SHARE

வடக்கு, கிழக்கு பகுதிகளில் உள்ள மாவட்டங்களுக்கு, நிர்வாக சேவையை சேர்ந்த தமிழ் அதிகாரிகளை அரசாங்க அதிபர்களை நியமிப்பது பற்றிப் பேசுவதற்கு, நாடாளுமன்றத் தெரிவுக்குழுவுக்கு வரவேண்டும் என்று தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தனிடம் கூறியுள்ளார் சிறிலங்கா அதிபர் மகிந்த ராஜபக்ச.

சிறிலங்கா அதிபரின் செயலர் லலித் வீரதுங்கவின் அழைப்பின் பேரில், இன்று அலரி மாளிகைக்குச் சென்ற இரா.சம்பந்தன், மகிந்த ராஜபக்ச தலைமையிலான அரச குழுவைச் சந்தித்துப் பேசினார்.

சிறிலங்கா அமைச்சர்களான மைத்திரிபால சிறிசேன, ஜீ.எல்.பீரிஸ் ஆகியோரும் இந்தச் சந்திப்பில் பங்கேற்றனர்.

இந்தச் சந்திப்பின் போது, கிழக்கு மாகாணசபைக்குத் தெரிவு செய்யப்பட்ட தமிழ்த் தேசிய கூட்டமைப்பின் உறுப்பினர்களை, அரசதரப்புடன் இணையுமாறு அழுத்தங்கள் கொடுக்கப்பட்டது, மிரட்டப்பட்டது குறித்து சிறிலங்கா அதிபரிடம் இரா.சம்பந்தன் முறையிட்டுள்ளார்.

அப்போது, தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு கிழக்கு மாகாணசபையில் இரண்டாவது நிலையில் ஆசனங்களை வென்றதற்காக, இரா.சம்பந்தனுக்கு மகிந்த ராஜபக்ச வாழ்த்து தெரிவித்தார்.

அதற்கு, நீதியாகவும் நியாயமாகவும் தேர்தல் நடத்தப்பட்டிருந்தால், இன்னும் அதிகமான ஆசனங்களை வென்றிருப்போம் என்று சிறிலங்கா அதிபருக்கு இரா.சம்பந்தன் பதிலடி கொடுத்துள்ளார்.

அத்துடன், சம்பூர் மற்றும் வலிகாமம் உயர் பாதுகாப்பு வலயப் பகுதிகளில் வாழ்ந்த மக்களின் மீள்குடியேற்றம் குறித்தும், வடக்கு, கிழக்கு மாகாணங்களுக்கு படை அதிகாரிகள் அல்லாதோரை ஆளுனர்களாக நியமிக்குமாறும், திருகோணமலை மற்றும் அம்பாறை மாவட்டங்களுக்கு தமிழ் பேசும் நிர்வாக சேவை அதிகாரிகளை அரசாங்க அதிபர்களாக நியமிக்குமாறும் இரா.சம்பந்தன் வலியுறுத்தியுள்ளார்.

Print Friendly, PDF & Email