SHARE

–  பிரித்தானிய தமிழர் பேரவைக்கு தாயகத்திலிருந்து ஒரு மாவீரர்களின் தாய் உருக்கமான வேண்டுகோள் –

உலகெங்கும் முள்ளிவாக்கால் தினம் தமிழீழ தேசியக்கொடியேற்றலுடன் உணர்வுபூர்வமாக நடைபெற்று வரும் இந்த வேளையில், பிரித்தானியாவில் பிரித்தானிய தமிழர் பேரவை தேசியகொடியை உதாசீனம் செய்து வருவது புலம்பெயர் மக்களை மட்டுமன்றி, தாயகத்தில் வாழும் தமிழ் உறவுகளையும் கொதித்தெழ வைத்துள்ளது.

அவ்வாறு கொதித்து எழும் மக்களின் சார்பாக, பிரித்தானிய தமிழர் பேரவையிடம் உருக்கமான வேண்டுகோளை விடுக்கும் வகையில், தாயகத்தில் வாழும் லெப்ரினன் மணியரசன் மற்றும் வீரவேங்கை கலைஅரசி ஆகியோரின் தாயார் திருமதி சுந்தரவடிவேல் அவர்கள் கடிதம் ஒன்றை அனுப்பி வைத்துள்ளார்.

அந்த கடிதத்தில், தேசியக்கொடியென்பது நாம் இழந்துவிட்ட இறைமையையும் எமது இனத்தின் மதிப்பையும் நிலைநாட்டுகின்ற முதன்மைப் பொருளாகும். இவற்றை முதன்மைப்படுத்தி எமது விடுதலை வேணவாவை உலகுக்கு பறைசாற்றவேண்டியது அனைவரதும் கடமையாகும் என தாயார் திருமதி சுந்தரவடிவேல் அவர்கள் தெரிவித்துள்ளார்.

அவர் மேலும் தெரிவிக்கையில், ‘தேசியக்கொடியென்பது வெறும் துணியல்ல அது எமது பிள்ளைகளின் இரத்தத்தாலும்  தசையாலும் நெய்யப்பட்டது. ஆயிரமாயிரம் வீர மறவர்களினதும் அவர்களோடு இறுதிவரை கூடநின்ற மக்களினம் ஆன்மாவால் உருவானது. இன்று அத்தகைய மதிப்புமிக்க எமது தேசிய அடையாளத்தை பிரித்தானிய தமிழர்  பேரவை தீண்டத்தகாத ஒரு பொருளாக கருதி மக்களது உருக்கமான வேண்டுகோளைப் புறக்கணித்து தமிழின இனவழிப்பு நாளை அனுட்டிக்கவுள்ளமை வெந்த புண்ணில் வேல்பாச்சுவதுபோல உள்ளது.

பிரித்தானிய தமிழர் பேரவையின் இத்தகைய அடாத்தான செயல் மாவீரர்களின் தியாகங்களையும் தாயக மக்களின் அர்ப்பணிப்புகளையும் கொச்சைப்படுத்துதவதுபோல் உள்ளது.  அதேநேரம் ஆயிரம் ஆயிரம் மாவீரர்கள் களமாடிச் சாதித்துப் பெற்றுக்கொடுத்த தளத்திலிருந்துகெண்டு எமது மக்களின் விடுதலை உணர்வை அழிக்க நினைப்பது ஒரு வரலாற்றுத் துரோகமாகும்.

எனவே தமிழீழ தேசியத்தை புறக்கணித்து தேசியக்கொடியை அவமதித்து விடுதலைக்காக வீழ்ந்த மறவர்களினதும் மக்களினதும் தியாகத்தின்மேல் நின்று கூத்தாடும் பிரித்தானியத் தமிழர் பேரவையை புறக்கணித்து விடுதலையின்பால் உண்மையான பற்றுக்கொண்டு தேசிய அடையாளங்களை மதித்து தேசியக்கொடியேற்றி நிகழ்வைச்செய்யும் உண்மையான மக்கள் பிரதிநிதிகள் பின்னால் அனைவரையும் அணிதிரழுமாறு விடுதலைப் போராட்டத்திற்காய் இரண்டு பிள்ளைகளை ஈய்ந்த தாய் என்ற உரிமையுடன் கேட்டுக்கொள்கிறேன்’.

தம்மை மக்கள் பிரதிநிதியாக காட்டிக்கொண்டு அரசியல் நடாத்த முயலும் பிரித்தானிய தமிழர் பேரவை, புலம்பெயர் தமிழ் மக்களின் கருத்துக்களுக்கும் அபிலாசைக்கும் செவிசாய்க்காமல் தான்தோன்றித்தனமாக செயற்பட்டு வருவது யாவரும் அறிந்ததே. ஆவர்கள் தாயகத்தில் வாழும் எமது உறவுகளின் கோரிக்கைகளுக்காவது செவிசாய்ப்பார்களா?

Print Friendly, PDF & Email