SHARE

இலங்கையில் ஆளும் கூட்டணிகளுக்கு தலைமை தாங்கும் ஐக்கிய தேசியக் கட்சி மற்றும் ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி ஆகிய கட்சிகள் புதிய தேசிய அரசாங்கம் தொடர்பில் புரிந்துணர்வு உடன்படிக்கை ஒன்றில் கைச்சாத்திட்டுள்ளன.

ranil-sworn-maithreeஇந்த உடன்படிக்கையில் நாட்டின் பொருளாதார அபிவிருத்தி, எல்லா இன மக்களின் உரிமைகளையும் பாதுகாக்கும் விதத்தில் புதிய அரசியலமைப்பை உருவாக்குவதற்கான நடவடிக்கைகள், ஊழலை ஒழித்தல், கல்வியையும் சுகாதாரத்தையும் மேம்படுத்துதல், நட்புறவுடன் கூடிய வெளியுறவுக் கொள்கை, பெண்கள் மற்றும் சிறார் உரிமைகளை பாதுகாத்தல், கலைஞர்களை ஊக்குவித்தல் உள்ளிட்ட பல்வேறு அம்சங்களும் உள்ளடக்கப்பட்டுள்ளன.

இரண்டு ஆண்டுகளுக்கு செல்லுபடியாகும் விதத்தில் கைச்சாத்தாகியுள்ள இந்த உடன்படிக்கை இருதரப்பு இணக்கப்பாட்டுக்கு அமைய நீட்டிக்கப்படமுடியும் என்றும் அதில் கூறப்பட்டுள்ளது.

ஆனால், நாட்டின் இனப்பிரச்சனைக்கான தீர்வு விடயத்தில் முன்னெடுக்கப்பட வேண்டிய பேச்சுவார்த்தைகள் பற்றிய ஏற்பாடுகள் எதுவும் இந்த உடன்படிக்கையில் நேரடியாக உள்ளடக்கப்படவில்லை.

எனினும், புதிய தேசிய அரசாங்கம் தேசிய இனப்பிரச்சனையை தீர்க்கும் விடயத்திற்கு முதலிடம் கொடுக்க வேண்டும் என்று தொடர்ந்தும் தமது தரப்பில் அழுத்தங்கள் கொடுக்கப்படும் என்று தமிழ் முற்போக்கு கூட்டணியின் தலைவர் மனோ கணேசன் தமிழோசையிடம் தெரிவித்தார்.

அரசியல் தீர்வுத் திட்டம் தொடர்பில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு வெளியில் இருந்து அழுத்தம் கொடுக்கும் என்று எதிர்பார்ப்பதாகவும் தமிழ் முற்போக்கு கூட்டணி அரசாங்கத்துக்குள் இருந்து அழுத்தம் கொடுக்கும் என்றும் மனோ கணேசன் கூறினார்.

இதனிடையே, தமிழ்,சிங்கள, முஸ்லிம் மக்கள் மத்தியில் நிலவுகின்ற பெரும் பிரச்சனைகளை தீர்ப்பது தான் தேசிய அரசாங்கத்தின் நோக்கம் என்று ஐக்கிய தேசியக் கட்சியின் தேசியப் பட்டியல் நாடாளுமன்ற உறுப்பினராக அறிவிக்கப்பட்டுள்ள டி.எம். சுவாமிநாதன் பிபிசி தமிழோசையிடம் கூறினார்.

அரசாங்கம் இனப்பிரச்சனையை தீர்க்கும் விடயத்தில் முன்னுரிமை அளித்துச் செயற்படும் என்றும் சுவாமிநாதன் நம்பிக்கை வெளியிட்டார்.

source :http://www.bbc.com/tamil

Print Friendly, PDF & Email