Home சிறப்புச் செய்திகள் மக்கள் ஆணையை புறக்கணித்ததன் மூலம், தமிழ் மக்களின் பிரதிநிதிகள் என்ற தகுதியை இழந்தது பிரித்தானிய தமிழர்...

மக்கள் ஆணையை புறக்கணித்ததன் மூலம், தமிழ் மக்களின் பிரதிநிதிகள் என்ற தகுதியை இழந்தது பிரித்தானிய தமிழர் பேரவை!

746 views
0
SHARE

– மனுவில் கையெழுத்திட்டவர்களுக்கு தொலைபேசி மூலம் மிரட்டல் –

 

 

இலங்கை அரசபடைகளால் தமிழீழத்தில் கொத்துக்கொத்தாக ஈழத்தமிழர்கள் படுகொலை செய்யப்பட்ட முள்ளிவாய்க்கால் நினைவு தினமாகிய மே 18 அன்று, தாயகத்தில் வாழும் மக்களாலும் புலம்பெயர் ஈழத்தமிழர்களாலும் உலகெங்கும் உணர்வெழுச்சியுடன் நினைவுகூரப்படவுள்ளது.  இந்நிலையில் இலண்டனில் பிரித்தானிய தமிழர் பேரவை ஏற்பாடு செய்துள்ள நினைவேந்தல் நிகழ்வில், பொதுமக்களினதும் பிரித்தானிய தமிழர் பேரவையின் பெரும்பான்மை அங்கத்தவர்களினதும் விருப்பத்துக்கு மாறாக, அந்த அமைப்பின் தலைமை அதிகாரத்தை கைகளில் வைத்துள்ள சில நபர்கள், தமிழீழத் தேசியக்கொடியேற்றலை முற்றுமுழுதாக நிராகரித்து வருவதனால் மக்கள் கொதிப்படைந்துள்ளனர்.

தமிழ் தேசத்தின் ஆன்மாவான தமிழீழத் தேசியக்கொடியை பிரித்தானிய தமிழர் பேரவை புறக்கணிப்பது மிகவும் துரோகத்தனமான செயல் என பல பிரமுகர்கள் வெளிப்படையாக ஊடகங்களில் தெரிவித்துள்ள நிலையிலும், தமிழ்மக்களின் பிரதிநிதி என்று தங்களுக்கு தாங்களே முடிசூடிக்கொள்ளும் பிரித்தானிய தமிழர் பேரவையின் தலைமை, மக்களின் ஆணைக்கு கட்டுப்படாது தன்னிச்சையாக செயற்படுவது மக்கள் மத்தியில் வெறுப்பை ஏற்படுத்தியுள்ளது. ஈழத்தமிழினம் ஒரு இறையாண்மையுள்ள தேசிய இனம் என்பதை உலகுக்கு பறைசாற்றி நிற்கும் எமது தேசிய கொடியையும் பாதுகாத்து, உலக நாடுகளை அதை ஏற்கச் செய்து, அடுத்த தலைமுறைக்கு எடுத்துச் செல்ல வேண்டிய முக்கிய வரலாற்றுக் கடமை பிரித்தானிய தமிழர் பேரவை போன்ற புலம்பெயர் அமைப்புக்களின் கையில் இருப்பதை அவர்களின் தலைமை மறந்து செயற்படுவது மிகவும் வருந்தத்தக்க விடயம். அதிலும் குறிப்பாக, வெளிநாட்டு அரசியல்வாதிகளை திருப்திப்படுத்துவதற்காக, இராஜதந்திரம் என்ற போலிக்காரணங்களை முன்வைத்து, சொந்த மக்களின் விருப்புக்களை புறந்தள்ளி, செயற்பட்டுவருவது மன்னிக்க முடியாத குற்றமாகும்.

இரு வருடங்களுக்கு முன்னர் ஆரம்பித்த இந்த பிரச்சனை தொடர்பாக பிரித்தானிய தமிழர் பேரவையின் தலைமையிடம் பேச்சு வார்த்தைகளை நடாத்தி சுமூகமான தீர்வை எட்டுவதற்கு, பல பிரமுகர்களும் முன்னாள் போராளிகளும் அந்த அமைப்பின் உறுப்பினர்களும் பல பிரயத்தனங்களை மேற்கொண்டனர். ஆனால் அவற்றையெல்லாம் புறக்கணித்த, பிரித்தானிய தமிழர் பேரவையின் தற்போதய தலைமை, கேள்வி எழுப்பியவர்கள் மீது தனிபட்ட முறையிலான தாக்குதல்களையும் மேற்கொண்டது யாவரும் அறிந்ததே. அவற்றையெல்லாம் மீறி, மீண்டும் இந்த வருடமும் சர்வாதிகாரமாக தமது சொந்த விருப்புக்கு ஏற்றபடியே நிகழ்வுகளை நடாத்த முடிவு செய்தமை மக்கள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

தேசத்தை இழந்து நிற்கும் நிலையில் நாம், எமது தேசிய அடையாளங்களையும் இழக்க முடியாது. இதனைப் பொறுக்க முடியாத தேசிய உணர்வுமிக்க இளைய சமுதாயத்தினர், தொடர்ந்தும் பிரித்தானிய பேரவையின் தன்னிச்சையான முடிவுக்கு எதிராக, கையெழுத்துப் போராட்டமொன்றை நடாத்தி வந்தமை அனைவரும் அறிந்தது. இரவுபகல் பாராது ஓய்வொழிச்சலின்றி இளையோர்களால் முன்னெடுக்கப்பட்ட இந்த வெகுஜன போராட்டத்திற்கு பிரித்தானிய வாழ் தமிழர்கள் மட்டுமன்றி, பல தரப்பட்ட பிரமுகர்களும் தமது ஆதரவுக்கரத்தை நீட்டியுள்ளமை இங்கு குறிப்பிடத்தக்க முக்கிய விடயமாகும்.

ஒரு கிழமை காலப்பகுதியில் 2000 இற்கும் மேற்பட்ட மக்கள் கையொப்பமிட்டுள்ளமை மற்றும் நூற்றுக்கணக்கான பிரமுகர்கள்   ஊடகங்களில் வெளிப்படையாக பிரித்தானிய தமிழர் பேரவைக்கு  வேண்டுகோள் விடுத்துள்ளமை என்பன பெரும்பான்மை மக்கள் தேசியக் கொடி ஏற்றப்படுவதையே ஏகோபித்தமாக விரும்புகிறார்கள் என்பதை சந்தேகத்திற்கு அப்பால் நிரூபிக்கிறது என்று அடக்கப்பட்டவர்களுக்காக குரல் கொடுத்து வரும் சட்ட வல்லுனரும் மனித உரிமைகள் செயற்பாட்டாளருமான திரு. கீத் அவர்கள் தெரிவித்தார். அத்துடன் இந்த போராட்டத்துக்கு ஆதரவு வழங்கிய காரணத்தால் பிரித்தானிய தமிழர் பேரவையின் சில முக்கிய உறுப்பினர் தன் மீது தனிப்பட்ட முறையில் தாக்குதல் நடாத்தி வருவதாகவும், தரக்குறைவான குற்றச்சாட்டுக்களை திட்டமிட்டு பரப்பிவருவதாகவும் அவர்; மேலும் தெரிவித்தார்.

இந்தப் போராட்டம் எந்த அமைப்பும் சாராமல், பொதுமக்களால் சுயாதீனமாக முன்னெடுக்கபட்ட போதிலும், TYO உட்பட பல அமைப்புக்கள் முன்வந்து தமது ஆதரவை வழங்கியுள்ளன. இந்த வகையில், தமிழ் தோழமை அமைப்பினர் (Tamil Solidarity) இந்த கையெழுத்துப் போராட்டத்துக்கு முழு ஆதரவு வழங்கியுள்ளதுடன், பிரித்தானிய தமிழர் பேரவையின் தலைமையை இதற்கு பதில் வழங்கச்செய்யும் பொறுப்பையும் ஏற்றுள்ளனர்.

தேசிய நிகழ்வுகளில் தழிழீழ தேசியக்கொடி ஏற்றப்பட வேண்டும் என ஏன் மக்கள் உறுதியாக நம்புகிறார்கள் என்பதை விரிவாக விளக்கும் கோரிக்கையும், அதனை வலியுறுத்தி பிரமுகர்கள் வெளியிட்ட கருத்துக்களும், அதனை ஏற்கும் 2000 பொதுமக்களின் கையெழுத்துக்களும்; கொண்ட மனு தம்மிடம் கிடைக்கப் பெற்றுள்ளதாகவும் அவை பிரித்தானிய தமிழர்பேரவைக்கு உத்தியோகபூர்வமாக சமர்ப்பிக்கப்பட்டுள்ளது எனவும் தமிழ் தோழமை அமைப்பினர் தமது இணையத்தளம் ஊடாக உத்தியோகபூர்வமாக அறிவித்திருந்தனர். அத்துடன், இந்த கோரிக்கை மிகவும் நியாயமானது எனவும், பெரும்பான்மையான மக்களின் கோரிக்கைக்கு மதிப்பளிக்கவேண்டியது மக்கள் பிரதிநிதி; என சொல்லிக் கொள்ளும் அமைப்புகளின் கடமையாகும் எனவும் தமிழ் தோழமை அமைப்பின் நிறைவேற்று பணிப்பாளர் திரு சேனன் அவர்கள் தமது கடிதத்தில் தெரிவித்திருந்தார்.

இந்த மனு சமர்ப்பிக்கப்பட்டு, 48 மணிநேரம் கடந்த நிலையில் இன்னும் பிரித்தானிய தமிழர் பேரவையின் முடிவுகளில் எந்த மாற்றமும் ஏற்படாதது மிகவும் ஏமாற்றத்தை வழங்கியுள்ளதாக இந்த வெகுஜன போராட்டத்தை நெறிப்படுத்தியவர்களுள் ஒருவரும் முன்னாள் போராளியுமான திரு. குமரேசன் பாலசிங்கம் தெரிவித்தார்.

பிரித்தானிய தமிழர் பேரவையினரின் இந்த செயலானது மிகவும் தவறானதெனவும் அதனை மாற்றியமைத்துக் கொள்ளும்படியும் மூத்த போராளிகளான பொன். தியாகம் அப்பா, புரட்சிக் கவிஞர். காசியானந்தன், நீதியாளர்கள், மருத்துவர்கள், சட்டத்தரணிகள், இறுதி நாள்வரை முள்ளிவாய்க்காலில் நின்று களமாடிய போராளிகள்; மற்றும் மாவீர்களின் பெற்றோர் என பலதரப்பட்டோரும் வெளிப்படையாக ஊடக மூலம் விட்டுள்ள உருக்கமான வேண்டுதல்களையும், மனுவில் கையொப்பமிட்ட 2000க்கு மேற்பட்ட உறுப்பினர்கள் மற்றும் பொதுமக்களின்; மனுவையும் பிரித்தானிய தமிழர் பேரவையின் தலைமை புறக்கணிப்பு செய்திருப்பதன் மூலம் தாம் தமிழ் மக்களின் பிரதிநிதிகள் என்ற தகுதியை பிரித்தானிய தமிழர் பேரவை இழந்து விட்டது எனவும் செல்வி அம்பிகை சீவரத்தினம் தெரிவித்தார். இவர் பிரித்தானிய தமிழர் பேரவையின் மனித உரிமைகள் பிரிவின் முன்னாள் நிறைவேற்று உறுப்பினராக இருந்தவர் என்பதும், தலைமையின் சர்வாதிகார செயற்பாடுகளால் விரக்தியுற்று வெளியேறியவர் என்பதும் குறிப்பிடத்தக்கது.

இந்த பிரச்சனையை வெகு சுலபமாக தீர்ப்பதற்கு பல வழிகள் இருந்தும், இவ்வளவு எதிர்ப்புகளுக்கு மத்தியிலும், மக்கள் மனங்களை புண்படுத்தி, முள்ளிவாய்க்கால் தினத்தில் தேசிய கொடி ஏற்றாமல் நிகழ்வுகளை செய்தே ஆகவேண்டும் என பிரித்தானிய தமிழர் பேரவையின் தலைமை பிடிவாதம் செய்வது, அவர்கள் மக்களை பிளவுபடுத்த வேண்டும் என்ற நோக்கிலும், தேசிய சின்னங்களை அழிக்கும் நோக்கிலும் உறுதியாக இருப்பதை தெளிவாக நிரூபிக்கின்றது என திரு. துரையப்பா கிரோஜன் தெரிவித்தார். இந்த போராட்டம் இத்துடன் நிறைவடையப் போவது இல்லை என்றும், பிரித்தானிய தமிழர் பேரவையின் நிலைப்பாட்டில் மாற்றம் ஏற்படும் வரை தொடரும் எனவும் தெரிவித்தார். தவறும் பட்சத்தில் பிரித்தானிய தமிழர் பேரவை தமிழ்; மக்களை பிரதிநிதித்துவப்படுத்தும் அமைப்பு அல்ல என்பதை பகிரங்கமாக பிரித்தானிய பாராளுமன்ற உறுப்பினர்களுக்கு எழுத்து மூலம் அறிவிக்கும் துர்ப்பாக்கிய நிலைக்கு தள்ளப்படுவோம் என்றும் மக்கள் ஆணையை மீறும் பொது அமைப்புக்களுக்கு இது ஒரு பாடமாக அமையவேண்டும் எனவும் திரு. துரையப்பா கிரோஜன் மேலும் தெரிவித்தார்.

இது இவ்வாறு இருக்க, இந்த முயற்சி ஒரு சில தனிமனிதர்களால் மேற்கொள்ளப்படும் சதி என்ற வதந்தியை பரப்புவதன் மூலம், இந்த போராட்டத்தை கொச்சைப்படுத்த முயன்று வரும் பிரித்தானிய தமிழர் பேரவையின் தலைமை, இப்போராட்டத்தில் முன்னெடுக்கும் இளையோர்களையும் கையெழுத்திட்ட மக்களையும் தனிப்பட்ட ரீதியில் தொலைபேசி மூலம் அழைப்புக்களை ஏற்படுத்தி அச்சுறுத்திவரும் மிகவும் கீழ்த்தரமான செயலிலும் ஈடுபட்டுவருவதாக தெரியவருகின்றது.

Print Friendly