SHARE

துரதிஸ்ரவசமாக தமிழ்த் தேசியக் கூட்டமைப்பில் இருந்து பலர் வெளியேறியிருப்பது தனக்கு மிகுந்த கவலை என இலங்கை தமிழரசுக் கட்சியின் தலைவர் மாவை சேனாதிராஜா தெரிவித்துள்ளார்.

அத்தோடு தேர்தல் முடிந்ததற்கு பிறகு அவர்களை இணைத்து இந்த நெருக்கடியான காலகட்டத்தில், அடுத்த கட்ட நடவடிக்கைக்கு செல்லவேண்டும் எனும் ஆதங்கத்தோடு தான் இருப்பதாகவும் மாவை சேனாதிராஜா மேலும் தெரிவித்துள்ளார்.

யாழ். ஊடக அமையத்தில் இன்று (புதன்கிழமை) இடம்பெற்ற ஊடக சந்திப்பில் கலந்துகொண்ட மாவை சேனாதிராஜாவிடம் ஊடகவியலாளர்கள் மாற்றுத் தலைமை பற்றிய கேள்வியினை எழுப்பினர். அவ்வாறு எழுப்பப்பட்ட கேள்விக்கு பதில் வழங்கும் போதே மாவை சேனாதிராஜா இவ்வாறு தெரிவித்துள்ளார்.

அங்கு தொடர்ந்து கருத்து தெரிவித்த அவர் , ”நான் ஒரு கட்சியின் தலைவராக இருக்கின்றேன், தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் ஒரு துணைத் தலைவராக இருக்கின்றேன். அவ்வாறு நான் ஒரு கட்சியின் தலைவராக இருந்துகொண்டு மாற்று தலைமை வேண்டும் என்று சொல்வதைப்பொல அறிவீனம் வேறு ஏதும் இருக்காது.

இரண்டாவது தமிழ் மக்களிடம் ஒரு மாற்றுத் தலைமை வேண்டு என்பது பரவலான செல்வாக்கு மிகுந்த கோரிக்கையாக இன்று இல்லை  துரதிஸ்ரவசமாக தமிழ்த் தேசியக் கூட்டமைப்பில் இருந்து பலர் வெளியேறியிருக்கின்றார்கள் எனக்கு அது மிகுந்த கவலை.

நாங்கள் தேர்தல் முடிந்ததற்கு பிறகு அவர்களை இணைத்து இந்த நெருக்கடியான, மோசமான காலகட்டத்தில் அடுத்த கட்ட நடவடிக்கைக்கு செல்லவேண்டும் என்ற ஆதங்கத்தோடு நான் வேலை செய்துகொண்டிருக்கின்றேன்.

மாற்றுத் தலைமை என்பது ஜனநாயக ரீதியாக அவர்கள் யாரும் அப்படி பேசலாம், அப்படியான கட்சியாக இயங்கலாம் ஆனால் மக்கள் மத்தியில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு கட்டாயம் இன்னும்  பலமடைய வேண்டும்.

மாற்றுத் தலைமை பற்றி நாங்கள் பேசவேண்டிய அவசியம் இல்லை அவர்கள் சிறிது சிறிதாக அரசாங்க கட்சியில் இருந்தும், சுயேச்சைகளாகவும் எங்கள் வாக்குகளை பிரிக்கின்றார்கள். அதுக்கு இடமளிக்காமல் தமிழ்த் தேசியக் கூட்டமைப்புக்கே நாங்கள் வாக்களித்து பலத்தை உண்டாக்கவேண்டும்.

அந்த பலத்தோடு தமிழ்த் தேசியக் கூட்டமைப்பை வெற்றிபெற செய்ய வேண்டும் எனும் கருத்துத்தான் இன்று வரையிலும் மிக பலமாக இருக்கின்றது. அது இன்னும் வருங்காலத்தில் நாங்கள் மக்கள் மத்தியில் வேலை செய்ய ஆரம்பித்தால்,  எங்களுடைய தேர்தல் அறிக்கையையும் முன்வைத்து நாங்கள் பேசினால் நான் நினைக்கின்றேன் இன்னும் அதிகமாகும்.

மிகப் பெரும்பாலான இடங்களை மக்கள் வெற்றிபெற வைக்கின்ற போது மாற்றுத் தலைமையினுடைய பேச்சு இல்லாமல் போகும் என நினைக்கின்றேன்” என   தெரிவித்துள்ளார்.

Print Friendly, PDF & Email