SHARE
-இராணுவத்தினர் சார்பில் மன்றில் முன்னிலையான சட்டத்தரணி
நாவற்குழி பகுதியில் இராணுவத்தினரால் கைது செய்யப்பட்ட எவரும் இராணுவ தடுப்பு முகாம்களில் இல்லை என இராணுவத்தினர் சார்பில் மன்றில் முன்னிலையான சட்டத்தரணி தெரிவித்தார்.
நாவற்குழி பகுதியில் அமைந்திருந்த இராணுவ முகாம் அதிகாரியினால் கைது செய்யப்பட்டு பின்னர் காணமல் ஆக்கப்பட்ட 24 இளைஞர்கள் தொடர்பிலான ஆட்கொணர்வு மனு மீதான விசாரணை இன்றைய தினம் யாழ்.மேல் நீதிமன்றில் நீதிபதி மா. இளஞ்செழியன் முன்னிலையில் நடைபெற்றது.
அதன் போது மனுதார்கள் சார்பில் மன்றில் முன்னிலையான சட்டத்தரணிகள் , மனுதாரர்கள் இன்றும் தமது உறவுகள் இராணுவ தடுப்பு முகாம்களில் தடுத்து வைக்கப்பட்டு உள்ளனர் என நம்புகின்றனர்.
நாவற்குழி இராணுவ முகாம் இராணுவத்தினரால் கைது செய்யப்பட்டு காணாமல் ஆக்கப்பட்ட ஒருவரை தாம் கண்டோம் அவரது உறவினர்களிடம் சிலர் கூறி உள்ளனர். துரதிஸ்ட வசமாக குறித்த உறவினர் கடந்த நான்கு மாதங்களுக்கு முன்னர் இயற்கை எய்தி விட்டார் என மன்றில் தெரிவித்தனர்.
அதன் போது , நாவற்குழி இராணுவ முகாம் இராணுவத்தினரால் கைது செய்யப்பட்டதாக கூறப்படும் எவரும் இராணுவ தடுப்பு முகாம்களில் இல்லை.
காணாமல் ஆக்கப்பட்டவர்கள் இராணுவ தடுப்பு முகாம்களில் தடுத்து வைக்கப்பட்டு உள்ளனர் என கூறப்பட்ட சம்பவத்தின் உண்மை தன்மைகளை அறிவதற்காக ஐ. நா  பிரதிநிதிகள் பல இராணுவ முகாம்களில் சோதனையிட்டனர்.
அதன் போது இராணுவ முகாம்களில் எவரும் தடுத்து வைக்கப்பட்டு இருந்தார்கள் என கண்டுபிடிக்கப்படவில்லை. எனவே இராணுவ முகாம்களில் எவரும் தடுத்து வைக்கப்படவில்லை என்பதனை உறுதியாக கூற முடியும் என தெரிவித்தார்.
Print Friendly, PDF & Email