SHARE

பிரித்தானியாவில் அரசியல் தஞ்ச கோரிக்கை (Political Asylum) அடிப்படையில் இலங்கையருக்கு வழங்கப்பட்ட அகதி அந்தஸ்த்தை மீள் பரிசீலனை செய்யும் புதிய நடைமுறையை பிரித்தானிய உள்விவகார அமைச்சு (Home Office) ஆரம்பித்துள்ளது.

அரசியல் தஞ்ச கோரிக்கை அடிப்படையில் 5 வருட முடிவில் எந்த வித பாரிய பிரச்சனையும் இல்லாமல், இலகுவாக நிரந்தர வதிவிட உரிமையை (PR) பெற முடிந்திருந்த நிலையில் தற்போது புதிய நடைமுறை ஒன்றை உள்விவகார அமைச்சு உருவாக்கி உள்ளது.

இந்நிலையில், இலங்கை அகதிகள் விவகாரத்தில் பிரித்தானிய உள்விவகார அமைச்சின் புதிய நடைமுறை தொடர்பில் சட்ட ஆலோசகர் கீத் குலசேகரம் அவர்களிடம் தொடர்புகொண்டு கேட்டபோது, இது பற்றி யாரும் அச்சம் கொள்ளத்தேவையில்லை என்று தெரிவித்த அவர்  பின்வரும் விளக்கத்தையும் ஆலோசனையையும் வழங்கி உள்ளார்.

பிரித்தானியாவில் அரசியல் தஞ்ச கோரிக்கை (Political Asylum) அடிப்படையில் இலங்கையருக்கு வழங்கப்பட்ட அகதி அந்தஸ்த்தை (Refugee Status) மீள் பரிசீலனை செய்யும் புதிய நடைமுறையை பிரித்தானிய உள்விவகார அமைச்சு (Home Office) ஆரம்பித்துள்ளது. 

ஒரு நாடு தான் வழங்கிய அகதி அந்தஸ்தை இடை நிறுத்துவதற்கான அதிகாரத்தை ஜெனீவா அகதிகள் பிரகடனம் 1951 (Geneva Refugee Convention) இன் சரத்து (Article) 1(C)5 வழங்குகிறது. இது பிரித்தானியாவின் குடிவரவு விதி (Immigration Rule) பத்தி 339A(v) யின் பிரகாரம் பிரித்தானியாவில் நடைமுறைப்படுத்தப்பட்டுள்ளது. 

இதுவரைகாலமும் தமது அரசியல் தஞ்ச கோரிக்கைகளில் வெற்றிபெற்று, அதன் அடிப்படையில் தங்குமிட அனுமதி கிடைக்கப்பெற்றவர்கள் 5 வருட முடிவில் எந்த வித பாரிய பிரச்சனையும் இல்லாமல், இலகுவாக நிரந்தர வதிவிட உரிமையை (PR) பெற முடிந்தது. ஆனால் தற்போது புதிய நடைமுறை ஒன்றை உள்விவகார அமைச்சு உருவாக்கி உள்ளது.

அதாவது, நிரந்தர வதிவுரிமை விண்ணப்பிக்கும் போது, தற்போதும் உங்களுக்கு இலங்கையில் உயிர் ஆபத்து உள்ளதா, எதற்காக உங்களுக்கு வழங்கப்பட்ட அரசியல் தஞ்சம் நீடிக்கப்பட வேண்டும் என்ற கேள்விகளை எழுப்பி, அதன் அடிப்படையில் வழங்கப்பட்ட வதிவிட உரிமையை மீளாய்வு செய்து (Review), அதன் அடிப்படையிலேயே நிரந்தர உரிமையை வழங்குவதா இல்லயா என தீர்மானிக்கும் திட்டத்தை நடைமுறைப்படுத்தி உள்ளனர்.

இந்த கேள்விகள் ஏற்கனவே இந்த விண்ணப்ப படிவத்தில் இருந்த போதிலும், இவ்வளவு காலமும் அவற்றுக்கு முக்கியத்துவம் வழங்கப்பட்டது மிகவும் அரிது. ஆயினும், தற்போது அவற்றுக்கு முக்கியத்துவம் வழங்கப்பட ஆரம்பித்துள்ளார்கள்.

கடந்த மே மாதம் பிரித்தானிய உள்விவகார அமைச்சினால் வெளியிடப்பட்ட அறிக்கையில் (County Policy and Information Note – Sri Lanka: Tamil Seperatism) இலங்கையில் ஏற்பட்ட ஆட்சி மாற்றங்களின் பின்னர், இலங்கையில் தற்போது மனித உரிமை மீறல்கள் குறைந்துள்ளன என்றும், புலம்பெயர் அரசியல் செயற்பாட்டாளர்களுக்கு பெரியளவில் அச்சுறுத்தல் இல்லை என்றும் குறிப்பிடப்பட்டுள்ளது.

இது தவறான கருந்து என்று சட்டவாளர்களும் மனித உரிமை செயற்பாட்டாளர்களும் இதற்கு எதிரான நடவடிக்கைகளை எடுத்துள்ள போதிலும், இந்த தகவல் அடிப்படையில் ஆரம்ப அரசியல் விண்ணப்பங்களை சிலவற்றை உள்விவகார அமைச்சு நிராகரித்துள்ளது.

அதேபோல இந்த தகவலை அடிப்படையாக கொண்டு நிரந்தர வதிவிட விண்ணப்பங்களையும் பரிசீலிக்கும் நடைமுறையில் மாற்றத்தை கொண்டுவர முயற்சித்துள்ளார்கள். இந்த ரீதியில், நிரந்தர வதிவிட விண்ணப்பங்கள் பல மாதங்களாக இழுத்தடிப்பு செய்யப்பட்ட பின்னர், தற்போது, சில விண்ணப்பதாரிகளுக்கு “அரசியல் தஞ்சத்தை இடைநிறுத்தும் நோக்கம் பற்றிய அறிவிப்பு” (Notification of Intention to Cease Refugee Status) என்ற தலைப்பிலான கடிதங்கள் அனுப்பி வைக்கப்பட்டுள்ளன.

சுமார் 8-10 பக்கங்கள் நீளமான இந்த கடிதங்களில், விண்ணப்பதாரியின் ஆரம்ப அரசியல் தஞ்ச விண்ணப்பத்தில் உள்ள தகவல்கள் ஆழமாக மீள ஆராயப்பட்டு இருப்பதுடன், அதற்கும் தற்போதைய நிரந்தர வதிவிட விண்ணப்பத்தில் வழங்கப்பட்ட தகவல்களுக்கும் இடையே உள்ள முரண்பாடுகளும் சுட்டிக்காட்டப்பட்டுள்ளன. அத்துடன், விண்ணப்பதாரி தற்போது இலங்கை அரசுக்கு எதிரான அரசியல் செயற்பாடுகளில் இருந்து ஒதுங்கி இருப்பது காரணமாக அவர் இனிமேல் இலங்கை அதிகரிகளால் தேடப்படமாட்டார் என்ற வாதம் மற்றும் அவர் இலங்கை அரசின் “நிறுத்தல் பட்டியல்” (Stop List) இல் இடம்பெறவில்லை என்ற கருத்தும் முன் வைத்துள்ளது.

அத்துடன் விண்ணப்பதாரி மருத்துவ சிகிச்சைகளை தொடரவில்லை  என்பதும் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.  இந்த காரணங்கள் அடிப்படையிலும், இலங்கையில் ஏற்பட்டுள்ள தற்போதய அரசியல் மாற்றங்கள் அடிப்படையிலும், ஏற்கனவே வழங்கப்பட்ட அகதி அந்தஸ்தை இடைநிறுத்த உள்விவகார அமைச்சு எண்ணியிருப்பதாகவும் இந்த கடிதங்கள் குறிப்பிடுகின்றன.

இவ்வாறான கடிதங்கள் வந்துள்ள போதிலும் யாருடைய விண்ணப்பங்களும்  இதுவரை நிராகரிக்கப்பட்டதாக அறியப்படவில்லை. பதிலாக, இந்த பிரேரணையை விண்ணப்பதாரி ஏற்றுக்கொள்ளவில்லையாயின், வதிவிட உரிமையை ஏன் நீடிக்கவேண்டும் என்பதை நியாயப்படுத்தும் காரணங்களையும், அதற்கான ஆதாரங்களையும் சமர்ப்பிக்க 21 நாள் அவகாசம் வழங்கப்பட்டுள்ளது. 

கிரிமினல் குற்றங்கள் நிரூபிக்கப்பட்டு தண்டனை பெற்றவர்களுக்கே நிரந்தர வதிவிட உரிமை நிராகரிக்கப்பட்டு அல்லது பறிக்கப்பட்டு நாடுகடந்தும் உத்தரவும் (Deportation Order) வழங்கப்பட்டுள்ளன. வீதி போக்குவரத்து விதிகளை மீறியது போன்ற சிறிய குற்றங்கள் இழைத்தவர்கள் மற்றும் நீதிமன்ற அபராதம் பெற்றவர்கள் சிலருக்கு நிரந்தர வதிவிட உரிமை மறுக்கப்பட்டு, மேலும் இரண்டு வருட வதிவிட உரிமை வழங்கப்பட்டுள்ளது.

இதனால் இந்த புதிய நடைமுறை தொடர்பில் யாரும் அச்சம் கொள்ள தேவையல்லை. எனினும் இவ்வாறான சிக்கலை எதிர்நோக்காமல் தவிர்த்துக்கொள்ளவேண்டுமானால் விண்ணப்பதாரிகள் முன்னேற்பாடாக விழிப்புடன் செயல்படுதல் நன்று. அதற்கான சில ஆலோசனைகள் வருமாறு;

1. அரசியல் தஞ்சம் பெற்றவர்கள் எந்தவிதமான சட்டவிரோத நடவடிக்கைகளிலும் ஈடுபடுவதை முற்றிலும் தவிர்க்கவேண்டும். சந்தர்ப்ப சூழ்நிலைகளால் பொய் குற்றச்சாட்டுகளுக்கு உள்ளாக நேரிட்டால், தவறான ஆலோசனைகளை ஏற்காமல், தகுதிவாய்ந்த சட்டத்தரணிகளை அணுகி முறையாக வழக்கை கையாள வேண்டும். 

2.  புலம்பெயர் அரசியல் செயற்பாட்டு (Diaspora Political Activities) அடிப்படையில் அரசியல் தஞ்சம் கோரி பெற்றுக்கொண்டவர்கள், அதன் பின்னரும் நீங்கள் கலந்துகொள்ளும் அரசியல் செயற்பாடுகளுக்கான ஆதாரங்களை திரட்டி வைத்துக்கொள்ள வேண்டும். 

3. அரசியல் தஞ்சம் பெற்ற பின்னரும் உங்களுக்கோ, இலங்கையில் உள்ள உங்கள் குடும்ப உறுப்பினர்களுக்கோ அச்சுறுத்தல் ஏற்பட்டால், அதனை மனித உரிமைகள் ஆணையகம் போன்ற இடங்களில் முறையாக பதிவு செய்து அதற்கான ஆதாரங்களை திரட்டி வைத்துக்கொள்ளலாம். 

4. சித்திரவதை காரணமாக ஏற்பட்ட உடல் உள நல குறைவுகளுக்கு சிகிச்சை பெற்றுவருபவர்கள் அதற்கான ஆதாரங்களை திரட்டி வைத்துக்கொள்ள வேண்டும். 

5. நிரந்தர வதிவிட உரிமைக்கு விண்ணப்பிப்பவர்கள், விண்ணப்பத்தை மேற்கொள்ளும் போது, தமது முன்னைய அரசியல் தஞ்ச கோரிக்கையை மீள ஆராய்ந்து, முரண்பாடுகள் இல்லாமல் விண்ணப்பத்தை நிரப்ப வேண்டும். 

6. உங்கள் பின்னணி என்ன, என்ன காரணத்துக்காக தஞ்சம் கோரினீர்கள், தற்போதய செயல்பாடுகள் என்ன, உங்களுக்கு ஏன் வதிவிட உரிமை தரவேண்டும் என்ற விடயங்களை உள்ளடக்கிய ஓரு வாக்குமூலம் அல்லது ஒரு விளக்க கடிதத்தை இணைத்து அனுப்புவது புத்திசாலித்தமானது.

6. மேற்குறிப்பிட்டது போல, நீங்கள் தொடர்ந்து அரசியல் செயற்பாடுகளில் ஈடுபடுவதற்கான ஆதாரங்களையும், இன்னும் இலங்கையில் உங்களை தேடுகிறார்கள் என்பதற்கான ஆதாரங்களையும் முடிந்தால் விண்ணப்பத்துடனேயே சமர்ப்பித்து, முறையாக விண்ணப்பத்தை மேற்கொள்ளுவது உங்கள் விண்ணப்பங்களை பரிசீலிப்பதில் ஏற்படகூடிய தாமதத்தையும், மேற்படி கடிதங்களை உள்விவகார அமைச்சு அனுப்பும் நிலையையும், அதனால் ஏற்படாமல் மன உழைச்சலையும் தவிர்க்க உதவும். 

7. தவறியவர்கள், மேற்படி கடிதம் வந்த 21 நாட்களுக்குள் அவற்றை சமர்ப்பிக்க வேண்டும். இலங்கையின் அரசியல் மாற்றம் தொடர்பான உள்விவகார அமைச்சின் கருத்தை மறுதலிக்க, அங்கீகரிக்கப்பட்ட நாட்டு நிபுணர் ஒருவரின் கருந்து அறிக்கை (Country Expert Opinion Report) ஒன்றை பெற்று சமர்ப்பிப்பதும் மேலதிக பயனுடையது. 

8. இவற்றை விட மேலதிகமாக, நீங்கள் இந்த நாட்டில் வேலைசெய்து வரி செலுத்துவதற்கான ஆதாரங்கள் (Contributing to the UK Economy), இந்த நாட்டில் உங்கள் குடும்ப வாழ்க்கை மற்றும் தனிப்பட்ட வாழ்க்கை (Family and Private Life), இந்த நாட்டு சமூகத்துடன் ஐக்கியமாதல் (Integrating into the Society) மற்றும் குழந்தைகளின் நலன் (Best interest of the Children) தொடர்பான வாதங்களையும் முன்வைத்து, அதற்கான ஆதாரங்களையும் சமர்ப்பிக்கலாம். 

இந்த புதிய நடைமுறை தொடர்பில் யாரும் அச்சம் கொள்ள தேவையில்லை என்பது உண்மையானாலும், இதை முற்றிலும் புறக்கணிப்பதும் புத்திசாலித்தனமாகாது. எனவே, இந்த மாற்றத்தை புரிந்துகொண்டு அதற்கேற்ப, விண்ணப்பதாரகளும் சட்டதரதணிகளும் சற்று அவதானத்துடன் விண்ணப்பங்களை, மேலதிக ஆதாரங்களுடன் சமர்ப்பிப்பது வீணான செலவுகளையும் மன உழைச்சலையும் தவிர்க்க உதவும்.

மேலதிக தகவல்களுக்கு சட்டவாளர் அருண் கணநாதன் அவர்களுடனான நேர்காணலை காண; 

Print Friendly, PDF & Email