SHARE

முக்கிய ஆவணங்களை அழித்தமை அம்பலம்

பிரித்தானிய வெளிவிவகார அலுவலகம், இலங்கைப் பாதுகாப்புப் படையினருக்கு வழங்கிய உதவிகள் தொடர்பான விவரங்கள் அடங்கிய சுமார் 200  ஆவணங்களை (கோப்புகள்) அழித்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
விடுதலைப் புலிகள் அமைப்பு கட்டியெழுப்பப்பட்ட காலப்பகுதியில், அவர்களைக் கட்டுப்படுத்துவதற்கு, பிரித்தானியாவின் எம்.ஐ 5 (இராணுவ புலனாய்வு பிரிவு – 5) மற்றும்  எஸ்.ஏ.எஸ் (விசேட வான் சேவை) ஆகிய அமைப்புகள், நிபுணத்துவ ஆலோசனைகளை வழங்குவற்காக இலங்கைக்கு அனுப்பப்பட்டமை உள்ளிட்ட தகவல்கள் குறித்த கோப்புகளில் காணப்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளன.
‘தி கார்டியன்’ ஊடகம் இந்த தகவலை வெளியிட்டுள்ளது.
இந்த ஆவணங்கள் அழிக்கப்பட்டதால், இலங்கையில் நடைபெற்ற மிகக்கொடூரமான யுத்தத்தின் ஆரம்ப காலத்தில் பிரித்தானிய, இலங்கை அதிகாரிகளுடன் இணைந்து பணியாற்றியமை தொடர்பான எந்தவொரு பதிவுகளும் இல்லாமல் போயுள்ளதாக சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.
பிரித்தானிய பொது ஆவணங்கள் சட்டத்தின்படி அரச திணைக்களங்கள், வரலாற்று ஆவணங்களைப் பாதுகாக்க வேண்டிய பொறுப்பைக் கொண்டுள்ளபோதிலும், இந்த ஆவணங்கள் பாதுகாக்கத் தேவையற்றவை என பிரித்தானிய வெளிவிவகார அலுவலகம் தெரிவித்துள்ளது.
இலங்கைத் தொடர்பிலான 195 கோப்புகள் அழிக்கப்பட்டதை உறுதிப்படுத்தியுள்ள பிரித்தானிய வெளிவிவகார அலுவலகம், குறித்த கோப்புகள் 1978க்கும் 1980க்கும் இடைப்பட்ட காலப்பகுதியில், அதாவது இலங்கை பிரித்தானியாவிடமிருந்து சுதந்திரம் பெற்று மூன்று தசாப்தங்களின் பின்னரான காலப்பகுதிக்குரியது எனவும் குறிப்பிட்டுள்ளது.
எனினும் அந்த கோப்புகள் எங்கு? யாரால்? எப்படி அழிக்கப்பட்டன என்பது தொடர்பிலான தகவல்களை வெளியிடவில்லை.
Print Friendly, PDF & Email