SHARE

காணாமல் ஆக்கப்பட்டவர்கள் இறந்திருக்கலாம் என பதிலளித்த ஜனாதிபதி மற்றும் பிரதமர், காணாமல் ஆக்கப்பட்டவர்களை தேடுவதற்காக அலுவலகம் தொடங்குகிறார்கள்.

எனவே, போர்க் குற்றவாளிகளை இலங்கை ஆட்சியாளர்கள் ஒருபோதும் தண்டிக்கமாட்டார்கள் என்பது மட்டுமே இதன் மூலம் விளங்குகின்றது என வடமாகாண முதலமைச்சர் சீ.வி.விக்னேஷ்வரன் தெரிவித்துள்ளார்.

ஜெனிவாவில் ஐ.நா. மனித உரிமைகள் கூட்டத் தொடர் நடைபெற்றுவரும் நிலையில், இலங்கை மீது எப்படியான நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும் என ஊடகவியலாளர்கள் எழுப்பிய கேள்விக்கு பதிலளிக்கும்போதே முதலமைச்சர் மேற்கண்டவாறு கூறியுள்ளார்.

இதன்போது மேலும் அவர் கூறுகையில்,
காணாமல்போனவர்கள் இறந்திருக்கலாம் என பதிலளித்த ஜனாதிபதி மற்றும் பிரதமர், இப்போது காணாமல்போனவர்களை கண்டறிவதற்காக அலுவலகம் ஒன்றை உருவாக்குவதிலிருந்து போர்க் குற்றங்கள் செய்தவர்களை தண்டிப்பதாக இலங்கை அரசாங்கம் பாசாங்கு செய்வது புலனாகின்றது.

ஆகவே ஒரு மக்கள் கூட்டத்திற்கு எதிராக குற்றமிழைத்தவர்களை இலங்கை அரசாங்கம் ஒருபோதும் தண்டிக்காது.
அதுபோல் உள்நாட்டு விசாரணை என்பதும் குற்றவாளிகளை பாதுகாப்பதற்கான விசாரணையாக இருக்குமே தவிர குற்றவாளிகளை அடையாளம் கண்டு தண்டிப்பதற்கான விசாரணையாக ஒருபோதும் அமையாது.

எனவே கடந்த ஆண்டுகளில் ஐ.நா. மனித உரிமைகள் ஆணையாளரிடம் இலங்கையை சர்வதேச விசாரணைக்கு உட்படுத்தும்படி கடிதம் எழுதியிருந்தேன். அதேபோல் ஐ.நா. மனித உரிமைகள் ஆணையாளர் நேரில் வந்தபோதும் அதனையே கூறினேன்.
மேலும் இலங்கை தொடர்பான பிரேரணையை அமெரிக்கா மற்றும் பிரிட்டன் உள்ளிட்ட நாடுகள் ஐ.நா. மனித உரிமைகள் ஆணையகத்திற்கு கொண்டுவந்தது.
அவர்கள் பாதிக்கப்பட்ட தமிழ் மக்களுக்காகவே பிரேரணையை கொண்டுவந்த தாக பாசாங்கு செய்தாலும், உண்மையில் அவர்கள் பூகோள அரசியல் நலன்களின் அடிப்படையிலேயே அந்த பிரேரணையை கொண்டுவந்தார்கள்.

ஆகவே இலங்கை தொடர்பாக சரியான தீர்மானம் எடுப்பதற்கும், பாதிக்கப் பட்ட தமிழ் மக்களுக்கு நியாயம் கிடைப்பதற்கும் அமெரிக்கா மற்றும் பிரிட்டன் உள்ளிட்ட பிரேரணையை கொண்டுவந்த நாடுகள் தொடர்ந்தும் ஒத்தாசை புரியவேண்டும். அதேபோல் மக்களும் ஒன்றிணைந்து போராட்டங்களை நடத்துவதன் ஊடாக அழுத்தங்களை கொடுக்கவேண்டும்” எனத் தெரிவித்தார்.

Print Friendly, PDF & Email