SHARE

தமிழின அழிப்புக்கு நீதி கோரி ஐ.நா. நோக்கி விரையும் ஈருருளிப் பயணம் இன்று 9 ஆவது நாளா. (08.03.2018) கொல்மார் மாநகரத்திலிருந்து சுவிஸ் நாட்டைச் சென்றடையவுள்ளது.

ஆரம்பமாகியுள்ள ஐக்கிய நாடுகள் சபையின் கூட்டத்தொடரில் தமிழின அழிப்புக்கு நீதிகோரி திரளவுள்ள ஐ.நா. நோக்கிய பேரணியை வலுப்படுத்தவும், ஐரோப்பிய நாடுகளிடம் நீதிகோரியும் கடந்த பெப்ரவரி மாதம் 28 ஆம் திகதி
ஐரோப்பிய பாராளுமன்ற முன்றலிலிருந்து ஆரம்பமான ஐ.நா. நோக்கிய மனிதநேய ஈருருளிப்பயணம் 9 ஆவது நாளான இன்றைய தினமும் கடும் குளிரிலும் தொடர்கிறது.

8 ஆவது நாளான நேற்றய தினம் ஸ்ரார்ஸ்பூர்க் மாநகரிலுள்ள ஐரோப்பிய நாடுகளுக்கான ஆலோசனை அவையின் முன்பாக தமது மனித நேயப் பயணத்தை தொடங்கிய குழுவினர் அங்கிருந்து 40 கிலோமீற்றர்கள் கடந்து, அல்சாசு மாநிலத்தின் இதயம் என்று வர்ணிக்கப்படுகின்ற செலசுதா நகரம் சென்றடைந்தனர்.

அங்கு அவர்களை வரவேற்ற அந்நகர முதல்வர், நீண்ட பயணத்திற்கான சக்தியைப் பெற்றுக்கொள்ள வேண்டுமெனக் கூறி அவர்களுக்கு
சிற்றுண்டி, பழரசம் என்பவற்றைப் பரிமாறியிரந்தார். தமிழ் மக்களின் தொடர்ச்சியான போராட்டங்களுக்கு தம்முடைய ஆதரவினைத் தெரிவித்து, பயணத்தில் பங்குபற்றியோருக்கு அந்த நகரத்தின் வரலாறு சார்ந்த நூலைப் பரிசளித்தார்.

இதனைத்தொடர்ந்தும் 30 கிலோமீற்றர்கள் கடந்து கொல்மார் என்ற இடத்தைச் சென்றடைந்தனர். அங்கு அவர்களை வரவேற்ற முதல்வர் ஐக்கிய நாடுகள் அவையின் மனித உரிமைகளுக்கான ஆலோசனை அவையில் தமிழ்மக்களுக்கான நீதிக்காக பிரான்சு குரல் கொடுக்க வலியுறுத்தி தமது மாநகர அவை சார்பில் முறையிடுவதாக உறுதி கூறினார்.

இந்நிலையிலேயே இன்று கொல்மார் மாநகரத்திலிருந்து தொடர்ந்து பயணிக்கவுள்ள ஈருருளிப்பயணம் மதியம் 13.30 க்கு முலூசு நகரைச் சென்றடையவுள்ளது. முலூசு மாநகர முதல்வரின் சந்திப்பிற்கு பின் 17.00 மணிக்கு சந் லூயி நகர அவையைக் கடந்து 18.00 மணிக்கு சுவிசு நாட்டைச் சென்றடையவுள்ளது.

Print Friendly, PDF & Email