SHARE

கிழக்கு மாகாண முன்னாள் முதல்வர் சந்திரகாந்தன் என்ற பிள்ளையான், அடுத்த அமைச்சரவை மாற்றத்தின் போது அமைச்சராக நியமிக்கப்படுவார் என்று கொழும்பு ஆங்கில நாளிதழ் ஒன்று செய்தி வெளியிட்டுள்ளது.

கிழக்கு மாகாண அபிவிருத்தி, புனர்வாழ்வு, மீள்குடியமர்வு அமைச்சர் பதவி அடுத்த அமைச்சரவை மாற்றத்தின் போது அவருக்கு வழங்கப்படும் என்று அந்தச் செய்தியில் கூறப்பட்டுள்ளது.

கிழக்கு மாகாணசபையில் ஆட்சியமைப்பதற்கு ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரசுடன் ஆளும்கட்சி உடன்பாடு செய்து கொண்டதை அடுத்து கிழக்கு முதல்வராக இருந்த சந்திரகாந்தனிடம் இருந்து முதல்வர் பதவி பறிக்கப்பட்டதுடன், அவருக்கு அமைச்சர் பதவி கூட வழங்கப்படவில்லை.

அதற்குப் பதிலாக எந்த அதிகாரமும் இல்லாத கிழக்கு மாகாண அபிவிருத்தி தொடர்பான ஆலோசகர் பதவி ஜனாதிபதியினால் வழங்கப்பட்டது.

எனினும் இந்தப் பதவிக்காக அவருக்கு அதிகாரபூர்வ வாகனம் கூட இல்லை என்பது குறிப்பிடத்தக்கது.

அவருக்கு தனியே பாதுகாப்பு அதிகாரிகள் மட்டும் இந்தப் பதவியின் ஊடாக வழங்கப்பட்டுள்ளனர்.

இந்தநிலையில் சந்திரகாந்தன் தேசியப் பட்டியல் ஊடாக நாடாளுமன்ற உறுப்பினராக நியமிக்கப்பட்டு, அடுத்த அமைச்சரவை மாற்றத்தின் போது அமைச்சராக நியமிக்கப்படவுள்ளதாக கொழும்பு ஆங்கில நாளிதழ் தெரிவித்துள்ளது.

எனினும், அண்மையில் கொழும்பில் செய்தியாளர்களிடம் பேசிய சந்திரகாந்தன், தனக்கு நாடாளுமன்ற உறுப்பினராகும் எண்ணமில்லை என்று கூறியிருந்தமை குறிப்பிடத்தக்கது.

Print Friendly, PDF & Email