SHARE
முல்லைத்தீவு கரையோர பிரதேசங்களில் தமிழர்களுக்கு சொந்தமாக  உள்ள பல கரைவலைபாடுகளில் இப்போது தென்னிலங்கை மீனவர்கள் தொழில் செய்துவருகிறார்கள்.
தென்னிலங்கையிலிருந்து வந்து கட்டைக்காடு முதல் நாயாறு, கொக்கிளாய், முகத்துவாரம் வரையிலான கரையோர பகுதிகளில் வாடிகள் அமைந்து, அங்கு தங்கியிருந்து தென்னிலங்கை மீனவர்கள் கரைவலை தொழில் செய்கின்றனர். அதுவும் இயந்திர வலுவை (உழவு இயந்திரம்) பயன்படுத்தி தொழில் செய்கின்றார்கள்.
அது மட்டுமின்றி தடை செய்யப்பட்ட தொழில் முறைமையான  சுருக்கு வலைகள் பாவித்தும் , வெளிச்சம் பாய்ச்சியும் தொழில் செய்வதுடன் கடலட்டைகளையும் பிடிக்கின்றனர்.
இதனால் தமிழ் மீனவர்கள் பாதிக்கப்படுவதாகவும் தென்னிலங்கையிலிருந்து வந்து இராணுவத்தினரின் பாதுகாப்புடன் சட்டவிரோதமான முறைமைகளில் மீன் பிடியில் ஈடுபடுவதாகவும் வடமாகாண சபையில் பல தடவைகள் பிரஸ்தாபிக்கப்பட்டுள்ளன.
அது தொடர்பில் கடந்த 10ஆம் திகதி வடமாகாணசபை உறுப்பினர்கள்,  தென்னிலங்கை மீனவர்கள் தமிழர்களுக்கு சொந்தமான பகுதிகளில் வாடிகள் அமைத்து இயந்திர வலுவை பயன்படுத்தி கரை வலை தொழில் செய்வதனை நேரில் சென்று வேடிக்கை பார்த்து திரும்பினர்.
இதனிடையே நேற்றைய தினம் வடமராட்சி ஆழியவளை கடற்பரப்பில் கரைவலை தொழில் செய்த தமிழ் மீனவர் ஒருவரின் வலையில் 20 ஆயிரம் கிலோ பாரை மீன்கள் அகபட்டு உள்ளன. அவற்றின் சந்தை பெறுமதி ஒன்றரை கோடி ரூபாய் பெருமதியாகும்.
இந்நிலையில் வடக்கு கடல்களை தென்னிலங்கை மீனவர்கள் ஆக்கிரமித்துவருவதால் இவ்வாறன பெரும் தொகை வருமானங்கள் தமிழரிடமிருந்து பறிபோகின்றான. தமிழ் மீனவர்களின் வாய்ப்புக்களை அவர்கள்  கொள்ளையடித்து செல்கிறார்கள்.
எனவே இதுதொடர்பில் சம்பந்தப்பட்ட அமைச்சுகள் மற்றும் தமிழ் தலைமைகள் உரிய கவனம் கொண்டு தமிழ் மீனவர்களின் வாழ்வாதாரத்தை மேம்படுத்த  நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டுமென தமிழ் மீனவர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
படம் :- முல்லைத்தீவு கொக்கிளாய் பகுதியில் உழவு இயந்திரம் பயன்படுத்தி கரை வலை தொழில் செய்யும் தென்னிலங்கை மீனவர்கள். (மயூர பிரியன்) 
Print Friendly, PDF & Email