SHARE

போர் முடிவுக்கு வந்த பின்னர் சிறிலங்காவுக்குத் திரும்பும் தமிழ் அகதிகளை, பாகிஸ்தானின் ஐஎஸ்ஐ புலனாய்வுப் பிரிவின் முகவர்கள் ஆட்சேர்ப்புச் செய்வதற்கு தீவிரமாக முயற்சிப்பதாக, தமிழ்நாடு அரசின் புலனாய்வுச் சேவை, இந்தியாவின் மத்திய புலனாய்வுப் பிரிவுக்குத் தகவல் அனுப்பியுள்ளது.

‘ரைம்ஸ் ஒவ் இந்தியா‘ நாளிதழ் இந்தத் தகவலை வெளியிட்டுள்ளது.

ஐஎஸ்ஐயுடன் தொடர்புடையவர் என்ற சந்தேகத்தில் தஞ்சாவூரைச் சேர்ந்த தமீம் அன்சாரி என்பவர், அண்மையில் கைது செய்யப்பட்டிருந்தார்.

அவர் சிறிலங்காவில் தங்கியிருந்த போது, ஐஎஸ்ஐ செயற்பாட்டாளரான ஹாஜி என்பவர் இவருடன் தொடர்புகளை ஏற்படுத்தினார்.

இந்தியாவுடன் நன்கு பரிச்சயமானவர்கள் என்பதாலும், சந்தேகமின்றி தகவல்களை திரட்ட முடியும் என்பதாலும் நாடு திரும்பும் தமிழ் அகதிகளை ஐஎஸ்ஐ வாடகைக்கு அமர்த்துவதாக புலனாய்வு வட்டாரங்கள் தெரிவித்தன.

சிறிலங்கா தமிழ் அகதிகளை கண்காணித்து வரும் தமிழ்நாடு அரச புலனாய்வுச் சேவையான கியூ பிரிவின் புலனாய்வாளர்கள், ஐஎஸ்ஐ செயற்பாட்டாளர் ஹாஜி மற்றும் அவரது உதவியாளர்களான கொழும்பிலுள்ள பாகிஸ்தான் தூதரகத்தின் நுழைவிசைவு பிரிவில் பணியாற்றும் சாஜி, அமீர் சுபைர் சித்திக் ஆகியோருக்கு எதிராக வழக்கு ஒன்றை பதிவு செய்துள்ளனர்.

கைது செய்யப்பட்ட அன்சாரியின் வாக்குமூலத்தின் அடிப்படையில் இவர்களுக்கு எதிராக முதல் தகவல் அறிக்கை சமர்ப்பிக்கப்பட்டுள்ளது என்று தமிழ்நாடு காவல்துறை அதிகாரி ஒருவர் கூறியுள்ளார்.

Print Friendly, PDF & Email