SHARE

– புலம்பெயர் அமைப்புக்களிடம் மாமனிதர் கவிஞர் நாவண்ணனின் மகள், கவிஞர் பூங்கோதை உணர்வுபூர்வமான வேண்டுதல் –

பிரித்தானியாவில் நடைபெறவுள்ள இனப்படுகொலை தினமான முள்ளிவாய்க்கால் எழுச்சி நிகழ்வுகளின் போது, தமிழீழ தேசியக்கொடியை ஏற்ற மறுத்துவருவதன் மூலம் புலம்பெயர் மக்களின் ஒற்றுமையையும் விடுதலை உணர்வையும் சில அமைப்புக்கள் திட்டமிட்டு அழித்து வரும் நிலையில், இதை எதிர்த்து பல தரப்பட்டவர்களும் தமது ஆதங்கத்தை வெளியிட்டு வருகின்றனர். 

பல ஆயிரக்கணக்கான புலம்பெயர் தமிழ் மக்கள் மற்றும் தனது உறுப்பினர்கள் கையெழுத்து இட்டு, எழுத்து மூலம் தமது கோரிக்கையை முன்வைத்துள்ள நிலையிலும், மக்கள், உணர்வுக்கு மதிப்பளிக்காமல் பிரித்தானிய தமிழர் பேரவை செயற்பட்டு வருவது மக்கள் மத்தியில் கடும் விசனத்தை ஏற்படுத்தியுள்ளது. 

இது தொடர்பாக கருத்து வழங்கியுள்ள, கவிஞர் பூங்கோதை அவர்கள் புலம்பெயர் அமைப்புகளிடம் மிகவும் உணர்வுப்பூர்வமான விண்ணப்பம் ஒன்றை மேற்கொண்டுள்ளார். இவரது தந்தை, திரு. நாவண்ணன் அவர்கள் தமிழீழத்தின் தலைசிறந்த கவிஞர்களுள் ஒருவர் மட்டுமன்றி, விடுதலைப்போரில் தன்னை ஐக்கியமாக்கியவர். தேசியத்தலைவரால் மாமனிதர் என்ற கௌரவ விருதைப்பெற்றவர். இவருடைய மகளான உதயவேணி கதிர்ச்செல்வன் (பூங்கா) ஒரு விடுதலைப்போராளி மட்டுமன்றி ஒரு சிறந்த கவிஞருமாவார். பூங்கோதை என்ற புனைபெயரில் இவரது ஆக்கங்கள் பல வெளிவந்துள்ளன. அவர் வழங்கிய கருத்தின் முழுவடிவம் வருமாறு;

“இன்று புலம்பெயர் நாடுகளில் மிகவும் காரசாரமாக விவாதிக்கப்படுவது தமிழீழக் கொடியின் தேவை பற்றியது.  மிகப்பெரும் இனவழிப்பின் பின்னர் பல்வேறு துயரங்களை சுமந்துகொண்டு வாழ்ந்துகொண்டிருக்கும் மக்கள் மத்தியில் தமிழ் அமைப்புக்கள் தேசியக்கொடி சார்ந்த முரண்பாடுகளை தெறிக்கவிட்டிருக்கும் செயலானது, ஏற்கெனவே சோர்ந்து போன மக்களை விரக்தி நிலைக்கு இழுத்துச்செல்லும் ஒரு செயலாகவே நான் காண்கிறேன்.

ஒரு இனத்தை தனித்துவப்படுத்துவதும் அந்த இனத்தை ஒருங்கிணைப்பதும் அந்த நாட்டின் தேசியக் கொடியே என்பது சாதாரணமாக எல்லோராலும் புரிந்து கொள்ளக் கூடிய ஒன்றே. பண்டைக்காலத்தில் அரசர்கள் போரில் வென்றதும் முதலில் கொடிமரத்தையே வெட்டிச்சாய்ப்பார்கள். ஏனென்றால் கொடி தான் அந்த நாட்டு மக்களையும் அரசையும் பிரதிபலிக்கிறது. 

எமது தமிழீழப் போராட்ட வரலாற்றில் கூட சீலன் எனப்பட்ட மாவீரன் சாள்ஸ் அன்ரனி முதன் முதலில் அரசுக்கெதிரான தனது எதிர்ப்பைகாட்ட  சிங்கக் கொடியை  பொஸ்பரஸ் வைத்து எரித்தார். ஏனென்றால் அந்த சிங்கக்கொடி சிங்கள அரசை, சிங்கள தேசத்தை பிரதிபலிப்பது என்பதால். எனவே ஒரு தேசத்தை, இனத்தை தன் கீழ் ஒருங்கிணைக்கும் தேசியக் கொடியை ஏற்றக் கூடாது என்றோ, அவசியமற்றது என்றோ கருதுவது எமது தேசத்தின் அடையாளத்தை சிதைப்பதாகவே முடியும். 

மாவீரன் சுபாஷ் சந்திரபோஸ் பிரித்தானியர்களால் கைது செய்யப்பட போது வேறு எந்த வார்த்தையையும் பயன்படுத்தாமல் உதிர்த்த  ஒரே ஒரு வார்த்தை “தாயின் மணிக்கொடியைத் தாழவிடாதீர்கள் ” என்பதே. ஏனென்றால்  ஒரு இனத்துக்கு விடுதலை உணர்வை கொடுக்க, மக்களின் சோர்வை நீக்கி போராட்டத்தை வலுப்படுத்த அந்தக் கொடி ஒன்றே போதும் என்பதை அந்த விடுதலைப் போராளி அறிந்திருந்தார்.  

எமது தமிழீழத்தின் தேசியத்தலைவர் மேதகு. வே. பிரபாகரன் அவர்களும் கூட தேசியக் கொடியை முன்னிறுத்தியவர் என்பது மறுக்க முடியாத உண்மை. வெறுமனே போராளிகளின் நிகழ்வுகளில் அல்லாமல், பொதுமக்களின் நிகழ்வுகளிலும் பாடசாலை நிகழ்வுகளிலும் கூட தமிழீழ தேசியக் கொடி ஏற்றப்பட்டது.  உயர்வு தாழ்வு, ஏழை பணக்காரன், படித்தவன் படிக்காதவன் என பல்வேறுபட்ட மக்களையும் ஒன்றிணைந்த தமிழினமாக இணைத்து வைத்திருந்தது இந்தக் கொடிதான். இன்று எத்தனையோ தமிழ் தேசிய உணர்வாளர்கள் தாயகத்தில் தேசியக் கொடியை ஏற்றமுடியாத துர்ப்பாக்கிய நிலையை   எண்ணி வருந்திக் கொண்டிருக்கும் வேளையில், புலம்பெயர் நாடுகளில் அதற்கான வாய்ப்புகள் கொட்டிக் கிடந்தும் அதனை தவிர்ப்பது அல்லது எதிர்ப்பது வருத்தத்திற்கு உரியதே.

சிலர் பேசும் போது போராளிகள் சண்டைக்கு போகும்போது கொடியைப் பிடித்துக் கொண்டா சென்றார்கள், இல்லைத்தானே என்று பேசுவதைக் கேட்டிருக்கிறேன். இல்லைத்தான். ஏனென்றால் அவர்கள் தேசத்தை, தேச விடுதலையை நெஞ்சில் சுமந்து கொண்டிருந்தவர்கள். அதனால் தான் அவர்கள் வித்தாகும் போது தேசியக்கொடியை போர்த்தி மதிப்பளித்தோம். 

ஆனால் அவர்கள் வாழும்போது தேசியக் கொடியைத் தமது உயிராக மதித்தவர்கள்.  போராளிகள் மட்டுமன்றி ஈழத்து தமிழ் மக்களும் கூட கொடியேற்றத்தின் போது , தேசியக் கொடிப் பாடலைப் பாடும் போது உணர்வெழுச்சியோடு அமைதிவணக்கம் செலுத்துவதை போன்ற எழுச்சி எப்போதும் அமைவதில்லை. இந்த எழுச்சியூட்டும் நிலை கொடிஏற்றல் இல்லையென்றால் அழிந்துபோகும் என்பதை இன்றைய குழப்பவாதிகள் அறியாதவர்கள் அல்ல. 

கடந்தகாலங்களில் போர்ச்சூழலில் வாழ்ந்த நம் உள்ளங்களில் எமது இனத்துக்கு ஏற்பட்ட அழிவும் துரோகமும் ஆறாத வடுவாக எப்போதும் இருந்துகொண்டு தான் இருக்கும். ஆனால் இந்த உணர்வுகளை எமது வருங்கால சந்ததியினர் எப்படி அறிவார்கள்? தாயகத்தில் இளைஞர்களும் இன்றைய சிறுவர்களும் கூட ஒரு அடக்கப்படும் சூழலில் தான் வாழ்ந்துகொண்டிருக்கிறார்கள். அங்கே அந்த தேசியக் கொடி செய்யும் பணியை ஆதிக்கவாதிகள் தம்மையறியாமலே செய்து கொண்டிருக்கிறார்கள். ஈழமக்கள் மத்தியில் எமது அடையாளங்கள் சிதைக்கப்பட்டிருந்தாலும், தாம் அடக்கப்படுகிறோம் என்பதை அவ்வப்போது உணரக்  கூடிய சூழ்நிலையில் வாழ்கிறார்கள். அவர்களிடத்தில் என்றாவது ஒருநாள் ஒரு சிறிய விடுதலைப்  பொறி பறந்தால் கூட அது பற்றியெரிய ஆரம்பித்துவிடும். ஆனால் புலம்பெயர் சூழலில் வாழும் இளைஞர்கள், சிறுவர்களின் நிலை என்ன? நடைமுறையில் முழு சுதந்திரத்துடன் வளர்ந்துவரும் இவர்களிடம் தேசியக் கொடியின்மீது உணர்வெழுச்சியுடனான பார்வை எப்படி ஏற்படும்? 

பாண்டியமன்னனின் மீன் கொடி , சேரமன்னனின் விற்கொடி , சோழமன்னனின் புலிக்கொடி என வரலாற்றில் படிப்பதுபோல் , பிரபாகரனின் புலிக்கொடி என்று போகிற போக்கில் வரலாற்று கதையொன்றைப்  படிப்பது போலாகிவிடும் என்பதுதான் உண்மை. எனது தேசம், எனது கொடி , எனது மொழி என்ற எமது அடையாள உணர்வுகளை எமது சந்ததினரிடமிருந்து மெல்ல மெல்ல அழித்து விடுவது  தான்  இந்தக் குழப்பத்தின் பின்னணியா?

ஏற்கெனவே குழப்பமடைந்து, விரக்தியுற்று போன மக்களிடம் தேச விடுதலை பற்றிய வெறுப்பை விதைப்பது தான் இவர்களின் நோக்கமா? 

மக்கள் விழிப்போடுதான் இருக்கிறார்கள். இப்போது மக்கள் எந்த அமைப்பையும் நம்பமுடியாதபடி, தமக்கான சரியான வழிகாட்டலைத் தெரிந்து கொள்ள முடியாதபடி பல்வேறு முரண்பாடுகளை காலத்துக்கு காலம் தோற்றுவித்து மக்களை இயலாமை நிலைக்கு இழுத்து செல்லும் இழிவான அரசியல் சதிவலைக்குள் எமது தமிழ் அமைப்புக்கள் உள்வாங்கப்படுவது என்? 

நான் எந்த அமைப்பையும் சாராதவள் என்ற வகையில் சாதாரண பொதுமக்களில் ஒருத்தியாக   புலம்பெயர் நாடுகளில் செயற்படும் ஒவ்வொரு தமிழ் அமைப்புகளிடமும் ஈழமக்கள் சார்பாக நான் கேட்க, சொல்ல விரும்புவது இதுதான். 

எந்த அமைப்பாக இருந்தாலும், ஈழத்தமிழர்களின் அடையாளங்களைக் காப்பாற்ற முடியுமானால், எமது போராட்டத்திற்கும், தியாகங்களுக்கு மதிப்பளித்து செயற்படமுடியுமானால் முன்வாருங்கள். முடியவில்லை என்றால் எமது மக்களுக்கு இந்த அமைப்புக்கள் தேவைதானா என்ற விரக்தியை ஏற்படுத்தாத வகையில் அமைதியாக செயற்படுங்கள். 

எமது தேசியத்தலைவருக்குப் பின் அவருக்கு இணையாக எந்த தலைமைத்துவத்தையும் நாங்கள் இதுவரை காணவில்லை. இனிமேலும் காண முடியாது என்ற விரக்திநிலையை ஏற்படுத்தாதீர்கள். 

மக்களை நாடிபிடித்து செயற்பட முடியாத நீங்கள், உங்கள் தனிப்பட்ட அல்லது அமைப்பு ரீதியான இலாபங்களுக்காக  மக்களின் உணர்வுகளை பலியாக்காதீர்கள்.

குறைந்தபட்சம்  சிறு சிறு கருத்து முரண்பாடுகளைக் கூட கையாளமுடியாமல் குடுமிப்பிடி சண்டை போட்டுக் கொண்டு கிடைக்கும் உங்களிடம் எமது அரசியல் எதிர்காலத்தை எப்படி நம்பிக் கொடுக்க முடியும் என்பதே சாதாரண ஈழத்து தமிழச்சியான எனது கேள்வி. 

கொடியை ஏற்றாமல் விடுவதன் மூலம், நாம் தோற்றுப் போன இனம் என்ற உணர்வை எம் மத்தியில் விதைக்க முனைகிறீர்களா? எப்படியும் வாழ்ந்துவிட்டு போகலாம் என்று வாழ்ந்தவர்களை அல்லவே நாங்கள். இப்படித்தான் வாழவேண்டும் என்று வழிகாட்டிய தலைவனின் பின்னே ஒரு கொடியின் கீழ் ஒன்று திரண்டவர்கள். எப்படித்தான் நீங்கள் முயன்றாலும், நாங்கள் எமக்கென்ற கொடியோடும், இராணுவப் படைகளோடும்  அரசியல் கட்டமைப்புகளோடும் தனித்துவமாக வாழ்ந்தவர்கள் என்பதை வரலாறு பேசும். எனவே மக்களிடம் நம்பிக்கையை விதையுங்கள். எமது இனத்துக்கான அடையாளங்களோடு வாழவிடுங்கள். இல்லையென்றால் அதைச் செய்ய முன்வருபவர்களுக்கு  வழிவிடுங்கள்”.

Print Friendly, PDF & Email