SHARE

-வடக்கு முதல்வர் நம்பிக்கை

எமக்குரிய சுயாட்சி உரிமையை சிங்களத் தலைமைகள் தாமாகவே கையளிக்கும் சந்தர்ப்பம் ஏற்படும் என்பதில் நாங்கள் திடமான நம்பிக்கை வைக்க வேண்டும் என வட மாகாண முதலமைச்சர் சீ.வி.விக்னேஸ்வரன் தெரிவித்துள்ளார்.
மேலும் உலக குத்துச்சண்டை ஜம்பவான் முகமட் அலி களத்தில் சண்டை போடும் கதையை சொல்லி, அவரிடமிருந்து தற்போது நாம் பாடம் கற்றுக்கொள்ள வேண்டும் என்றார்.
யாழ் நூலக கேட்போர் கூடத்தில் இன்று நடைபெற்ற தமிழ் மக்கள் பேரவையின் விசேட கூட்டத்தின் இணைத்தலைவர் உரையிலேயே இவ்வாறு தெரிவித்தார்.
அங்கு அவர் ஆற்றிய உரையிலிருந்து சில பின்வருமாறு,
தமிழ் மக்கள் பேரவை தனது பணிகளை விரிவடையச் செய்ய வேண்டிய காலம் தற்போது கனிந்துள்ளது. இவ்வாறான விரிவுபடுத்தலுக்கு எமக்கு உறுதுணையாக இருக்கப் போவது எமது இளைஞர் யுவதிகளே! இன்று வடகிழக்கு மாகாணங்களில் வலுப்படுத்த வேண்டிய ஒரு சமூக அலகாக வலம் வருவது இளைஞர் யுவதிகளே!
“வலுப்படுத்த வேண்டிய” என்று கூறும் போது உடல் ரீதியாக என்பது அர்த்தமில்லை. ஆத்மீக ரீதியாக கொள்கை ரீதியாக, அவர்கள் வலுப்பெற வேண்டிய ஒரு கால கட்டம் ஜனித்துள்ளது.
இன்றைய இளைஞர் குழாம் பல விதங்களில் முன்னைய காலத்தில் வாழ்ந்த எம்மவர்களில் இருந்து வித்தியாசமானவர்கள். நாம் வயதுக்கும் முதுமைக்கும் மதிப்புக்கொடுத்தோம். இன்று அப்படியில்லை. இன்றைய பிள்ளைகள் உலக விடயங்கள் பலதையும் பத்துப் பதினைந்து வயதுக்கு முன்னரே அறிந்து கொள்கின்றார்கள். உலக ஞானம் அவர்களுக்கு நிரம்பவும் உண்டு.
தமிழ் மக்கள் பேரவை இளைஞர் மகாநாடு ஒன்றினை நடத்த வேண்டும் என்று முடிவெடுத்தது. இவ்வாறான மகாநாடுகளில் நாங்கள் சில விடயங்களை வலியுறுத்த உள்ளோம். அரசியல் ரீதியாக நாங்கள் அவர்களுக்கு சில அடிப்படை விடயங்களை எடுத்துக் கூற வேண்டியுள்ளது.
சமூக ரீதியாகவும் சில விடயங்களை அவர்களுக்கு வலியுறுத்த விரும்புகின்றோம்.
எமக்கென சில உரித்துக்கள் உண்டென்று சர்வதேசச் சட்ட நூல்கள் கூறுகின்றன. இந்த நாட்டின் ஆதிக் குடியினரின் வழிவந்தவர்கள் என்பதால் தமிழர்களாகிய எமக்கு நாம் வாழும் இடங்களில் சுயாட்சி கோர சட்டப்படி உரித்து இருக்கின்றது. மேலும் எமக்கு எம்முடைய கலை, மொழி, கலாச்சாரம் போன்றவற்றை சுதந்திரமாகப் பாவித்து பாதுகாத்து வர உரித்துண்டு. நாம் பாரம்பரியமாக வாழ்ந்து வரும் நிலம் மேல் எமக்கு உரித்துண்டு. நிலங்களின் வளங்களை எடுத்துப் பாவிக்க உரித்துண்டு. நாம் இந்நாட்டின் மூத்த குடிகள் என்ற முறையில் எமக்கு சில உரிமைகள் உரித்துக்கள் உண்டு என்பதை இதுகாறும் மறந்துவிட்டோம்.
பாரம்பரிய மூத்த குடிகள் பற்றிய உரித்துக்களை உள்ளடக்கியுள்ள ஐக்கிய நாடுகள் விளம்பல் ஆவணத்தில் அவை இடம் பெற்றுள்ளன. 46 ஷரத்துக்களைக் கொண்ட அதில் பல உரித்துக்கள் உள்ளடக்கப்பட்டுள்ளன. இவற்றைப் பரிசீலனை செய்தல் நன்மை பயக்கும்.
இன்று எம்மிடையே ஒரு வித பலவீனம் உருவாகியுள்ளது. இது இளைஞர் யுவதிகளிடமும் காணப்படுகின்றது. ஆயுதங்கள் மௌனிக்கப்பட்டதும் நாம் தோற்றுவிட்டோம் என்ற ஒரு மனோ நிலை எங்கள் மனதில் குடிகொள்ளத் தொடங்கியுள்ளது. எமது எதிர்பார்ப்புக்களை நடைமுறைப்படுத்த இனி யார் வரப் போகின்றார் என்ற ஒரு நம்பிக்கை அற்ற நிலை எட்டிப் பார்க்கத் தொடங்கியுள்ளது. இதனை மாற்றி எம் இளைஞர் யுவதிகள் மனதில் வலுவேற்றுவது எமது பொறுப்பு.
உலக அதி கூடிய எடைக்குரிய குத்துச் சண்டை வெற்றி வீரனாக ஒரு காலத்தில் வலம் வந்த மொகமட் அலி குத்துச் சண்டை அரங்கினுள் நடந்து கொள்ளும் விதத்தைப் பார்த்திருக்கின்றீர்களோ எனக்குத் தெரியாது. வலையத்தளங்களில் இப்போதும் பார்க்கலாம். அரங்கினுள் நடனமாடுவது போல் அங்கும் இங்குமாக வலம் வருவார். அவர் தன்முகத்துக்கு எதிரியின் எந்த ஒரு குத்தும் படாமல் பார்த்துக் கொள்வார். எதிரியின் குத்துக்கள் பலமாக இருந்தால் தன் கைகளுக்குள் எதிரியின் தலையைப் பிடித்து தொடர்ந்து அவர் குத்த முடியாமல் ஆக்கிவிடுவார். மத்தியஸ்தர் அப்போது இருவரையும் பிரித்து விடுவார். இவ்வாறே நடனமாடி சுற்றுக்களை ஒவ்வொன்றாக முடித்துக் கொண்டு எதிரியைப் பலம் இழக்கச் செய்வார்.
அதாவது பலம் கொண்ட மட்டில் எதிரி குத்த எத்தனித்து எத்தனித்து அவை வீண்போகவே தனது பலத்தை மெல்ல மெல்ல அவர் இழக்கத் தொடங்கிவிடுவார். முகமட் அலி நடனமாடிக் கொண்டு அவரிடம் இருந்து தப்பிப் போய் கொண்டிருப்பார். திடீரென்று ஒரு சுற்றில் அலியின் குத்துக்கள் எதிரியின் மீது சரமாரியாகப் பொழிய அவர் சுருண்டு நிலத்தில் விழுந்து விடுவார். அலி வெற்றிவாகை சூடுவார்.
இதனை எதற்காக இங்கு கூறினேன் என்று நினைப்பீர்கள். காரணம் இருக்கின்றது. எமக்கு உரித்துக்களைத் தரமறுக்கும் சிங்கள அரசியல் தலைமைத்துவம் தற்போது வலுக்குறைந்து வருகின்றது. அரசியல் பிரச்சனைகள், பொருளாதாரப் பிரச்சினைகள், கடன் சுமைகள், சர்வதேசத்தில் கடுமையான சாடல்களுக்கு உள்ளாகி வருவது இவ்வாறான பல இடர்களைச் சந்தித்து வருகின்றது சிங்களத் தலைமைத்துவம். சர்வதேசத்திற்குக் கொடுத்த வாக்குறுதிகளை இயற்றாமல் இருந்து மேலும் மேலும் தவணை கேட்பது அரசாங்கத்தின்மேல் உலக நாடுகளுக்கு இருக்கும் மதிப்பைக் குறைத்துக் கொண்டு வருகின்றது. இந்த நேரத்தில் நாங்கள் மொகமட் அலியிடம் இருந்து பாடம் படித்துக் கொள்ள வேண்டும்.
அதாவது இத்தருணத்தில்த்தான் தமிழ் மக்கள் ஒன்றுபட்டு எமக்கு நேர்ந்த, நேர்ந்துகொண்டிருக்கும் இடர்களைப் பற்றி எல்லாம் உலகறியச் செய்ய வேண்டும். சுயாட்சியை வழங்க அவர்களே முன்வர வேண்டும். ஒரு கட்டத்தில் தமது தேவையின் நிமித்தம் எமக்குரிய சுயாட்சி உரிமையை அவர்கள் கையளிக்கும் சந்தர்ப்பம் ஏற்படும் என்பதில் நாங்கள் திடமான நம்பிக்கை வைக்க வேண்டும்.
நம்பிக்கை ஒளி மலரத் தொடங்கினால் இளைஞர்கள், யுவதிகள் ஏன் நாம் எல்லோருமே புதுத்தென்பு பெறத் தொடங்கி விடுவோம். ஆகவே இளைஞர் யுவதிகளின் மனதில் புதுத் தென்பை உண்டாக்க எமது தமிழ் மக்கள் பேரவை பிரயத்தனங்களில் ஈடுபட வேண்டும். எமது தன்னம்பிக்கையே எமது நிலையான சொத்து என கூறினார்.
Print Friendly, PDF & Email