SHARE

இந்துக்களுக்கும் பௌத்தர்களுக்கும் சொந்தமான இந்த பூமியின் மரபுகளை மதிக்க தெரியாதவர்கள் இந்த நாட்டை விட்டு வெளியேறுங்கள் என்று சிவசேனை அமைப்பின் தலைவர் மறவன்புலவு சச்சிதானந்தம் தெரிவித்தார்.

பசுவதைக்கு எதிராகவும் சாவகச்சேரி கொல்களத்தை மூடுமாறு கோரி சாவகச்சேரியில் இன்றைய தினம் நடைபெற்ற அடையாள உணவு ஒறுப்புப் போராட்டத்தில் ஈடுபட்டிருந்த போது ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும் போதே அவர் இவ்வாறு தெரிவித்தார்.

அவர் மேலும் தெரிவித்ததாவது:

ஐயாயிரம் , ஆறாயிரம் ஆண்டுகளாக நாம் காத்து வரும் மரபு எருதாக இருந்தாலும் சரி , பசுக்களாக இருந்தாலும் சரி அவற்றை நாம் பேணுவதும் பாதுகாப்பதும் எம் முன்னோர்கள் செய்து வந்திருக்கின்றார்கள்.

தற்போது ஏன் மாட்டு இறைச்சி கடை கொல்களங்கள் இங்கு வந்துள்ளது. 1990ஆம் ஆண்டுகளுக்கு முற்பட்ட கால பகுதியில் அவைகள் இங்கு இருக்கவில்லை. 2007ஆம் ஆண்டுகளின் பின்னரே அவை இங்கே வந்தன.

இதை யார் கொண்டு வந்தார்கள் ? இங்கு முன்னோர்கள் இருந்தவர்களா? இல்லை நேற்று இங்கு வந்தவர்கள். அவர்கள் தாம் இங்கு வர முதல் எங்கு இருந்தார்களோ அங்கு எந்த மிருகத்தை மதிக்கின்றார்களோ அந்த மிருகங்களை அவர்கள் ஒரு போதும் கொல்ல மாட்டார்கள். சவூதியில் இந்துக்கள் வாழுகின்றார்கள். அவர்கள் அங்கே பன்றி இறைச்சி சாப்பிட முடியுமா ?

ஒல்லாந்தர்கள் மாட்டிறைச்சி கேட்ட போது கொடுக்க மாட்டேன் என ஞானப்பிரகாசர் இங்கிருந்து சிதம்பரத்துக்கு போனவர். ஆறுமுக நாவலர் மாட்டிறைச்சி சாப்பிட வேண்டாம் என வலியுறுத்தியவர்.

இது இந்து பூமி அல்லது பௌத்த பூமி வேறு எவருக்கும் இந்த பூமி சொந்தமானது அல்ல. இதை நாங்கள் தெளிவாக சொல்கின்றோம். இங்கே வந்தால் எங்கள் பூமியின் மரபுகளை பேணி நடவுங்கள். இல்லையெனில் நீங்கள் உங்கள் நாடுகளுக்கே திரும்பி விடுங்கள்.

எங்கள் மரபுகளை மதிக்க முடியவில்லை எனில் உங்கள் நாடுகளுக்கு சென்று விடுங்கள். இந்த மண் பசுக்களை பாதுகாத்த பெருமை மிக்க மண். இந்த மண்ணிலே பசுக்களின் இரத்தத்தை சிந்தவிட முடியாது.

எத்தனை பசுக்களை , நாம்பன் மாடுகளை கொன்று குவித்துள்ளீர்கள். கடந்த வாரம் 300 மாடுகள் வெட்டப்பட்டன. சாவகச்சேரியில் யார் மாடு சாப்பிடுகின்றார்கள். 12 இஸ்லாமிய குடும்பங்கள் 100க்கு சற்று அதிகமான கிறிஸ்தவ குடும்பங்கள் 70 ஆயிரம் மக்கள் சைவ மக்கள் அவர்களில் எத்தனை பேர் மாடு சாப்பிடுகின்றார்கள்.

எனவே எங்கள் நாட்டில் மாடுகளை வெட்டுவதனை அனுமதிக்க முடியாது. விரும்பின் உங்கள் நாடுகளுக்கு சென்று அங்கே மாடுகளை வெட்டுங்கள் – என்றார்.

Print Friendly, PDF & Email