SHARE

கடந்த ஆண்டு நவம்பரில் (2017) கண்காணிப்புப் பொறுப்புக்கூறல் குழு அறிக்கையளித்த பின், சிறிலங்கா அரசாங்கம் எதுவித முன்னேற்றமும் அடையவில்லை என சிறிலங்காவின் நிலைமாறுகால செயற்பாடுகள், மற்றும் நீதி நிர்வாக நடவடிக்கைகளைக் கண்காணிக்கும் பன்னாட்டு நிபுணர் குழுவினர்விடுத்துள்ள அறிக்கையில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

சிறிலங்காவைக் கண்காணிக்கும் பன்னாட்டு நிபுணர்கள் குழுவின் அறிக்கை ஐ.நா. மனித உரிமைகள் சபையில் கையளிக்கப்பட்டுள்ளது. அந்த அறிக்கையிலே இவ்வாறு சுட்டிக்காட்டிடப்பட்டுள்ளது.

ஐ.நா.மனித உரிமைகளுக்கான செயலகம் இலங்கை தொடர்பில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்களை மையப்படுத்தி, இலங்கையின் நிலைமாறுகால செயற்பாடுகள், மற்றும் நீதி நிர்வாக நடவடிக்கைகளைக் கண்காணித்து ஐ.நா. சபையின் மனித உரிமைகள் செயலகத்திற்கு பன்னாட்டு நிபுணர்கள் குழு அறிக்கையிட்டு வருவது குறிப்பிடத்தக்கது.

அதன் அடிப்படையில் ஐக்கிய நாடுகள் சபையின் மனித உரிமைகளுக்கான பேரவையினால் நடத்தப்படும் கலந்தாய்வுக் கூட்டத் தொடரின் 37,ஆவது அமர்வு இம்மாதம் ஆரம்பமாகி நடைபெற்று வரும் வேளையில் வெளிவந்திருப்பது முக்கியத்துவம் வாய்ந்த ஒன்றாக கருதப்படுகிறது.

34 பக்கங்களைக் கொண்டதாக அமைந்துள்ள நிபுணர்கள் குழுவின் மூன்றாவது கள அறிக்கையானது, பாதிப்புற்றோரின் கோணத்திலிருந்து பொறுப்புக்கூறல் வழிமுறைகளது திறத்தின் மீது கவனம் செலுத்துவதுடன், தற்சார்பான மதிப்பீட்டையும், முன்னேற்றமான செயற்பாடுகளையும், பரிந்துரைகளையும் வழங்கியுள்ளது.

நாடுகடந்த தமிழீழ அரசாங்கத்தினால் நியமிக்கப்பட்ட இந்த சுயாதீன நிபுணர் குழு ஆறு நாடுகளைச் சேர்ந்த வல்லுனர்களை உள்ளடக்கியதாக செயற்பட்டு வருகிறமை குறிப்பிடத்தக்கது.

Print Friendly, PDF & Email