SHARE

தமிழர்களுக்கு நீதியைக் பெற்றுக் கொடுக்க சர்வதேச சமூகம் இனியும் தாமதிக்கக்கூடாது என வடமாகாண முதமைச்சர் சி.வி.விக்னேஸ்வரன் வேண்டுகோள் விடுத்துள்ளார்.

சர்வதேசத்தின் அழுத்தங்களால் மட்டுமே, இலங்கையில் ஒரு மாற்றத்தை ஏற்படுத்த முடியும் எனவும் முதலமைச்சர் குறிப்பிட்டுள்ளார்.

மனித உரிமைகள் பேரவையின் கூட்டத் தொடர் ஆரம்பமாகவுள்ளமை தொடர்பில் வாரத்துக்கொரு கேள்வியில் வினவப்பட்டமைக்கு முதலமைச்சர் பதிலளித்துள்ளார்.

சர்வதேச சமூகம் இலங்கை ஆட்சியாளருக்கு சாதகமான முறையில் 30/1 தீர்மானத்தைக் கொண்டுவந்ததாக வட மாகாண முதலமைச்சர் தெரிவித்துள்ளார்.

ஆனாலும், அரசாங்கம் அதன் கடப்பாடுகளை நிறைவேற்றுவதில் ஆர்வம் காட்டவில்லை என முதலமைச்சர் சுட்டிக்காட்டியுள்ளார்.

கடந்த ஒரு வருடத்தில் கொடுத்த வாக்குறுதிகளில் எவை நிறைவேற்றப்பட்டன என வடக்கு முதல்வர் கேள்வியெழுப்பியுள்ளார்.

காணாமல் ஆக்கப்பட்டோர் பற்றிய அலுவலகத்திற்கான சட்டமூலம் நிறைவேற்றப்பட்டு ஒன்றரை வருடங்கள் கடந்தும் இன்னும் அது செயற்படவில்லை என்பதையும் முதலமைச்சர் ஞாபகப்படுத்தியுள்ளார்.

பயங்கரவாதத் தடைச்சட்டம் இன்னும் நீக்கப்படவில்லை என்பதுடன், அந்தக் கொடூரமான சட்டத்தின் கீழ் கைதான பலர் இன்னமும் தடுப்பில் உள்ளதாகவும் முதலமைச்சர் குறிப்பிட்டுள்ளார்.

சிறுபான்மையினருக்கு எதிரான அச்சுறுத்தல்கள் தொடர்வதாகத் தெரிவித்துள்ள முதலமைச்சர், அரசியலமைப்பு மூலமான தீர்வு முயற்சிகள் முன்னெடுக்கப்படும் நிலையும் தற்போது இல்லை என குறிப்பிட்டுள்ளார்.

உள்ளூராட்சிமன்றத் தேர்தல் முடிவுகளையடுத்து கூட்டரசாங்கம் அதனை முன்னெடுப்பதற்கான வாய்ப்புக்கள் குறைவு என்பதே யதார்த்தம் என வாராந்த கேள்விக்கு முதலமைச்சர் பதிலளித்துள்ளார்.

நெருக்குதல் இல்லாவிட்டால் உரிமைகளைத் தருவதற்கும், நியாயமான முறையில் போர்க் குற்றங்களை விசாரிக்கவும் அரசாங்கம் ஒரு போதும் முன்வராது என முதலமைச்சர் தமது நிலைப்பாட்டை வௌிப்படுத்தியுள்ளார்.

சர்வதேச குற்றவியல் நீதிமன்றுக்கு இலங்கையை ஐ.நா பாதுகாப்புச்சபை ஆற்றுப்படுத்த வேண்டும் என முதலமைச்சர் ​வேண்டுகோள் விடுத்துள்ளார்.

அவ்வாறில்லாத பட்சத்தில், இலங்கையில் நடந்த சர்வதேச மனித உரிமைகள் மீறல் பற்றி ஆராய்வதற்கு, தீரப்பு மன்றம் ஒன்று நியமிக்கப்பட வேண்டும் எனவும் முதலமைச்சர் வலியுறுத்தியுள்ளார்.

Print Friendly, PDF & Email