SHARE

– முன்னாள் உதவிக் கல்விப்பணிப்பாளர் வசந்தகுமாரி சந்திரபாலன்-

 

 

 

 

 

மே-18 என்பது தமிழர்கள் வாழ்வில் கறைபடிந்த நாள். கொத்துக் கொத்தாய் தமிழர்கள்  கொன்றொழிக்கப்பட்ட நாள். பல்லாயிரக்கணக்கான மக்கள் கொடூர இனவழிப்பிற்கு  உள்ளாக்கப்பட்டு எமது தாய்நிலம் அன்னியரின் கையில் அடிமைப்பட்ட நாள். தமிழீழத்தின்  தேசிய துக்கநாள்.

முள்ளிவாய்க்கால் இனவழிப்பு நடந்தேறிய மே-18 ஐ தமிழீழத்தின் தேசிய துக்கநாளாகப்  பிரகடனப்படுத்தி தாயகத்திலும் சர்வதேசமெங்கும் தமிழர்கள் பரந்துவாழும்  இடங்களிலெல்லாம் தேசிய இனப்படுகொலை நாளாக அனுட்டித்து வருகின்றோம்.

எமது தேசிய ஆன்மாவை போராட்டத்தின் அடுத்த பரிமாணத்தை புலம்பெயர் ஈழத்தமிழரிடம்  கையளித்துவிட்டு எமது ஆயுதப்பேராட்டம் மௌனிக்கப்பட்டுவிட்டது. தமிழர் தாயம்  பகைவனின் கொடூர இரும்புப்பிடிக்குள் சிக்குண்டு எமது மக்கள் யுத்தத்தில் இறந்த தமது  உறவுகளை நினைத்து அழுவதற்குக்கூட கட்டுப்பாடு விதிக்கப்பட்டுள்ளது.

ஆனால் நாம் செய்வது என்ன?
நாம் எல்லாவற்றையும் அன்னியரிடம் இழந்துவிட்டோம். நாடிழந்து வீடிழந்து சொந்தங்களை  இழந்து இங்கு நடைப்பிணங்களாக புலம்பெயர்ந்து எம்தேசத்தின் நினைவுகளை இதயத்தில்  சுமந்தபடி கனத்த இதயங்களோடு வாழ்ந்துகொண்டிருக்கின்றோம். இந்த நிலையில் எம்மை  வாழவைப்பது ஈழத்தமிழன் என்ற அடையாளத்தை கொடுப்பது எமது தேசியக்கொடி  மாத்திரமே.

தேசியக்கொடியென்பது எமது ஆன்மா எமது விடுதலை வேட்கையின் பிரதிபலிப்பு எமது  தேசத்தின் அடையாளம் தாயகம் நோக்கிய எமது விடுதலைப்பயணத்தின் மூலவேர்.  ஈழத்தமிழர்களின் எழுச்சியின் வடிவம். தேசவிடுதலைக்காய் களமாடி வீழ்ந்த ஆயிரம் ஆயிரம்  விடுதலைவீரர்களின் வித்துடல்பேழையில் போர்த்தப்பட்ட கொடி அத்துடன் அவர்கள் சிந்திய  செங்குருதியில் ஊறிச்சிவந்தகொடி.

ஆனால் இன்று பிரித்தானிய தமிழர் பேரவை மக்களின் கருத்துகளிற்கு மதிப்பளிக்காது எமது  தேசியக்கொடியை முற்றாகப் புறக்கணித்து தேசிய இனப்படுகொலை நாளான  முள்ளிவாய்க்கால் நினைவுதினத்தை நடத்த ஏற்பாடுசெய்துள்ளது. தேசியக்கொடியை ஒரு  தீண்டத்தகாத பொருளென்றும் வெள்ளைக்காரருடன் இருந்து வைன் குடிப்பதற்கு  அந்தக்கொடி பிரச்சினையான பொருளென்றும் அதனால்தான் தம்மால் தேசியக்கொடி  ஏற்றமுடியாது என்றும் அடாத்தாக கூறிவருவது வெந்த புண்ணில் வேலை பாச்சுவதுபோல  இருக்கிறது.

தேசியக்கொடி தடைசெய்யப்பட்ட கொடியென சென்றவருடம் பரப்பிய வதந்திகள் மக்களால்  முறியடிக்கப்பட்ட நிலையில் இந்த வருடம் புதிய வதந்தியை பரப்பிவிடுவதற்கு பிரித்தானிய  தமிழர் பேரவை முயற்சி செய்து வருகின்றது.

நாடுகடந்த தமிழீழ அரசாங்கம் மற்றும் சில அமைப்புகள் தமிழீழ தேசியக்கொடியை  சுமந்தவாறு பல்வேறு நாட்டு முக்கிய தலைவர்களையும் இராஜதந்திரிகளையும்  பிரதிநிதிகளையும் சந்தித்து பேச்சுவார்த்தைகளில் ஈடுபட்டுவருவது குறிப்பிடத்தக்கது.  இதுவரைக்கும் யாரும் அவர்களிடம் தேசியக்கொடியை கைவிட்டு வருமாறு சொன்னதாக  தெரியவில்லை. தேசியக் கொடியை கைவிட்டு அவர்களும் எதுக்கும் போவதற்கும்  தயாராகவும் இல்லை.

இதிலிருந்து சில உண்மைகளை மக்கள் புரிந்துகொள்ளவேண்டும். தமிழீழத்தேசியக்கொடி  இலங்கையை தவிர எந்தவொருநாட்டிலும் தடையில்லை. யாரும் தேசியக்கொடியை  ஏற்றவேண்டாமென்றும் கூறவில்லை. மாறாக இலங்கை அரசாங்கத்தை திருப்திப்படுத்த  அல்லது மகிழ்ச்சிப்படுத்தவே பிரித்தானிய தமிழர்பேரவை தேசியக்கொடியை புறக்கணித்து  முள்ளிவாய்க்கால் நினைவு தினத்தை நடாத்தவிளைகிறது. அப்படியாயின்  எம்மைக்கொன்றழித்த இலங்கை அரசாங்கத்தை பிரித்தானிய தமிழர்பேரவை ஏன்  திருப்திப்படுத்தவேண்டும்? பிரித்தானிய தமிழர் பேரவையும் விலைபோய்விட்டதா?  பிரித்தானிய தமிழர்பேரவை தேசியக்கொடியை புறக்கணிப்பதற்கு வழங்கப்பட்ட விலை  என்ன? அதன்பின்னால் உள்ள நிகழ்ச்சி நிரல் என்ன?

இனப்படுகொலையை நிரூபிப்பதாயின் முதலில் தமிழீழ மக்களாகிய நாம் ஒரு  இறையாண்மையுள்ள இனம் என்பதை நிரூபிக்க வேண்டும். தேசம் இழந்து நிற்கும் எமக்கு,  தற்போதய நிலையில் எமது இறையாண்மையை பறைசாற்றி நிற்பது தேசியக் கொடியே.  அதனை புறக்கணித்து, மக்கள் மத்தியில் மறக்கச் செய்வதன் மூலம் எம்மை ஒரு தனித்த  இனமல்ல என நிறுவ முயல்கிறது சிங்கள அரசு. அதற்கு துணைபோகிறது பிரித்தானிய தமிழர்  பேரவை. நாம் ஒரு தேசிய இனம் அல்ல என்றாகிவிட்டால் 'இனப்படுகொலை' என்ற  சொற்பதமே அர்த்தமற்றதாகிவிடும். சிங்கள அரசை பாதுகாக்க தீட்டப்படும் நீண்டகால  நிகழ்ச்சிநிரல் இதுவேயாகும்.

தேசியக்கொடியை வெளிப்படையாக புறக்கணிக்கும் பிரித்தானிய தமிழர் பேரவையை  அனைவரும் புறக்கணிப்பதன் மூலம்தான் எமது அடையாளங்களை கைவிட நினைக்கும்  அனைவருக்கும் ஒரு பாடத்தை நாம் கற்பிக்க மூடியும்.

அடையாளமிழந்த மனிதன் ஆணிவேர் இழந்த மரத்துக்கு சமன். ஆகவே தேசியக் கொடியை  ஏற்றி மீண்டும் எழுந்து நிற்போம். இம்முறை கடந்த முறையைவிட பலமாக எழுந்து நிற்போம்.  வேற்றுமைகளை மறந்து ஒரே கொடியின் கீழ் ஒன்றாக இணைந்து நிற்போம்.

தமிழரின் தாகம் தமிழீழத் தாயகம்


திருமதி. வசந்தகுமாரி சந்திரபாலன் யாழ். இந்து மகளிர் கல்லூரியில் கல்விகற்று, மகரகம  ஆசிரியர் பயிற்சிக் கல்லூரியில் பயிற்றபட்ட ஆசிரியராக பட்டம்பெற்றவர். யோகபுரம்  மகாவித்தியாலயத்தில் 9 வருடங்கள் கல்விச்சேவையை வழங்கிய, பின்னர் இவர் உதவிக்  கல்விப்பணிப்பாளராக 10 வருடங்கள் துணுக்காய் வலயக்கல்வி அலுவலகத்தில்  சேவையாற்றியவர். தமிழீழ விடுதலைப்புலிகளின் விளையாட்டுத்துறையின் நிறைவேற்று  பணிப்பாளர்களில் ஒருவராக கடமையாற்றிய இவர், விடுதலைப்புலிகளின் மகளிர்  வலைப்பந்தாட்ட அணி பயிற்றுவிப்பாளராகவும் செயற்பட்டவர். செஞ்சோலை சிறுவர்  இல்லம் மற்றும் பல சிறுவர் இல்லங்களிலும் கல்விச்சேவை வழங்கியவர். பல அரசியல்  நிகழ்வுகளை முன்னின்று நடாத்தியவர். இறுதி யுத்தத்தின் சாட்சியங்களுள் ஒருவரான, சிங்கள  இனவெறி அரசால் தடுத்து வைக்கபட்டு சித்திரவதைகளுக்கு உள்ளானவர். தற்போது  பிரித்தானியாவில் தமிழீழ நாடு கடந்த அரசாங்கத்தின் ஒருங்கிணைப்பாளர்களுள் ஒருவராக  தொடர்ந்தும் தேசிய விடுதலைப்போராட்டத்திற்கு அயராது உழைத்து வருகிறார்.

Print Friendly, PDF & Email