SHARE
வடகொரியா மற்றும் தென்கொரிய அதிபர்களுக்கிடையிலான வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த சந்திப்பு இன்று நிகழ்ந்தது.
உலகமே ஆச்சரியப்படும் அளவில் கடந்த 1953 ம் ஆண்டுக்குப்பின்னர் முதன் முறையாக வட கொரிய அதிபர் தென் கொரிய எல்லையை கடப்பதும், வட மற்றும் தென் கொரிய அதிபர்கள் சந்தித்து கைகுழுக்கிக் கொள்வதும் இன்று நடைபெற்றது.
இந்த வரலாற்று நிகழ்வு உலகம் முழுவதும் ஆச்சரியத்தையும் பரபரப்பையும் ஏற்படுத்தியுள்ளதுடன் இரு தலைவர்களது சந்திப்புக்கும் தென் கொரிய மற்றும் வட கொரிய மக்கள் வரவேற்பு தெரிவித்துள்ளனர்.
கொரியப்போர் 1953-ஆம் ஆண்டு முடிவுக்கு வந்த பின்னர் வட- தென்கொரியா இடையே பனிப்போர் பல்லாண்டு காலமாக நீடித்து வந்தது.
இந்நிலையில் சமீபத்தில் தென்கொரியாவில் நடந்த குளிர்கால ஒலிம்பிக் போட்டி, சில அதிரடி மாற்றங்களை ஏற்படுத்தியது. அணு ஆயுத சோதனைகள் மூலம் மிரட்டி வந்த வடகொரியா இறங்கி வந்து தென் கொரியாவுடன் பேச்சு வார்த்தைக்கு முன் வந்தது. அதன் பின் இருநாடுகளின் உயர்மட்ட குழுவினர் சந்தித்து பேசினர். இதனால் இரு நாடுகளுக்கிடையேயான பகை விலகத் தொடங்கியது.

இதன் தொடர்ச்சியாகவே இன்று (27) வடகொரியா ஜனாதிபதி கிம் ஜாங்-உன் உம் தென் கொரியா ஜனாதிபதி மூன் ஜே உம் உச்சி மாநாட்டில் சந்தித்துப் பேசுவதற்கு முடிவு செய்யப்பட்டது.

இந்நிலையில் இரு நாடுகளின் எல்லையையொட்டி தென்கொரிய பகுதியில் உள்ள பன்முஞ்சோமில் ஒழுங்கு செய்யப்பட்ட மாநாட்டில் இரு நாட்டு தலைவர்களும் சந்தித்து கொண்டனர்.
இந்த சந்திப்பிற்காக தென்கொரிய எல்லைக்குள் வடகொரிய அதிபர் கிம் ஜாங்-உன் காலடி வைக்கும் வீடியோ காட்சி ஊடகங்கள் முதல் சமூக வலைத்தளங்கள் வரை முதன்மை செய்தியாக இடம் பிடித்துள்ளது.
 
இவ்வரலாற்றுச் சந்திப்பில் கொரிய பிராந்தியத்தை அணு ஆயுதமற்ற பிராந்தியமாக மாற்றுவதற்கான நடவடிக்கைகளை எடுக்க வட கொரியா மற்றும் தென் கொரியா தலைவர்கள் உறுதி பூண்டுள்ளனர்.
Print Friendly, PDF & Email