SHARE

இந்திய பிரதமர் மோடியின் வருகைக்கு எதிர்ப்பு தெரிவித்து #GoBackModi என்ற ஹேஷ்டேக் உருவாக்கப்பட்டிருந்தது. தற்போது அந்த ஹேஷ்டேக் உலக அளவில் ட்விட்டர் ட்ரெண்டிங்கில் இடம் பிடித்துள்ளது.

காவிரி மேலாண்மை வாரியம் அமைக்காத மத்திய அரசை கண்டித்தும், தமிழகம் வந்த பிரதமர் மோடிக்கு எதிர்ப்பு தெரிவித்தும் சென்னை விமான நிலையத்தில் பல்வேறு தரப்பினர் இன்று காலை முதல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

எனினும் பலத்த எதிர்ப்புகளுக்கு மத்தியில் பிரதமர் மோடி, சென்னை விமான நிலையம் சென்றடைந்தார். மோடி, விமான நிலையத்தில் இறங்கிய சமயத்தில் அந்தப் பகுதியைச் சுற்றி கறுப்பு பலூன்கள் பறக்கவிடப்பட்டன.
பிரதமர் மோடியின் வருகைக்கு எதிர்ப்பு தெரிவித்து, சென்னை பரங்கிமலைப் பகுதிகளில் நூற்றுக்கும் மேற்பட்டவர்கள் கறுப்புக்கொடி காட்டி போராட்டத்தில் ஈடுபட்டனர்.

போராட்டகாரர்கள் கைது
சென்னை விமான நிலையத்தின் உள்நாட்டு முனைய வருகை பகுதியில் கறுப்புக்கொடி ஏந்தி போராட்டம் நடத்திய இயக்குநர்கள் பாரதிராஜா, அமீர், வெற்றிமாறன், ராம் ஆகியோர் கைது செய்யப்பட்டனர்.

அதேவேளை சென்னை விமான நிலையம் அருகே போராட்டம் நடத்திய நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான் உள்ளிட்டோரும் கைதாகினர்.

Print Friendly, PDF & Email