SHARE

மலையாக மக்களை பிரதிநிதித்துவப்படுத்தும் தலைவர்களில் ஒருவராக அமைச்சர் மனோகணேசன் இருப்பதனால் , அரசியல் நாகரிகம் இன்றி அவரை விமர்சித்தால் , அது மலையாக மக்களை புண்படுத்தும் என்பதனால் இன்று விமர்சிக்கவில்லை. என்னை மீண்டும் சீண்டினால் விமர்சிப்பேன் என வடமாகாண சபை ஆளும் கட்சி உறுப்பினர் எம்.கே.சிவாஜிலிங்கம் தெரிவித்துள்ளார். 

வடமாகாண சபை உறுப்பினரை அமைச்சர் மனோகணேசன் “கோமாளி” என விளித்து தெரிவித்த கருத்து தொடர்பில் கருத்து தெரிவிக்கும் போதே சிவாஜிலிங்கம் அவ்வாறு தெரிவித்தார்.
மேலும் தெரிவிக்கையில் ,
என்னுடைய கருத்துக்கள் தொடர்பில் எதிர்க்கருத்து தெரிவிக்க வேண்டும் எனில் , அதனை அரசியல் நாகரிகத்துடன் தெரிவிக்க வேண்டும். எனது கருத்துக்களில் விமர்சனங்கள் இருந்தால் அவை தொடர்பில் பகிரங்க விவாதத்திற்கு வரலாம். பகிரங்க விவாதத்திற்கு நான் தயாராகவே உள்ளேன்.
அமைசரை போல அரசியல் நாகரிகம் இல்லாமல் தனிப்பட்ட முறையில் கூட என்னால் விமர்ச்சிக்க முடியும். மலையாக மக்களை பிரதிநிதித்துவப்படுத்தும் தலைவர்களில் ஒருவராக இருப்பதனால் அவரை விமர்சிப்பது மலையாக மக்களை புண்படுத்தும் என்பதனால் விமர்சிக்க வில்லை.
தொடர்ந்து என்னை சீண்டினால் , அமைச்சரின் கடந்த காலங்களை நான் தூசு தட்டுவேன்.
அவர் தான் ஏறி வந்த ஏணியை தற்போது எட்டி உதைத்துள்ளார். அவரை எறிவருவதற்கு , ஏணிப்படிகளாக இருந்த பிரபாகணேசன் , குமரகுருபரன் , வேலணை வேணியன் ஆகியோர் தற்போது எங்கே ? அவர்களை எட்டி உதைத்து விட்டார்.
நடந்தது இனவழிப்பு தான் என சொல்வதற்கு அரசாங்கத்திற்கு அடிமையாக இருக்கும் அடிமை புத்தி சொல்ல விடாது தடுக்கலாம். ஆனால் , நாம் இனவழிப்பு நடந்தது என்பதனை ஆணித்தரமாக சொல்லுவோம்.
மலையாக மக்களின் வாக்குரிமை பறிக்கப்பட்டது கூட இனவழிப்பின் ஓர் அங்கம் தான் என்பதனை அமைச்சர் அறிந்து கொள்ள வேண்டும். என தெரிவித்தார்.
Print Friendly, PDF & Email