களில் ஏறக்குறைய 175 மேற்பட்ட உறுப்பினர்கள் சிங்கள மொழியை தாய் மொழியாக கொண்டவர்கள். இவ்வாறு இருக்க, தமிழ் மொழி பேசும் மக்களுக்கு சாதகமாக இலங்கையின் நாடாளுமன்றம் செயற்படும் என்று சிந்திப்பது முட்டாள் தனமானதாகவே இருக்கும்.

இலங்கையில் சட்டங்களை உருவாக்கக் கூடிய தன்மையும் அரசியல் யாப்பில் தாம் விரும்பும் வகையில் மாற்றங்களை செய்யக்கூடிய தன்மையும் இத்தகைய மாற்றங்களை நாடாளுமன்றத்தில் சிறுபான்மையாக இருக்கும் தமிழ் மொழி பேசும் மக்களின் ஆதரவு இன்றியே செயற்படுத்த கூடிய அதிகாரம் அல்லது ஆளுமையும் இச் சபைக்கு உண்டு. இவ்வாறு இருக்க, இலங்கையின் நாடாளுமன்றம் தமிழ் பேசும் மக்களுக்கு சாதகமாக இருக்கும் என்று சிந்திப்பதும் அதை ஒரு சனநாயக கட்டமைப்பாக எண்ணுவதும் எவ்வகையில் நியாயமானதாக அமையும்?

நாடாளுமன்றம் செல்லும் தமிழ் மொழி பேசும் அங்கத்தவர்கள் அங்கு கையாலாகாத் தன்மையுடனேயே காணப்படுகின்றனர். இருப்பினும் ஒரு சிலர் தமது ஆதங்கங்களை தெரிவிக்கும்போது அது செவிடன் காதில் ஊதிய சங்கு போன்று பயனற்றதாகவே இருக்கின்றது. மக்களுக்கு முன் மாதிரியாக இருக்க வேண்டிய நாடாளுமன்றம் இலங்கையில் சனநாயக மறுப்பு அரங்கேறும் முதல் இடமாகவும் சில சமயங்களில் வன்முறைக்கு வித்திடும் தளமாகவுமே காணப்படுகின்றது.

ஆகவே இத்தகைய சனநாயக விரோத கொள்கைகளை கொண்ட இலங்கை நாடாளுமன்ற தேர்தலில் நாம் ஏன் போட்டியிடவேண்டும் என்ற கேள்வி வாசகர் மனங்களில் எழுவதை என்னால் உணர முடிகின்றது.

எமக்கான உரிமைகளை, அதிகாரங்களை, சம அந்தஸ்த்தை மற்றும் முழுமையான அபிவிருத்தியை தரும் ஒரு கட்டமைப்பாக இந்த நாடாளுமன்றம் இல்லாவிட்டாலும் நாம் இந்த நாடாளுமன்ற தேர்தலில் விரும்பியோ விரும்பாமலோ பங்குபற்ற வேண்டிய தேவை எமக்குண்டு.

இதில் தமிழ்த் தேசிய சிந்தனை கொண்ட உறுப்பினர்களை நாம் தெரிவு செய்யாவிட்டால் தமிழ் தேசிய விரோத கொள்கை கொண்ட சிங்களத்திற்கு ஏவல் செய்யும் உறுப்பினர்கள் பாராளுமன்றம் தெரிவாவதற்கு நாமே வழியமைத்ததாய் ஆகிவிடும். மேலும், இலங்கை பேரினவாதத்தின் எடுபிடிகளாக செயற்படும் இவர்கள் சிங்களத்தின் கருத்துருவாக்கத்தை எம் மக்கள்மீது திணிக்க முற்படுவர். இத்தகைய போக்கு எமது 70 வருட இலட்சிய போரை நீர்த்துப் போக செய்துவிடும்.

இதற்கு ஒரு எடுத்துக்காட்டு, இலங்கை பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ அவர்கள் இந்திய ஊடகம் ஒன்றுக்கு வழங்கிய செவ்வியில் இலங்கையில் தமிழருக்கு அரசியல் பிரச்சனை இல்லை தமிழ் அரசியல் வாதிகளே தனி நாட்டு கோரிக்கையினை தமிழ் மக்கள் மீது திணிக்கின்றனர் என்று கூறியுள்ளார். இதே பாணியிலேயே ஒரு சில தமிழ் அரசியல் வாதிகளும் யதார்த்த அரசியலுக்கு வரும்படி மக்களை கோருகின்றனர். மேலும், இவர்கள் தமிழ் தேசிய சிந்தனையுள்ள அரசியல் தலைவர்களை ஓரம் கட்டும் செயல் திட்டத்திலும் இறங்கியுள்ளனர்.

அண்மையில் இலங்கை பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ அவர்கள் தனது அரசியல் வாழ்வின் 50 ஆவது ஆண்டு நிறைவை கொண்டாடும்போது, 2005 ஆம் ஆண்டில் மக்கள் தமக்கு யுத்தத்தை முடிவுக்கு கொண்டுவரும்படி கோரிக்கை விடுத்ததாகவும் இதனாலேயே தாம் யுத்தத்தை சர்வதேச அழுத்தங்களை புறந்தள்ளி நடத்தியதாக கூறியிருந்தார். இதில் குறிப்பிடக் கூடிய விடயம், அவர் பிரதமர் ஆவதற்கு தமிழ் மக்கள் ஆணை வழங்கவில்லை, அவ்வாறெனில் இவர் சிங்கள மக்களின் கோரிக்கையினை ஏற்று போர் நடத்தி இருக்கின்றார் என்ற முடிவுரைக்கு எம்மால் வரமுடிகின்றது என்பது மட்டுமல்ல தன்னை சிங்களத்தின் பிரதமராக மட்டுமே தற்பொழுதும் இவர் சிந்திக்கின்றார் என்பதும் தெளிவு.

ஆகவே 50 வருட அரசியல் அனுபவம் கொண்ட மகிந்த இராஜபக்ச அவர்கள் ஆயினும் சரி ஏனைய சிங்களத் தலைவர்களாயினும் சரி அல்லது இவர்களுடன் திரைமறைவில் அல்லது திரைக்கு முன்னால் இயங்கும் யதார்த்தவாத தமிழ் அரசியல்வாதிகளாயினும் சரி,

உங்களிடம் தமிழ் மக்களாகிய நாம் முன்வைக்கும் ஒரே கேள்வி:

நீங்கள் உண்மையான சனநாயக வாதிகளாக இருந்தால், தமிழ் மக்களின் மனங்களை அறியும் வகையில் ஒரு சர்வசன வாக்கெடுப்பை சர்வதேச மேற்பார்வையில் நடத்துவதற்கு தயாரா? என்பதே ஆகும். ஆகவே வெறுமனே எமது விருப்பம் என்னவென்று அறியாமல் அல்லது அதை செவி சாய்க்காமல் சிங்கள தேசம் தாமே ஒரு முடிவுக்கு வருவதை எம்மால் ஏற்றுக்கொள்ள முடியாது.

ஆகவே எமது குரலாக சர்வதேச இராஜ தந்திரிகளுடன் பேசுவதற்கு ஈழத்தில் மக்கள் ஆணை பெற்ற தரப்புகள் இருக்கவேண்டும் என்ற காரணத்திற்காகவும் சிங்கள பேரினவாத சக்திகளின் கருத்தினை உள்வாங்கிவரும் தமிழ் தலைமைகளை நாம் பாராளுமன்றம் அனுப்பக்கூடாது என்ற காரணத்திற்காகவும் நாம் இத்தேர்தலில் போட்டியிடவேண்டும்.

அவ்வாறெனில் மக்கள் எவ்வாறான தமிழ்த் தலைமைகளை தெரிவு செய்யலாம் அல்லது யாருக்கு வாக்களிக்கலாம் என்ற கேள்வி எழலாம். இம்முறை தமிழ் மக்களின் ஏகோபித்த பிரதிநிதியாக ஒரு கட்சியை பாராளுமன்றம் அனுப்ப முடியாது. காரணம் இன்னும் 11 வருடங்கள் எமக்கான விடியல் வரும் என்ற எதிர்பார்ப்பில் எம்மால் காத்திருக்க முடியாது. கீரைக் கடைக்கும் எதிர் கடை வேண்டும் என்பார்கள். ஆகவே, எமது பார்வையில் தமிழ் தேசிய கொள்கைகளுடன் பயணிக்கும் ஒன்றுக்கு மேற்பட்ட கட்சிகள் இம்முறை தேர்தலில் களமிறங்குகின்றன.

எமது உரிமைகளை விட்டுக்கொடுக்காத ஒன்றுக்கு மேற்பட்ட கட்சிகளில் இருந்து ஒரே நேர்கோட்டில் பயணிக்க கூடிய ஒரே சிந்தனையுள்ள வேட்பாளர்கள் தெரிவாகும்போது எமது இலக்கை நோக்கிய பயணத்தினை தவறாமல் அடையமுடியும் என்ற நம்பிக்கை உள்ளது. வெறுமனே உரு கட்சியை நாம் தெரிவு செய்து பின்னர் எம்மை நாமே நொந்துகொள்வதிலும் பார்க்க இத்தகைய தெரிவே இன்றைய காலத்தின் தேவையாக உள்ளது.

ஆகவே இக் கட்சிகளில் இருந்து தமிழ் தேசிய சிந்தனையுள்ள மற்றும் ஆளுமை மிக்க மிகச்சரியான நபர்களை நாம் தெரிவு செய்யவேண்டும். ஒவ்வொரு பிரதேசத்திலும் இத்தகைய இனப்பற்றும் ஆளுமை உள்ளவர்களையும் இனம் கண்டு அவர்களை பாராளுமன்றம் அனுப்புவதே மக்களாகிய எமது கடமை. சுருங்கக் கூறின் எமக்கான தலைவர்களை தெரிவு செய்யாமல் எமக்கு சேவகம் செய்வதில் வல்லவர்களை பாராளுமன்றம் அனுப்பவேண்டும்.

வடக்கிலும் கிழக்கிலுமாக குறைந்தது 23 அல்லது 24 பாராளுமன்ற உறுப்பினர்கள் தெரிவு செய்யப்படவேண்டும். தெரிவு செய்யப்படும் நபர்கள் எமது எதிர் பார்ப்புக்களை பூர்த்தி செய்யும் வல்லமை கொண்டவர்களாக இருக்க வேண்டும். பலர் தேர்தல் நேரங்களில் மட்டுமே எமது அயல் நாட்டில் நடப்பது போன்று வாக்குறுதிகளையும் சலுகைகளையும் வாரி வழங்குவார்கள். வழங்கும்போது அதனை நாம் பெறுவதிலும்கூட தப்பில்லை அதற்கு நாம் விலை போகாமல் இருப்பதே முக்கியம். ஆகவே இவர்களை இனம் கண்டு புறம்தள்ளி சரியானவர்களை தெரிவு செய்வதே மக்களாகிய எமது கடமை.

இவ்வாறு தெரிவு செய்யப்படும் நபர்கள் எமது 70 வருட அரசியலை உணர்ந்தவர்களாக தமிழருடைய தீராத தாகம் தீர்க்கும் நபர்களாக இருக்கவேண்டும். தமது சொந்த கருத்துக்களை தவிர்த்து மக்களின் வலி உணர்ந்து அவர்கள் உணர்வுகளை பிரதி பலிப்பவர்களாகவும் அம் மக்களின் குரல்களை சர்வதேச அரங்கில் வெளிப்படுத்தக் கூடியவர்களாகவும் இருக்கவேண்டும்.

சுருங்கக் கூறின்: “இதனை இதனால் இவன்முடிக்கும் என்றாய்ந்து
அதனை அவன்கண் விடல்”

இவ்வாறு தெரிவு செய்யப்படும் உறுப்பினர்கள் எமக்கான அரசியல் தீர்வு விடயத்திலும் பிரதேச அபிவிருத்தி, முன்னால் போராளிகளுக்கான வாழ்வாதாரங்களை மேம்படுத்தல்இ சுய தொழிலை ஊக்குவித்தல் மற்றும் தன்னிறைவு பொருளாதாரத்தை மேம்படுத்தல் போன்ற விடயங்களில் ஒருங்கிணைந்து பயணிக்க கூடியவர்களாக இருக்கவேண்டும். அதுமட்டுமன்றி புலம்பெயர் தமிழ் அமைப்புக்களுடனும் நல்லுறவை பேணி காத்திரமான பணிகளில் ஈடுபடவும் வேண்டும். இவை அனைத்துக்கும் மேலாக சர்வதேச இராஜதந்திரிகளை சந்தித்து எமக்கான நீதியை பெறும் ஆற்றல் கொண்டிருக்கவேண்டும். குறிப்பாகஇ வருகின்ற 5 வருடத்தில் இவை அனைத்தையும் நிறைவேற்ற வேண்டும். இதுவே நாம் இவர்களுக்கு வழங்கும் கால அவகாசம்.

எனவே இத்தகைய உறுப்பினர்களை தெரிவு செய்ய மக்களாகிய நாம் வாக்கினை வழங்கும் போது எந்த தேசிய கட்சிக்கோ தமிழ்த் தேசிய விரோத செயற்பாட்டாளர்களுக்கோ வாக்குகள் சென்றுவிடாமல் துல்லியமாக வாக்களிப்பதே எமது கடமை. தேசிய பட்டியலில் கூட இந்த வேட்பாளர்கள் உள் நுழையா வண்ணம் வடக்கு கிழக்கு மக்கள் வாக்குகளை வழங்கவேண்டும். வாக்களிக்காமல் இருந்தோமானால் உங்கள் வாக்குகளை வேறொருவர் பாவித்து வாக்கு மோசடியில் இறங்கக் கூடும். இது நாம் விரும்பாத ஒருவரை நாமே எமது தேர்தல் புறக்கணிப்பால் தெரிவு செய்ய வழியமைக்கும். ஆகவே, நூறு விகிதம் வாக்குப்பதிவு தமிழர் தாயகத்தில் இடம்பெறவேண்டும்.

சுருக்கமாகக் கூறின் அரசியல்வாதிகள் எம்மிடம் பிரச்சாரத்திற்கு வருமுன்னரே நாம் யாரை தெரிவு செய்யவேண்டும் என்ற தேர்தல் வியூகத்தை இப்பொழுதே வகுத்திடுங்கள். தேர்தல் அன்று வாக்கு என்னும் ஆயுதத்தை பயன்படுத்தி நாம் விரும்பும் வேட்பாளரை உளமார தெரிவு செய்து சர்வதேச இராஜதந்திர களத்திற்கு கொண்டுவருவோம். எமது உரிமை காத்து புதுயுகம் படைத்திட வரும் தேர்தலில் வழி அமைப்போம்.

Print Friendly, PDF & Email