SHARE

மகாராணியின் அதிகாரபூர்வ நிழல் நிதியமைச்சர் உட்பட அனைத்து கட்சி நாடாளுமன்ற உறுப்பினர்கள் பங்கேற்பு

பிரித்தானிய நாடாளுமன்ற வளாகத்தில் இன்று முள்ளிவாய்க்கால் தமிழின அழிப்பு நினைவேந்தல் இடம்பெறுகின்றது.

தென்மேற்கு இலண்டன் மிற்சம் தொகுதி நாடாளுமன்ற உறுப்பினர் சிபோன் மக்டொனாவின்   அனுசரணையில், தொழிற்கட்சிக்கு ஆதரவான தமிழர்கள் அமைப்பின் ஒருங்கிணைப்பின் கீழ், பிரித்தானிய நாடாளுமன்ற வளாகத்திற்கு உட்பட்ட Portcullis House கட்டிடத் தொகுதியின் Boothroyd Room மண்டபத்தில் இன்று மாலை 6:30 மணிக்கு இந் நினைவேந்தல் நிகழ்வு நடைபெறவுள்ளது.

தொழிற்கட்சியின் இரண்டாம் நிலைத் தலைவரும், பிரித்தானிய மகாராணியின் அதிகாரபூர்வ நிழல் நிதியமைச்சருமான ஜோன் மக்டொன்ல், நிழல் சுகாதாரத்துறை அமைச்சர் ஜொனத்தன் அஸ்வேர்த், நிழல் பன்னாட்டு வணிகத்துறை அமைச்சர் பரி கார்டினர், நிழல் வெளியுறவு விவகார அமைச்சர் பபியன் கமில்ட்ன் ஆகியோர் உட்பட தொழிற்கட்சியின் மூத்த நாடளுமன்ற உறுப்பினர்கள் இந்நிகழ்வில் உரையாற்றவுள்ளனர்.

தன்னாட்சியுரிமை உட்பட தமக்கே உரித்தான சகல உரிமைகளையும், சுதந்திரங்களையும் தமிழ் மக்கள் வென்றெடுப்பதற்குத் தொழிற்கட்சி உறுதுணை நிற்கும் என்ற நிலைப்பாட்டை இந்நிகழ்வில் பங்கேற்கும் நிழல் அமைச்சர்கள் மற்றும் நாடாளுமன்ற உறுப்பினர்கள் வெளிப்படுத்த இருப்பதோடு, இறுதி யுத்தத்தில் நிகழ்ந்த பன்னாட்டுக் குற்ற மீறல்கள் தொடர்பில் பிரித்தானிய அரசாங்கத்தின் ஊடாக சிறீலங்கா அரசாங்கத்தின் மீது அழுத்தம் பிரயோகிப்பதற்கு தாம் எடுக்க உள்ள அடுத்த கட்ட நடவடிக்கைகள் குறித்தும் கருத்துரைகளை ஆற்ற இருக்கின்றனர்.

தொழிற்கட்சியின் நிழல் அமைச்சரவையின் பெரும்பாலான உறுப்பினர்கள் பங்கேற்கும் இந்நிகழ்விற்கு வலுச்சேர்க்கும் முகமாக இதில் பிரித்தானியாவாழ் தமிழீழ உறவுகளைப் பங்கேற்குமாறு தொழிற்கட்சிக்கு ஆதரவான தமிழர்கள் அமைப்பு அழைப்பு விடுத்துள்ளது.

Print Friendly, PDF & Email