SHARE

உள்நாட்டுப் போர் 2009இல் முடிவுக்கு வந்தாலும், சிறிலங்கா இன்னமும் கொதிநிலையிலேயே உள்ளது என்று ஐ.நா மனிதஉரிமைகள் ஆணையாளர் நவநீதம்பிள்ளை தெரிவித்துள்ளார்.

அத்துடன், சிறிலங்கா அகதிகளை உடனடியாகத் திருப்பி அனுப்பும் அவுஸ்ரேலியா புதிய கொள்கை தொடர்பாகவும் அவர் கவலை வெளியிட்டுள்ளார்.

இந்தோனேசியாவின் பாலி ஜனநாயக மன்றத்தில் பங்கேற்றுள்ள அவர், இது தொடர்பாக கருத்து வெளியிடுகையில்,

“நௌரு போன்ற கடல் கடந்த தடுப்பு நிலையங்கள் அமைக்கப்படுவதால் நீண்டகாலம் அவர்கள் தடுத்து வைக்கப்படலாம் என்றும், இன்னொரு மனிதஉரிமை மீறலாக அது உருவெடுக்கலாம் என்றும் கவலை கொள்கிறேன்.

உள்நாட்டுப் போர் 2009ல் முடிவுக்கு வந்தாலும், சிறிலங்கா இன்னமும் கொதிநிலையிலேயே உள்ளது.

இப்போதும் அது ஒரு மோதல் பிரதேசமாகவே உள்ளது. அங்கு இன்னமும் உறுதி நிலை ஏற்படவில்லை.

அங்குள்ள மக்கள் மீது கட்டுப்பாடுகள் சுமத்தப்படுவதான கவலையளிக்கும் அறிக்கைகளே எனக்கு கிடைத்துக் கொண்டிருக்கின்றன.

அகதிகளாக அடைக்கலம் தேடி வருவோரைத் திருப்பி அனுப்புவது அவர்களின் தனிப்பட்ட பாதுகாப்புக்கு அச்சத்தை ஏற்படுத்தும் என்பதை என்னால் புரிந்து கொள்ள முடிகிறது“ என்றும் அவர் மேலும் கூறியுள்ளார்.

ஐ.நா மனித உரிமைகள் ஆணையாளர் நவநீதம்பிள்ளையின் இந்தக் கருத்து சிறிலங்கா அரசாங்கத்துக்கு அதிர்ச்சியை ஏற்படுத்தும் வகையில் அமைந்துள்ளது.

Print Friendly, PDF & Email