SHARE
முல்லைத்தீவு மாவட்டத்தில் மேற்கொள்ளப்பட்டுவரும் திட்டமிட்ட சிங்கள குடியேற்றங்களை வடமாகாண சபை உறுப்பினர்கள் இன்றைய தினம் நேரில் சென்று பார்வையிட்டுள்ளனர்.
முல்லைத்தீவு உள்ளிட்ட வன்னி மாவட்டங்களில் மேற்கொள்ளப்பட்டுவரும் சிங்கள குடியேற்றங்கள் தொடர்பில் ஆராயும் விஷேட அமர்வு கடந்த 05 ஆம் திகதி வடமாகாண சபையில் நடைபெற்றது.
இதன்போது திட்டமிட்ட சிங்கள குடியேற்றங்கள் தொடர்பில் நேரில் சென்று ஆராய்வதற்கு வடமாகாண சபையில் உறுப்பினர்கள் ஏகமனதாக தீர்மானித்தனர்.
இதன்பிரகாரம் இன்று காலை 09 மணியளவில் முல்லைத்தீவு மாவட்ட செயலகம் முன்பாக வடமாகாண சபை உறுப்பினர்கள் அனைவரும் ஒன்று கூடி முல்லைத்தீவில் திட்டமிட்டு சிங்கள குடியேற்றங்கள் மேற்கொள்ளப்பட்டுள்ள கொக்கிளாய், நாயாறு மாயபுரம் உள்ளிட்ட பகுதிகளுக்கு நேரடியாக சென்று அந்த பகுதிகளை பார்வையிடுவதாகத் தீர்மானித்தனர்.
இந்நிலையில் இன்றைய தினம் வடமாகாண சபை உறுப்பினர்கள் திட்டமிட்ட சிங்களக் குடியேற்றம் நடைபெறும் இடங்களை நேரடியாகச் சென்று ஆராய்ந்துள்ளனர்.
அத்துடன், இன்று மாலை மாவட்ட செயலகம் முன்பு கூடி கவனயீர்ப்பு போராட்டம் ஒன்றை நடாத்தி மாவட்ட செயலாளர் ஊடாக ஜனாதிபதி மற்றும் பிரதமருக்கு மகஜர் கையளிப்பது என்றும் வடமாகாண சபை உறுப்பினர்கள் ஏகமனதாக தீர்மானித்துள்ளனர்.
மாயாபுர சிங்கள குடியேற்றத் திட்டத்தினால் முல்லைத்தீவு மாவட்டத்தில் வாழும் சுமார் 7 ஆயிரம் தமிழ் மக்கள் பாதிக்கப்படும் அபாயம் எழுந்துள்ளதாகவும் வடமாகாண சபை உறுப்பினர் துரைராசா ரவிகரன் வட மாகாண சபையில் எச்சரித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.
Print Friendly, PDF & Email