SHARE

(கார்ட்டூன்-தீர்க்கதரிசன ஓவியர் அமரர் அஸ்வின்)  

ஆயுள் தண்டனை விதிக்கப்பட்ட அரசியல் கைதியான சச்சிதானந்தம் ஆனந்தசுதாகரனை விடுவிக்கக்கோரி ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவுக்கு கருணை மனுக்கள் குவியத்தொடங்கியுள்ளான.

தாயின் இறுதி நிகழ்வுக்கு அழைத்துசெல்லப்பட்ட அரசியல்கைதியான தந்தையின் சிறைச்சாலை வாகனத்தில் அவரது மகள் ஏறிய நெகிழவைக்கும் சம்பவத்தினையடுது நாட்டின் அனைத்து தரப்பினரிடமிருந்தும் ஜனாதிபதிக்கு கருணை மனுக்கள் அனுப்பப்பட்டு வருகின்றன.

கடந்த 2008 ஆண்டு கைது செய்யப்பட்டு மகசின் சிறைச்சாலையில் தடுத்து வைக்கப்பட்டு, பின்னர் கடந்த வருடம் ஆயள் தண்டனை விதிக்கப்பட்ட அரசியல் கைதியான சச்சிதானந்தம் ஆனந்த சுதாகரனின் மனைவி ஆனந்தசுதாகரன் யோகராணி கடந்த 15 ஆம் திகதி சுகயீனம் காரணமாக மரணமடைந்திருந்தார்.

நேற்று முன்தினம் கிளிநொச்சி மருதநகர் கிராமத்தில் நடைபெற்ற அவரது இறுதி நிகழ்வில் கலந்து கொள்ள கணவரான ஆனந்த சுதாகரன் பலத்த பாதுகாப்புடன் அழைத்துவரப்பட்டார்.

3 மணித்தியாலங்கள் மட்டுமே மனைவியின் இறுதி நிகழ்வில் கந்து கொள்ள அனுமதிக்கப்பட்டு மீண்டும் சுதாகரன் சிறைச்சாலை வாகனத்தில் ஏற்றப்பட்டார்.

ஆனந்த சுதாகருக்கு மகனும் மகளும் என இரு பிள்ளைகள் உள்ளனர். மகன் தாயின் உடலுடன் மாயானம் நோக்கிய இறுதி ஊர்வலத்தில் சென்றுவிட 10 வயது நிரம்பிய மகள் தந்தையுடன் சிறைச்சாலை வாகனத்தில் ஏறிய சம்பவம் அனைவரது மனங்களையும் நெகிழவைத்தது.

தந்தைக்கு பின்னால் அச்சிறுமி சிறைச்சாலை வாகனத்தில் ஏறும் குறித்த புகைப்படம் அன்றுமுதல் ஊடகங்கள் மற்றும் சமூக வலைத்தளங்கள் என அனைத்தையும் ஆக்கிரமித்துள்ளன.

இந்நிலையிலேயே தற்போது தாயை இழந்தும் தந்தையை பிரிந்தும் அனாதரவாக நிற்கும் அக் குழந்தைகளின் நிலையை கருத்தில் கொண்டு, அவர்களின் தந்தையான ஆயுள் தண்டனை கைதி சச்சிதானந்தம் ஆனந்தசுதாகரனை, ஜனாதிபதி பொது மன்னிப்பு அடிப்படையில் விடுதலை செய்யக்கோரி அவருக்கு கருணை மனுக்கள் அனுப்பப்பட்டு வருகின்றன.

நமது ஈழ நாடு இணையதின் வாசகர்களையும் குறித்த விடயம் தொடர்பில் ஐனாதிபதிக்கு கருணை மனுவை அனுப்ப கோரி நிற்கின்றோம். அதிகரிக்கும் கோரிக்கைகள் அச் சிறுவர்களை தந்தையிடத்தில் சேர்த்துவைக்கு என்ற நம்பிகையுடன்.

Print Friendly, PDF & Email